'அச்சம் & தயக்கம்..' தமிழகத்தில் 37% கர்ப்பிணி பெண்களுக்கு மட்டுமே வேக்சின்.. என்ன ஆபத்து ஏற்படும்
சென்னை: கொரோனா 3ஆம் அலை குறித்த தகவல் வெளியாகி வரும் நிலையில், தயக்கம் காரணமாகத் தமிழ்நாட்டிலுள்ள கர்ப்பிணிப் பெண்களில் 37% பேர் மட்டுமே கொரோனா வேக்சின் போட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
உலகத்தில் எந்தவொரு நாட்டிலும் கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. தற்போதைய சூழலில் கொரோனா வேக்சின் மட்டுமே ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் முன்களப் பணியாளர்களுக்கு மட்டும் வேக்சின் பணிகள் தொடங்கப்பட்டன. அதன் பிறகு அது படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது.

கர்ப்பிணிகள்
அதேபோல கர்ப்பிணிப் பெண்களுக்கும் கொரோனா வேக்சின் வழங்கலாம் என மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தது. இருப்பினும் தயக்கம் காரணமாகக் கர்ப்பிணிப் பெண்கள் வேக்சின் செலுத்தப் பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை. தமிழ்நாட்டில் 7.08 லட்சம் கர்ப்பிணிப் பெண்கள் இருக்கும் நிலையில், கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை அவர்களில் வெறும் 2.58 லட்சம் கர்ப்பிணிகள் மட்டுமே வேக்சின் போட்டுள்ளனர் எனத் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அரியலூர் தான் டாப்
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 6981 கர்ப்பிணிகளுக்கு, அதாவது 100% பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. ஆனால், தலைநகர் சென்னையில் 42,310 கர்ப்பிணிகள் இருக்கும் நிலையில், அவர்களில் 24% அதாவது வெறும் 10,225 பேருக்கு மட்டும் வேக்சின் போடப்பட்டுள்ளது. அதேபோல 14 மாவட்டங்களில் 40% குறைவான நபர்களுக்கு மட்டுமே வேக்சின் போடப்பட்டுள்ளது. 3ஆம் அலை ஏற்படும்போது இது மோசமான விளைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

என்ன காரணம்
தடுப்பூசி அச்சம், போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. அதேபோல குடும்ப உறுப்பினர்களும் கர்ப்பிணிப் பெண்கள் வேக்சின் போடுவதை ஊக்குவிப்பதில்லை. ஆனால், மருத்துவ பரிசோதனைக்காகக் கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டியுள்ளதால் அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு எளிதாக ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் விரைவாக வேக்சின் போட்டுக் கொள்ளும்படி மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்,

ஏன் முக்கியம்
இது குறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், "பொதுவாகக் கர்ப்பிணிப் பெண்கள் பெரும்பாலும் வீடுகளிலேயே இருப்பதால் தங்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படாது என அதீதமாக நம்புகின்றனர். ஆனால், அவர்களை ஒன்றை மறந்துவிட்டார்கள். அதாவது மற்ற அனைத்து தரப்பினரையும்விட கர்ப்பிணிப் பெண்களே செக்-அப்களை மேற்கொள்ள மருத்துவமனைகளுக்கு அதிகம் செல்வார்கள். இதனால் அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால்தான் அவர்கள் முதலில் வேக்சின் எடுத்துக் கொள்ள வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். இதன் மூலம் தாயும் சேயும் பத்திரமாக இருக்க முடியும்" என்று அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு
மறுபுறம் கடந்த மே மாதம் தமிழ்நாட்டில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு மெல்லக் குறைந்து தற்போது கட்டுக்குள் வந்துவிட்டது. நேற்று மாநிலத்தில் 1668 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதேபோல நேற்று மாநிலத்தில் 34 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா நிலை தற்போது மெல்லச் சரியாகி வரும் நிலையில், அடுத்தகட்டமாக ஊரடங்கில் தளர்வுகளை அறிவிப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 23ஆம் தேதியுடன் முடியவுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications