ஆடு, மாடுகளின் உயிரும் முக்கியம்... மீட்புப் பணிக்கு 1 லட்சம் பேர் தயார்... அமைச்சர் KKSSR தகவல்..!
சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
வரும் டிசம்பர் மாதம் இறுதிவரை பருவமழை இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் பேசி அவர்களை உஷார் படுத்தி வைத்திருப்பதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தெரிவித்தார்.

மேலும், மனிதர்கள் மட்டுமின்றி ஆடு, மாடுகள் என கால்நடைகளுக்கு கூட எந்த துயரமும் ஏற்படாத வண்ணம் மீட்பு பணிகள் இருக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தனக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும் அதற்கேற்றவாறு தாம் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியிருக்கிறார்.
மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளின் போது பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத்துறையினர் நிகழ்விடத்துக்கு செல்வதற்கு முன்பாகவே மீட்புப்பணிகளை தாமதமின்றி தொடங்குவதற்கு வசதியாக தமிழகம் முழுவதும் 1 லட்சம் தன்னார்வலர்களை மீட்புப் பணிகளுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறை சார்பில் தயார் படுத்தி வைத்திருப்பதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.
உதாரணத்துக்கு ஒரு ஊரில் கண்மாய் உடைகிறது என்றால், அரசு அதிகாரிகள் வரும் வரை காத்திருக்காமல் அதனை அடைப்பதற்கான முயற்சிகளை தன்னார்வலர்கள் மூலம் மேற்கொள்ளத்தக்க வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார்.
சென்னையை பொறுத்தவரை இந்தாண்டு மழை காரணமாக பெரியளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் திமுக அரசு அமைந்த பிறகு சென்னையின் பல்வேறு இடங்களில் தூர்வாரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தெரிவித்தார். கடந்த காலங்களில் மழையினால் பாதிக்கப்பட்ட இடங்களில் கூடுதல் கண்காணிப்பு செய்யப்படுவதாகவும் இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் அமைச்சர் தைரியம் அளித்திருக்கிறார்.
வானிலை அறிக்கையை அடிப்படையாக கொண்டு மீனவர்களுக்கும் பாதுகாப்பு அறுவுறுத்தல் கொடுக்கப்படுவதாகவும் இந்தாண்டு மீட்பு பணியில் கடலோர காவல்படையும் ஈடுபடும் எனவும் அவர் கூறியிருக்கிறார். ஏரி, அணைகளில், தண்ணீர் திறக்கப்படும் விவகாரத்தில் மிகுந்த கவனத்துடன் அரசு செயல்பட்டு வருவதாகவும் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இதனை கையாள முதலமைச்சர் ஸ்டாலின் தங்களிடம் அறிவுறுத்தியிருப்பதாகவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications