'பாஜக கூட்டணியால் தோல்வி'-அது என் சொந்த கருத்து..அதிமுக நிலைப்பாடு இல்லை.. சிவி சண்முகம் அந்தர்பல்டி
சென்னை: தேர்தல் தோல்விக்கு பாஜக தான் காரணம் என்று கூறியது தனது சொந்தக் கருத்து என்றும் அது அதிமுகவின் அதிகாரப்பூர்வ கருத்து இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியால் 75 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இதில் அதிமுக மட்டும் 66 இடங்களில் வென்றிருந்தது.
இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிட்டது. இதில் மொத்தம் 20 இடங்களில் போட்டியிட்ட பாஜக நான்கு தொகுதிகளில் மட்டுமே வென்றது.

பாஜக காரணம்
இந்நிலையில், விழுப்புரத்தில் நேற்று அதிமுக மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி வி சண்முகம், பாஜக உடனான தோல்வியாலேயே சிறுபான்மையினரின் வாக்குகளை இழக்க நேரிட்டதாகவும் இதனால்தான் சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்தோம் எனக் கூறியிருந்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவரே இப்படிப் பேசியது பெரும் சர்ச்சையானது.

பாஜக பதிலடி
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் கே டி ராகவன் எனத் தனது ட்விட்டர் பக்கத்தில், '''உங்களால்தான்' என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு" என்று பதிவிட்டிருந்தார். இப்படி இரு தரப்பும் மாறி மாறி குற்றஞ்சாட்டி வந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. நேற்று மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், ஒபிஎஸ் மகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கக் கூடாது என்பதற்காகவே சி வி சண்முகம் அப்படிப் பேசியதாகவும் தகவல் பரவியது.

அதிமுக அறிக்கை
இந்த சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று, ''தேச நலன், தமிழ்நாட்டின் நலன் கருதி அதிமுக - பாஜக கூட்டணி தொடரும். இதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. பாஜக மீதும், மோடி மீதும் முழு நம்பிக்கை வைத்துள்ளோம்'' எனக் கூறியிருந்தார். மேலும், நேற்று மாலை இது தொடர்பாக ஒபிஎஸ்-இபிஎஸ் கூட்டாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தனர்.

சி வி சண்முகம் விளக்கம்
இந்நிலையில், தேர்தல் தோல்வி குறித்துத் தான் கூறியது அதிமுகவின் கருத்தில்லை என சி வி சண்முகம் விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "அதிமுகவின் தோல்வி குறித்து நான் கூறியது எனது சொந்தக் கருத்து. இது குறித்த அமைச்சர் ஜெயக்குமார் என்னிடம் கேட்ட போதும், அது எனது சொந்தக் கருத்து என்றே தெரிவித்தேன். நாங்கள் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசுவோம். ஆனால், கட்சி தலைமை எடுப்பது தான் இறுதி முடிவு. தோல்வி குறித்து பாஜக தரப்பிலும் காரணம் தெரிவித்துள்ளனர். அது அவர்களுடைய கருத்து" என்றார்.












Click it and Unblock the Notifications