அங்க ஆரம்பிச்சது ஓபிஎஸ் சரிவு.. கையை விட்டுப் போகும் அதிமுக.. ‘மறைமுக மெசேஜ்’ - இனி அவ்ளோதானா?
சென்னை : அதிமுக, ஓ.பன்னீர்செல்வம் வசமிருந்து நழுவிக் கொண்டிருப்பது தெள்ளத் தெளிவாகி வருகிறது. அதிமுக தலைமைக் கழகம் கைவிட்டுப் போனது தான் ஓபிஎஸ்ஸுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
பொதுக்குழுவைக் கூட்டி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து தூக்கிவிட்டு தனது ஆதரவாளர்களை பதவியில் நியமித்து வருகிறார்.
அதேபோல, ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு, புதிய நிர்வாகிகளை நியமித்து வருகின்றனர். ஓ.பன்னீர் செல்வம் ஒரு அணியாகவும், எடப்பாடி பழனிசாமி ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை, ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக அமைந்துள்ளது. இது எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்துக் கட்சி கூட்டம்
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி சென்னையில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கலந்து கொள்ள தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

அதிமுகவுக்கு அழைப்பு
அ.தி.மு.க. சார்பில் பங்கேற்க யாருக்கு அழைப்பிதழ் அனுப்பப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தேர்தல் ஆணையம் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கும் அணிதான் அங்கீகரிக்கப்பட்ட அ.தி.மு.கவாக கருதப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு கடிதம் அனுப்பி உள்ளது. ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமைக் கழக முகவரிக்கு தேர்தல் ஆணையம் சார்பில் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

ஈபிஎஸ் டீம் பங்கேற்பு
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி தொடர்பாக தேர்தல் ஆணையம் இந்த ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்துக்கு எடப்பாடி தரப்பை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அழைத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து பொள்ளாச்சி ஜெயராமன், இன்பதுரை ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோதல்
அதிமுகவில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வம் ஒரு அணியாகவும், எடப்பாடி பழனிசாமி ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். இருவருமே தங்கள் அணியில் புதிதாக நிர்வாகிகளை நியமித்து தாங்கள் தான் அதிமுக எனக் கூறி வருகின்றனர். ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை செல்லாது என அறிவிக்க கோரி ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

மறைமுக மெசேஜ்
மேலும், தேர்தல் ஆணையத்திலும் இரு தரப்பினரும் தங்கள் தரப்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். பொதுக்குழுவின் முடிவுகளை எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள நிலையில், பொதுக்குழு செல்லாது என்பதற்கான விளக்கத்தை ஓபிஎஸ் தரப்பு ஏற்கனவே தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் எடப்பாடி தரப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது ஓபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்சி அலுவலகம்
தேர்தல் ஆணையத்தின் கடிதம் கட்சியின் அதிகாரப்பூர்வ அலுவலகத்திற்கே அனுப்பப்படுவது வழக்கம். அதிமுக தலைமை அலுவலகம் எடப்பாடி பழனிசாமி தரப்பு வசம் உள்ளதால் அங்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனால், அவர்களே ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் சூழல் உள்ளது. கட்சி அலுவலகம் எடப்பாடி பழனிசாமி வசம் சென்றதால், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

காரணம் அதுதான்
கட்சி தலைமை அலுவலகத்திற்கு ஜூலை 11ஆம் தேதி ஓபிஎஸ் சென்றபோது ஏற்பட்ட மோதல் தான் சீல் வைக்க காரணமாக அமைந்தது. ஓபிஎஸ் ஒரு கணக்கு போட்டால், நீதிமன்றத்தில் முடிவு எதிராக வந்தது. ஓபிஎஸ் தரப்பினர் வந்ததால் ஏற்பட்ட மோதலையே காரணமாக வைத்து எடப்பாடி பழனிசாமி வசம் அலுவலக சாவியை ஒப்படைக்க உத்தரவிட்டது நீதிமன்றம். அலுவலகம் கை விட்டுச் சென்றதால் இப்போது தேர்தல் ஆணைய கடிதமும் எடப்பாடி தரப்புக்கே என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இனி அவ்வளவுதான்?
தேர்தல் ஆணையத்தில் இரு தரப்பும் முறையிட்டிருந்தாலும், இதுவரை ஆணையம் ஒரு முடிவும் எடுக்காத நிலையில், அனைத்துக் கட்சி கூட்டம் எடப்பாடி பழனிசாமி வசமுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டிருப்பதால் ஈபிஎஸ்ஸையே தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருப்பதாக கூறுகின்றனர் ஈபிஎஸ் ஆதரவாளர்கள். ஓபிஎஸ் தரப்புக்கு இந்தச் செய்தி ஷாக் கொடுத்திருக்கிறது.

ஓபிஎஸ் முறையீடு
இதையடுத்து உடடியாக ஓபிஎஸ் தரப்பு இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மீண்டும் முறையிட்டிருக்கிறது. தமிழக தேர்தல் ஆணையருக்கு ஓ.பன்னீர்செல்வம் இதுகுறித்து கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில் தங்கள் தரப்பில் இருந்து பங்கேற்க அழைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கோரியுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications