எல்லா கோட்டையும் அழிங்க..பாமக தலைமையில் பாஜக+பிற கட்சிகள்! அச்சாரம் போடும் அரசியல் நகர்வு! ட்விஸ்ட்!
சென்னை : நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை திமுக அதிமுக கூட்டணியே பிரதானமாக பேசப்பட்டு வரும் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி எந்த கூட்டணியில் சேரும் என்பதே பேசு பொருளாக இருக்கிறது. இந்த நிலையில் பாமக தலைமையில் பாஜக மற்றும் சில கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கான வியூகங்களை அக்கட்சியினர் தீவிரமாக முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழக அரசியல் களத்தில் தற்போது இருந்தே 2024 மக்களவை தேர்தல் குறித்தான யூகங்களும் பேச்சுவார்த்தைகளும் ரெக்கை கட்டி பறந்து வருகின்றன. யார் யாரோடு கூட்டணி என்று இப்போதே சில தகவல்களும் உலாவுகின்றன.
மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் பாஜகவை பொறுத்தவரை தமிழகத்தில் தனித்து களமிறங்க வாய்ப்பில்லை. மாநிலக் கட்சிகளுக்கு இணையாக கூட வாக்கு வங்கி இல்லாத அந்தக் கட்சி இதுவரை தனித்துப் போட்டியிட்டு சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்களில் பெரிய அளவிலான வெற்றி பெற்றதில்லை.

கூட்டணி முடிவுகள்
இதன் காரணமாக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து கடந்த சில தேர்தல்களை சந்தித்து இருக்கிறது. அதுவும் அந்த கட்சிக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இதனுடைய தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ,தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொமதேக, மமக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. அதிமுகவை பொருத்தவரை பாஜக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே சொல்லி கொள்ளும் படியாக இருக்கின்றன.

தெளிவான நிலைப்பாடு
அந்தக் கட்சிகள் மட்டுமல்லாது பாமக, தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி குறித்து தெளிவான நிலைப்பாடு இல்லாமல் தனித்து செயல்பட்டு வருகின்றன. இதனால் வரும் தேர்தலில் யார் யாருடன் கூட்டணி சேரப் போகிறார்கள் என்பது குறித்தான எதிர்பார்ப்புகள் அதிகரித்து இருக்கிறது. திமுக கூட்டணியை பொறுத்தவரை தற்போது இருக்கும் கட்சிகளே தொடர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் தான் இருப்போம் என மதிமுக தெளிவாக கூறிவிட்ட நிலையில் விசிக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது வரும் காலங்களில் தான் தெரிய வரும்.

புதிய கூட்டணி
அதே நேரத்தில் சிறுபான்மையினர் நலன் சமூகநீதி உள்ளிட்ட விவகாரங்களால் திமுக கூட்டணியில் அக்கட்சிகள் தொடரவே வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்ததில் இருந்து பல்வேறு யூகங்கள் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் அதிமுக கூட்டணியில் பாஜக வெளியேற்றப்பட்டால் விடுதலை சிறுத்தைகள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணையலாம் என கூறப்படுகிறது. அதிமுக பாஜக கூட்டணி உடைவது தமிழகத்திற்கு நல்லது என விசிக தலைவர் திருமாவளவன் பலமுறை வெளிப்படையாகவே பேசி இருக்கிறார் இதனால் புதிய கூட்டணிக்கு அச்சாரம் போடப்படுவதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

பாமக தலைமை
இந்த நிலையில் பிடி கொடுக்காமல் பேசி வருவதால் பாமக தலைமையில் புதிய கூட்டணி அமையலாம் என தற்போது புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி மூத்த நிர்வாகி ஒருவர்,"தமிழகத்தில் திமுகவை வீழ்த்த பெரிய கூட்டணி தேவை என பாஜக விரும்புகிறது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி விடாப்பிடியாக இருப்பதால் வலுவான கூட்டணிக்கு சில சிக்கல்கள் இருப்பதால் பாமக தலைமையில் புதிய கூட்டணி அமையலாம். ஏற்கனவே சட்டமன்றத் தேர்தலில் பாமக ஆட்சி அதற்காக நாடாளுமன்ற தேர்தலில் வியூகம் அமைக்கப்படும் என அன்புமணி ராமதாஸ் கூறி வருகிறார்.

என்ன காரணம்?
திமுக அதிமுக அல்லாத புதிய கூட்டணி என்ற முழக்கத்தோடு இந்த கூட்டணி அமைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பாஜக தற்போது ஓரளவு தமிழகத்தில் எழுச்சி பெற்று வரும் நிலையில் வட மாவட்டங்களில் மிக வலுவாக இருக்கும் பாமகவோடு கூட்டணி சேரும் போது பாஜக குறிப்பிடத் தகுந்த வெற்றியை பெற முடியும் என கருதுகிறது. மேலும் புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளோடும் பாமக நட்பு பாராட்டி வருவது புதிய கூட்டணிக்கு அச்சாரம். அதுமட்டுமல்லாமல் கொங்கு மண்டலத்தை சேர்ந்த தனியரசு உள்ளிட்ட அமைப்புகள் ஏற்கனவே அரசியல் களத்தில் குறிப்பிடத் தகுந்த வாக்கு சதவீதத்தை வைத்திருக்கும் தேமுதிக அமமுக உள்ளிட்ட திமுக அதிமுக எதிர்ப்பு நிலைப்பாடு கொண்ட கட்சிகளோடு கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சாத்தியமா?
மேலும் பாரிவேந்தரின் ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளையும் இந்த கூட்டணியில் கொண்டு வருவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரம் அடைந்து இருக்கின்றன. திமுக அதிமுக கூட்டணி ஆகியவற்றுக்கு மாற்றாக இந்தக் கூட்டணி அமைப்பதற்கான சாத்திய கூறுகள் அதிகம் என்கின்றனர் நம்மிடம் பேசிய பாமகவினர். வரும் தேர்தலில் இது எந்த அளவு சாத்தியம் என்பதை அரசியல் களம் தான் முடிவு செய்ய வேண்டும். இதனால் வரும் காலத்தில் இன்னும் பல மாற்றங்கள் நிகழலாம்.












Click it and Unblock the Notifications