இந்திய நாடா? இந்தியின் நாடா? மீண்டும் ஒரு மொழிப்போர் வெடிக்கும்! கொந்தளித்த நாம் தமிழர் சீமான்!
சென்னை : பல தேசிய இனங்கள் வாழும் இந்திய ஒன்றியத்தில் இந்தி எனும் ஒற்றை மொழியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முற்பட்டால், தமிழர் நிலத்தில் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக்குழு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவிடம் அளித்துள்ள 11வது அறிக்கையில் இந்தியைத் திணிக்கும் வகையிலான பரிந்துரைகள் இடம்பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
இந்தியாவிலுள்ள மாநிலங்களையும், ஒன்றியப் பிரதேசங்களையும் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தி, தேசிய இனங்கள் மீது இந்தி மொழியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் வகையில் பரிந்துரைகளை அளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இந்திய நாடா?
இது இந்திய நாடா? இந்தியின் நாடா? இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மட்டும்தான் இந்நாட்டுக்கு வரிசெலுத்துகிறார்களா? இல்லை! இந்திக்காரர்கள் மட்டும்தான் இந்நாட்டின் விடுதலைக்குப் பங்களிப்பு செலுத்தினார்களா? இல்லை! இந்திக்காரர்கள் மட்டும்தான் இந்நாட்டின் குடிமக்களா? எதற்கு இந்திக்கு மட்டும் இத்தகைய முக்கியத்துவம்? அரசியலமைப்பு அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளையும் தேசிய மொழிகளாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கச்சொல்லி உச்ச நீதிமன்றமே அறிவுறுத்தியுள்ள நிலையில், அதற்கு முற்றிலும் நேரெதிராக ஒற்றை மொழியை முன்னிறுத்தி, அதனைத் திணிக்க முற்படும் ஒன்றிய அரசின் செயல் மிகப்பெரும் சனநாயகப் படுகொலையாகும்.

நாம் தமிழர் சீமான்
பலதரப்பட்ட மொழிகள் பேசப்படும் இந்நாட்டின் பன்மைத்துவத்தைச் சிதைத்து, இந்தி எனும் ஒரே மொழியை இந்தியா முழுக்க நிறுவ முற்படுவது இந்நாடு ஏற்றிருக்கிற கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான கொடுஞ்செயல். ஆரிய மொழியான இந்தியைத் திணிப்பதன் மூலம், இந்தியாவை இந்து நாடாகக் கட்டமைக்கவும், உலகமயமாக்கலின் மூலம் வணிகச்சந்தையாக மாற்றி நிறுத்தப்பட்டிருக்கும் இந்திய ஒன்றியத்தில் அவ்வணிகம் செய்வதற்கு ஏதுவாக ஒரு பொதுமொழியை உருவாக்கவுமே இவ்வகை முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மொழி திணிப்பு
ஒரு மொழியைத் திணித்து மற்ற தேசிய இனங்களின் தாய்மொழியை அழிப்பதை எப்படி ஏற்பது? இந்திய நாடு என்பது பன்முகத்தன்மை கொண்ட பல தேசிய இனங்கள் இணைந்து வாழக்கூடிய ஒன்றியம். நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் அதை ஒருபோதும் மறந்துவிடாமல் மிக கவனமாக செயல்பட வேண்டும். மக்கள் சகித்துக்கொண்டு, பொறுத்துக்கொண்டு போகிறார்கள் என்பதற்காக ஒரே மதம், ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை என்று ஒவ்வொன்றாகத் திணிக்கின்ற கொடுங்கோன்மை நீண்டநாள் நிலைக்கப்போவதில்லை.

மீண்டுமொரு மொழிப்போர்
உலக வரலாற்றில் எங்கும் நடந்திராத அளவுக்கு மொழிக்காக அளப்பெரிய தியாகங்களையும், மகத்தான அர்ப்பணிப்புகளையும், உயிர் ஈகங்களையும் செய்த பெரும்பூமி தமிழகமாகும். அரை நூற்றாண்டுக்கு முன்பாகவே இந்தித் திணிப்பை எதிர்த்து போராடி, உயிர் தியாகம் செய்திட்ட தமிழின முன்னோர்களின் செங்குருதி இந்நிலமெங்கும் சிந்தப்பட்டிருக்கிறது. அந்நிலத்தில் அந்நிய மொழியின் ஆதிக்கத்தை ஒருபோதும் அனுமதியோம் என்பதே தமிழர்கள் உலகுக்கு உரைக்கும் பேரறிவிப்பாகும். பல தேசிய இனங்கள் வாழும் பெரும் நிலப்பரப்பான இந்திய ஒன்றியத்தை ஆளுகை செய்து வரும் பாஜக அரசு, தனது அதிகார வலிமையைக் கொண்டு நாடெங்கிலும் இந்தியைத் திணிக்க முற்பட்டால், இந்தியாவின் மற்ற மாநிலங்கள் அதனை ஏற்றுக் கொண்டாலும், அம்முடிவினை ஏற்றுக் கொண்டாடித் தீர்த்தாலும் தமிழ் மண் போர்க்கோலம் பூண்டு, வன்மையான எதிர்ப்பினை வெளிப்படுத்தும்; தமிழர் நிலத்தில் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும் என எச்சரிக்கிறேன்.

அதிகாரத்திலிருந்து ஆதிக்கம்
ஆகவே, இந்தியா ஒரே நாடாக இருக்க வேண்டுமென்றால், இந்நாட்டிலுள்ள தேசிய இனங்களின் மொழிகள் யாவும் அங்கீகரிக்கப்பட்டு, அவற்றிற்குரிய முன்னுரிமையும், முதன்மைத்துவமும் அளிக்கப்பட வேண்டும். மாறாக, இந்தி எனும் ஒரே மொழிதான் அதிகாரத்திலிருந்து ஆதிக்கம் செலுத்துமென்றால், இங்கு பல நாடுகள் பிறக்க நேரிடுவதை ஒருபோதும் தவிர்க்க இயலாது என உறுதிபடத் தெரிவிக்கிறேன். இத்தோடு, பாகிஸ்தான் நாடு செய்திட்ட மொழித்திணிப்பினால்தான் வங்காளதேசம் எனும் நாடு இந்தியாவின் துணையோடு பிறந்ததெனும் வரலாற்றுச்செய்தியை இச்சமயத்தில் நாட்டையாளும் ஆட்சியாளர்களுக்கு நினைவூட்டுகிறேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications