களைகட்டும் பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம்.. திண்டுக்கல் மாவட்டத்தில் ஜன. 27இல் உள்ளூர் விடுமுறை
சென்னை: வரும் 27ஆம் தேதி உலகப் புகழ் பெற்ற பழனி திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகப் பக்தர்களால் போற்றப்படும் பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் 17ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்காக அங்குக் கடந்த சில மாதங்களாகவே பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. பழனி கும்பாபிஷேகம் காரணமாகத் திண்டுக்கல் மாவட்டமே விழாக் கோலம் பூண்டுள்ளது.

பழனி முருகன் கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்திற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
வருகிற 26ஆம் தேதி படிப்பாதை சன்னதிகளுக்குக் கும்பாபிஷேகம் நடக்கும் நிலையில், அதுவரை பக்தர்களுக்கு எந்தவொரு கட்டுப்பாடும் இல்லை. இருப்பினும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளது.
அவர்களில் 2000 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் நிலையில், அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே பழனி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் 27ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஈடு செய்யும் வகையில் அடுத்த மாதம் 25ஆம் தேதி (பிப். 25) பணி நாளாகச் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை நாளில், அவசர அலுவல்களைக் கவனிக்க, மாவட்டத்தில் உள்ள கருவூலம் உள்ளிட்ட இடங்களில் தகுந்த ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.