சட்டசபையில் ஓபிஎஸ் பதவி தப்புமா.. சபாநாயகர் அப்பாவு சொன்னது என்ன தெரியுமா?
எதிர்கட்சித்துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம் கடிதத்தை தவிர மற்ற, வேறு எந்த கடிதமும் வரவில்லை என்று தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
சென்னை: எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் வழங்கிய கடிதம் பரிசீலனையில் உள்ளது என்று தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். ஓ.பன்னீர் செல்வம் கடிதம் கடிதம் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை பரிசீலனையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
Recommended Video
அதிமுகவின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கடந்த 11ஆம் தேதியன்று சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இதில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒற்றை தலைமை பிரச்னையால் பொதுக்குழுவுக்கு செல்லாத ஓ.பி.எஸ் அ.தி.மு.க தலைமை அலுவலகம் வந்து சென்றார். அப்போது ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது.
இந்தநிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து, ஓ.பி.எஸ் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோரும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

எம்எல்ஏ பதவி என்னவாகும்
இந்தநிலையில், ஓ.பி.எஸ், வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியனின் எம்.எல்.ஏ பதவி என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்ததுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி, எம்.எல்.ஏ பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரிவித்துள்ளார்.

தகுதி நீக்கம் செய்ய முடியாது
எம்.எல்.ஏ பதவிக்கு 1சதவிகிதம் கூட சிக்கல் இல்லை. அவர்கள் தனி பிரிவாக செயல்படுவார்கள். கட்சியிலிருந்து நீக்கிவிட்டதால், சபாநாயகரிடம் தகுதி நீக்கம் செய்ய கோர முடியாது. கொறடா உத்தரவும் செல்லாது. இவர்கள் வேறு கட்சியில் இணைந்தால், தகுதி நீக்கம் செய்ய கோரலாம். அதேநேரம், இவர்கள் தனித்து செயல்பட, தனி இருக்கை வழங்க சபாநாயகரிடம் கோரிக்கை வைக்கலாம் என்றும் தமிழ்மணி கூறியுள்ளார்.

எதிர்கட்சி துணைத்தலைவர் பதவி
தற்போதைய நிலையில், இ.பி.எஸ் தரப்பு தான் அ.தி.மு.க. எனவே பன்னீர்செல்வத்தின் எதிர்கட்சி துணை தலைவர் பதவி பறிக்கப்படலாம். ஆனால் எம்.எல்.ஏ பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சபாநாயருக்குஓ.பன்னீர் செல்வம் கடிதம்
இதனிடையே தமிழக சட்டசபை சபாநாயகருக்கு ஓ. பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் அதிமுக சட்டமன்ற குழுவை மாற்றி அமைக்கும்படி மனுக்கள் வந்தால் அவற்றை நிராகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதிமுக பொதுக்குழு தொடர்பாக நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று எழுதியுள்ளார்.

சபாநாயகர் அப்பாவு பேட்டி
இன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கிய கடிதம் பரிசீலனையில் உள்ளது. ஓபிஎஸ் கடிதம் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. சட்ட விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஓ.பன்னீர்செல்வம் கடிதத்தை தவிர மற்ற, வேறு எந்த கடிதமும் வரவில்லை.

நீட் மசோதாவிற்கு ஒப்புதல்
இன்னமும் ஆளுநரிடம் இருந்து நீட் மசோதாவுக்கு சரியான பதிலில்லை. குடியரசு தலைவருக்கு அனுப்பியிருக்கிறார் என நம்புகிறோம். சட்டமன்றத்தின் மரபுப்படி தீர்மானத்திற்கு உடனடி ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒப்புதல் அளிக்கவில்லையென்றால் மக்களை புறக்கணிக்கின்ற செயலாகத்தான் இதை கருதுகிறேன் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
