மெட்ரோ ரயில் நிலையங்களில் மினிபஸ்.. தொடங்கி வைத்த முதலமைச்சர்.. எந்தெந்த வழித்தடத்தில்?
சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களை எளிதில் அடைவதற்காக மினி பேருந்துகள் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலமாக 6 வழித்தடத்தில் அதாவது 12 பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
மேலும் ராணுவத்தில் உயிர்நீத்த தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மெட்ரோவில் நிம்மதி பயணம்
சுமார் ஒன்றரை கோடி மக்கள் வசிக்கும் சென்னையில் தொடங்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் சேவையால் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயனடைகின்றனர். இதுநாள் வரை பேருந்திலும், புறநகர் ரயில்களிலும் நெரிசலில் சிக்கி பயணம் செய்து வந்தவர்கள் தற்போது ஏசி வசதி உள்ள மெட்ரோ ரயிலில் நிம்மதியாக பயணம் செய்கின்றனர். அது மட்டுமின்றி தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் எந்தவித போக்குவரத்து நெரிசல் பிரச்சனையும் இல்லாமல் சென்றுவிடுகின்றனர்.

3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை
தற்போது விம்கோ நகரில் இருந்து அண்ணா சாலை வழியாக விமான நிலையம் வரை ஒரு வழித்தடத்திலும், சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் வரை மற்றும் சென்ட்ரல் முதல் கோயம்பேடு வழியாக செயின்ட் தாமஸ் மவுண்ட் வரை 2வது வழித்தடத்திலும் இயக்கப்பட்டு வருகிற்து. தற்போது மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி மாதவரம்-சிறுசேரி சிப்காட், மாதவரம்-சோழிங்கநல்லூர், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி என 119 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடத்தில் ரயில் நிலையங்கள் அமைய உள்ளன.

முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் காணொலி காட்சி மூலமாக சென்னையில் மினி பேருந்து சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் எல்லையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார். ராணுவ வீரர்களின் குடும்பத்தாரிடம் 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

மினி பஸ் எங்கு செல்லும்
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் - மடிப்பாக்கம் இடையே 2 பேருந்துகள் நாள்தோறும் 14+14 என 28 நடைகள் இயக்கப்படும். ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் - போரூர் இடையே 2 பேருந்துகள் நாள்தோறும் 14+14 என 28 நடைகள் இயக்கப்படும். விமான நிலையம் - குன்றத்தூர் இடையே 2 பேருந்துகள் நாள்தோறும் 10+10 என 20 நடைகள் இயக்கப்படும். திருவொற்றியூர் - மணலி இடையே 2 பேருந்துகள் நாள்தோறும் 12+12 என 24 நடைகள் இயக்கப்படும். கோயம்பேடு - மதுரவாயல் ஏரிக்கரை இடையே 2 பேருந்துகள் நாள்தோறும் 12+12 என 24 நடைகள் இயக்கப்படும். கோயம்பேடு - நொளம்பூர் சக்தி நகர் இடையே 2 பேருந்துகள் நாள்தோறும் 12+12 என 24 நடைகள் இயக்கப்படும்.
ஏற்கனவே மெட்ரோ ரயில் பயணிகள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று வருவதற்காக எலெக்ட்ரிக் கைப், சைக்கிள், ஷேர் ஆட்டோ, வாடகை கார் ஆகியன ரூ.10 கட்டணத்தில் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications