செட்டில்மெண்ட், விடுதலை பத்திரம், பாகப்பிரிவினை, செட்டில்மெண்ட் ரத்து.. நவ 2 முதல் புதிய நடைமுறை
சென்னை: சட்டமன்ற அறிவிப்பின்படி குடும்ப ஏற்பாடு (சொத்து) தொடர்பான 4 முக்கிய ஆவணங்களின் (செட்டில்மெண்ட், விடுதலை பத்திரம், பாகப்பிரிவினை, செட்டில்மெண்ட் ரத்து) காகிதமற்ற இணையவழிப் பதிவு அடுத்த மாதம் 2-ந்தேதி முதல் கட்டாயமாக்க தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.
இதுதொடர்பாக வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறுகையில், 'எங்கிருந்தும் பதிவு செய்யும் முறை' திட்டத்தின் கீழ், கடந்த ஆகஸ்டு 17 முதல் மனைப்பிரிவு மற்றும் கட்டிடங்களின் (கட்டிட நிறுவனங்கள்) முதல் விற்பனை பத்திரங்களை இணையவழியில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக, சட்டமன்ற அறிவிப்பின்படி குடும்ப ஏற்பாடு (சொத்து) தொடர்பான 4 முக்கிய ஆவணங்களின் (செட்டில்மெண்ட், விடுதலை பத்திரம், பாகப்பிரிவினை, செட்டில்மெண்ட் ரத்து) காகிதமற்ற இணையவழிப் பதிவும் இப்போது கட்டாயமாக்கப்படுகிறது.

டிஜிட்டல் முறையில் நிறைவேற்றப்பட்ட ஆவணம், தேவையான ஆதரவு ஆவணங்களுடன் இணையவழிப்பதிவு வசதி மூலம் சார்பதிவாளருக்கு அனுப்பப்படும். பதிவுத்துறை இந்த ஆவணத்தை மின்னணு பணிப்பாய்வு மூலம் பரிசீலிக்கும்.
அதன் பிறகு அடையாள சரிபார்ப்பு, அங்கீகாரம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட பதிவு நடைமுறைகளை முடிப்பதற்காக தரப்பினர்கள் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் முன் ஆஜராவார்கள். பதிவு நடைமுறைகள் முடிந்ததும், பதிவு செய்யப்பட்ட ஆவணம் டிஜிட்டல் முறையில் பரிசீலிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களின் 'லாக்-இன்' முகவரிக்கு அனுப்பப்படும் மற்றும் 'ஸ்டார்' அமைப்பில் பாதுகாத்து வைக்கப்படும். இதன் மூலம், பதிவின் அடுத்த கட்டங்களில் காகிதத்தை சார்ந்திருக்கும் நிலை பெருமளவில் குறையும்.
நவம்பர் 2-ந்தேதி முதல் காகிதமற்ற பதிவு முறை
அதன்படி, வெளிப்படைத்தன்மை, பொதுமக்களின் வசதி மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதை உறுதிசெய்யவும், பதிவு நடைமுறையில் காகிதத்தைச் சார்ந்திருப்பதை படிப்படியாக குறைக்கவும் செட்டில்மெண்ட் ஆவணம், விடுதலை பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம், செட்டில்மெண்ட் ரத்து ஆவணம் ஆகியவற்றுக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 2-ந்தேதி முதல் காகிதமற்ற பதிவை கட்டாயமாக்க பதிவுத்துறைத்தலைவர் அரசிடம் கேட்டு இருந்தார்.
அதனை கவனமாக பரிசீலித்த அரசு, சட்டசபை அறிவிப்பை செயல்படுத்தும் வகையிலும், 'ஸ்டார் 3.0' திட்டத்தின் கீழ் 'எங்கும் பதிவு-இரண்டாம் கட்டம்' அமலாக்கத்தின் தொடர்ச்சியாகவும், பதிவுத்துறைத்தலைவரின் கோரிக்கையை ஏற்று, குடும்ப ஏற்பாடு கள் தொடர்பான செட்டில்மெண்ட் ஆவணங்கள், விடுதலைப்பத்திரங்கள், பாகப்பிரிவினை பத்திரங்கள் மற்றும் செட்டில்மெண்ட் ரத்து ஆவணங்களுக்கு அடுத்த மாதம் 2-ந்தேதி முதல் காகிதமற்ற பதிவை செயல்படுத்துவதற்கும், கட்டாயமாக்குவதற்கும் நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிடுகிறது." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காகிதமற்ற பதிவு முறையினால் நன்மைகள் என்ன
சம்பந்தப்பட்ட தரப்பினர்களே ஆவணத்தை உருவாக்க வழிவகுக்கும். இதனால் பதிவு நடைமுறையின்போது ஆவணங்களை நேரடியாக கையாளுவது குறையும். பதிவு செய்த பிறகு மீண்டும் மீண்டும் கையால் கையாளுதல், நகர்த்தடுதல், ஸ்கேன் செய்தல் மற்றும் பதிவு ஆவணங்களை பாதுகாத்தல் போன்றவற்றை குறைக்கும்.
இது ஆவணங்களை மின்னணு முறையில் பரிசீலிப்பதை எளிதாக்கும், பதிவு நடவடிக்கைகளின் வெளிப்படைத்தன்மையை உயர்த்தும், மேலும் முத்திரை, பங்கீடுகளுக்கு கையால் எண்களிடுதல் மற்றும் ஆவணங்களை ஸ்கேன் செய்வதை நீக்கும். பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை முறையான டிஜிட்டல் முறையில் பாதுகாக்கவும், மீண்டும் பெறவும் வழிவகுக்கும்.
பதிவு நடைமுறையின் பல்வேறு நிலைகளில் காகித பதிவேடுகளை பராமரித்தல் மற்றும் கையாளுதலின் தேவை குறையும். நிர்ணயிக்கப்பட்ட அங்கீகாரத்தேவைகளை தக்கவைத்துக்கொண்டே, இந்த நடைமுறை வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் வசதியை மேம்படுத்தும் என்பதால் பத்திரப்பதிவு செய்வோருக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும்.




Click it and Unblock the Notifications
