நான் நினைச்சிருந்தா திமுகவில் சேர்ந்து இந்நேரம் அமைச்சராகி இருக்கலாம்.. அதிர வைத்த ஓபிஎஸ்!
சென்னை: நான் நினைத்திருந்தால் திமுகவில் சேர்ந்து அமைச்சராகி இருக்கலாம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை கடந்த ஆண்டு பூதாகரமாக வெடித்த நிலையில், ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டு நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. ஓபிஎஸ், எடப்பாடி இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் மாறி மாறி முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராகத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமியின் வசம் என்பது உறுதியானது. தொடர்ந்து, கட்சி பொதுக்கூட்டங்கள், மாநாடு என நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

அதே சமயம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து அதிமுக கொடிகள், பெயர், லெட்டர் பேட், சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதையடுத்து அதிமுகவின் கொடிகள், பெயர், லெட்டர் பேட், சின்னம் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடைவிதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கரை வேட்டியை கட்டாமல் காவி வேட்டி அல்லது வேறு நிற பார்டர் வைத்த வேட்டிகளையே அணிந்து வருகிறார். மேலும் அவரது காரில் இருந்த அதிமுக கொடியும் அகற்றப்பட்டது. அவரது ஆதரவாளர்களின் காரிலும் அதிமுக கொடிகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், முன்பு அதிமுக பெயரில் ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு லெட்டர் பேடில் அறிக்கை விட்டு வந்த ஓபிஎஸ் தற்போது, தமிழ்நாடு அரசு முத்திரையுடன் முன்னாள் முதல்வர் என்ற பெயரிலேயே அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு எனும் பெயரில், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்தக் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள அசோகா ஹோட்டலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பலர் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்திலும் ஓபிஎஸ் காவி வேட்டி அணிந்து பங்கேற்றார்.
இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தற்போது இரண்டாம் தர்மயுத்தம் நடைபெற்று வருவதாகவும், கடந்த இரண்டு வருடங்களாக தொண்டர்கள் தூக்கமின்றி தவித்து வருகிறார்கள் என்றும், இந்த தர்ம யுத்தத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும், நீதிமன்றத்தில் உள்ள அதிமுக வழக்கின் தீர்ப்பு நமக்குச் சாதகமாகவே வரும் என்றும் நிர்வாகிகளுக்கு நம்பிக்கை ஊட்டியுள்ளார்.

மேலும் பேசியுள்ள ஓபிஎஸ், நான் தனிக்கட்சி தொடங்கப் போவதாக செய்திகளை பரப்பி வருகிறார்கள். அது போன்ற எண்ணம் எனக்கு எப்போதும் இல்லை. தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் தற்காலிகமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்கின்ற குழு தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. நிச்சயம் வழக்குகளில் வெற்றி பெற்று தொண்டர்களின் உரிமைகள் மீட்கப்படும். அதற்காகவே இந்தக் குழு.
நான் திமுகவில் சேர்ந்து விட்டதாக எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறார். அதிமுகவிலிருந்து விலகிச் சென்ற 9 பேர் தற்போது திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருக்கின்றனர். நான் நினைத்திருந்தால் அப்படி அமைச்சராக ஆகியிருக்க முடியும். ஆனால் என்றும் நான் ஜெயலலிதாவின் தொண்டன். ஜெயலலிதாவிடம் அரசியல் பாடம் படித்தவன் என ஓபிஎஸ் இந்தக் கூட்டத்தில் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications