#Exclusive செம உற்சாகத்தில் ஓபிஎஸ்.. ராமநாதபுரத்தில் நடந்தது இதுதான்.. புட்டுப் புட்டு வைத்த புள்ளி!
சென்னை: ராமநாதபுரம் தொகுதியில் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் இரண்டாவது வாக்குப்பெட்டியை நோக்கித்தான் சென்றார்கள். எனவே ஓபிஎஸ்ஸுக்க்கு அதிக வாக்குகள் சென்றிருக்க்கூடும் என மூத்த பத்திரிகையாளர் துரை கருணா கூறியுள்ளார்.
பாஜக கூட்டணி சார்பில் ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பலாப்பழம் சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். அதிமுக தொண்டர்கள் தனது பக்கம் இருப்பதாக கூறி வரும் ஓபிஎஸ், அதை நிரூபிப்பதற்காக ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார்.

ஓ. பன்னீர்செல்வம் என்ற பெயரில் ஆறு சுயேட்சை வேட்பாளர்கள் ராமநாதபுரத்தில் போட்டியிட்டனர். முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே, அதிமுக தரப்பு, அதே பெயரில் பலரை களமிறக்கி உள்ளதாக கூறப்பட்டது. ஓபிஎஸ் உடன் வரிசையாக மற்ற ஓ.பன்னீர்செல்வங்களின் சின்னங்களும் வாக்குப் பெட்டியில் இடம்பெற்றிருந்தன.
பத்திரிகையாளர் துரை கருணா பேட்டி: இந்நிலையில், தேர்தல் முடிந்த பிறகும் ராமநாதபுரம் தொகுதியை விட்டு அகலாமல் ஓபிஎஸ் அங்கேயே இருந்து வருகிறார். குருபெயர்ச்சி அன்று கூட ராமநாதபுரத்தில் உள்ள கோவில்களுக்குச் சென்றுள்ளார். ராமநாதபுரத்திலேயே ஓபிஎஸ் தங்கி இருப்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் துரை கருணா பேசியுள்ளார்.
நமது ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ள மூத்த பத்திரிகையாளர் துரை கருணா கூறுகையில், "ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் வெற்றி உறுதி என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். ஓபிஎஸ்ஸுக்கு தெய்வ நம்பிக்கை அதிகம். எங்கு சென்றாலும், அப்பகுதி கோவில்களுக்குச் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார் ஓபிஎஸ்.
ராமநாதபுரத்தில் ஓபிஎஸ்: ராமநாதபுரம் தொகுதி மக்கள் தமக்கு அபரிமிதமான வாக்குகளை அளித்து தம்மை வெற்றி பெறச் செய்யப் போகிறார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு இருப்பதன் விளைவாகவே தொடர்ந்து ராமநாதபுரத்திற்கு சென்று வருகிறார். தனக்காக களப்பணி ஆற்றிய நபர்களைச் சந்தித்துப் பேசி வருகிறார்.
ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் தனக்கு 100 சதவீத வெற்றி உறுதி என்ற நம்பிக்கையுடன் உள்ளார். மக்கள் மற்றும் கடவுளின் துணையுடன் தான் தான் அரசியல் களத்தில் இருந்து வருவதாக பலமுறை கூறி இருக்கிறார் ஓபிஎஸ்.
கட்சி பேதம் இல்லாமல்: தேர்தலுக்குப் பிறகு அப்பகுதி மக்களிடம் பேசும்போது ஒரு விஷயத்தைச் சொல்கிறார்கள். முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதியாகவே ஓபிஸ்ஸை பார்க்கிறார்கள். தேவர் சமூகத்தவரின் அடையாளமாக ஓபிஸ்ஸை பார்க்கிறோம். கட்சி ரீதியாக பின்னடைவைச் சந்தித்துள்ள ஓபிஎஸ், ராமநாதபுரத்திற்கு ஆதரவு தேடி வந்திருக்கிறார் என்ற அடிப்படையில் கட்சி பேதமற்று ஆதரவளித்ததாக பலரும் கூறினார்கள்.
2வது பெட்டியில்: ராமநாதபுரம் தொகுதியில் தேர்தல் அதிகாரியாக இருக்கும் ஒரு தலைமை ஆசிரியரிடம் எனது உறவினர் மூலமாக தொடர்பு கொண்டு பேசும்போது, பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் இரண்டாவது வாக்குப்பெட்டியை நோக்கித்தான் சென்றார்கள். அதில் தான் ஓபிஎஸ்ஸின் பலாப்பழம் சின்னம் இருந்தது. எனவே அவருக்கு அதிக வாக்குகள் சென்றிருக்க அதிக வாய்ப்பு எனக் கூறினார்.
கடந்த தேர்தலில் திமுகவின் ஒட்டுமொத்த வாக்குகளையும் நவாஸ் கனி பெற்றார். இந்த முறை உள்ளூர் பிரச்சனைகள் காரணமாகவும், திமுக முக்கிய நிர்வாகி உடனும் முரண்பட்டதால் பின்னடைவைச் சந்திப்பார் என திமுகவினரே கூறுகின்றனர்.
அதேபோல, அதிமுக வேட்பாளர் ஜெயப்பெருமாளுக்கு ஆதரவாக அமைச்சர்கள், நிர்வாகிகள் பெரிய அளவில் களப்பணி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனை அதிமுக வேட்பாளரே வேதனையுடன் தெரிவித்ததாகச் சொல்கிறார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications