ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையத்திற்குள் செல்லாத அரசு பேருந்து! கொந்தளித்த பயணிகள்! வாக்குவாதம்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில், பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல் சென்ற அரசு பேருந்தை வழிமறித்துப் பயணிகள் கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது ஓட்டுநரும், நடத்துநரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குறை கூறிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. திருநெல்வேலி - திருச்செந்தூர் பிரதான சாலையில் ஸ்ரீவைகுண்டம் அமைந்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் மறுகரையில் ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையம் அமைந்துள்ளது.

இதனால், ஆற்றுப் பாலத்தைக் கடந்து ஊருக்குள் சென்று பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டுச் செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையத்தின் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, பேருந்துகள் உள்ளே சென்று வரும் நிலையில், சில பேருந்துகள் மட்டும் பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல், அதற்கு முன்புள்ள நான்கு முக்கு பகுதியில் திரும்பிச் செல்வதாகப் பயணிகள் தரப்பில் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன.
இதற்கிடையே, நேற்று அரசு பேருந்து ஒன்று ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல், நான்கு முக்கு பகுதியில் திரும்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்து அங்கிருந்த பயணிகள், பேருந்தை நிறுத்தி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பேருந்தை முறையாகப் பேருந்து நிலையத்திற்குள் இயக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அப்போது, பேருந்தை உள்ளே இயக்க வேண்டாம் என நடத்துநர்தான் கூறியதாக ஓட்டுநர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து நடத்துநரிடம் பயணிகள் கேள்வி எழுப்பியபோது, ஓட்டுநர்தான் பேருந்தை உள்ளே இயக்க மறுப்பதாக கூறியதாகத் தெரிகிறது. இதனால் ஓட்டுநரும், நடத்துநரும் ஒருவரை ஒருவர் மாறி மாறிக் குறை கூறியுள்ளனர்.
இதனை அங்கிருந்த பொதுமக்கள் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையத்திற்குள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தும் முறையாகச் சென்று, பயணிகளை ஏற்றி இறக்கிவிட்டுச் செல்ல போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.


Click it and Unblock the Notifications
