பெட்ரோல் குண்டு வீச்சு..அரிவாளால் வெட்டி அராஜகம் செய்த ரவுடிகள் கைது..சென்னை திகுதிகு
சென்னை: ஆலந்தூரில் நள்ளிரவில் 19 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் குண்டு வீசி, அரிவாளால் வெட்டி அராஜகம் செய்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போயினர். வெட்டு காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழ்நாட்டில் ரவுடிகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஆபரேசன் மின்னல் ரவுடி வேட்டையை அறிமுகம் செய்தார். இதன் மூலம் தமிழகம் முழுவதும் கடந்த 48 மணி நேரத்தில் 1,310 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைதானவர்களில் 221 ரவுடிகள் தலைமறைவு குற்றவாளிகளாக இருந்தவர்கள். 110 பேர் மீது பிடி ஆணைகள் நிலுவையில் இருந்தன.
கைதுசெய்யப்பட்டுள்ள பல ரவுடிகள் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மீதி உள்ள ரவுடிகளிடமிருந்து காவல் துறையினரால் நன்னடத்தை உறுதிமொழி பெறப்பட்டது. 331 ரவுடிகள் சிறையில் அடக்கப்பட்டு உள்ளனர். பிடிபட்டவர்களில் 979 ரவுடிகளிடம் நன்னடத்தை உறுதிமொழி பெறப்பட்டது என்றும், அவர்கள் அதை மீறினால் 6 மாதம் சிறையில் அடைக்கப்படுவர் என்றும் காவல்துறை தெரிவித்து உள்ளது.

சென்னையில் ரவுடிகள்
காவல்துறையினர் அறிவித்து 24 மணி நேரம் ஆவதற்கு முன்பாகவே சென்னை ஆலந்தூர் ஆபிரகாம் தெருவில் இன்று இரவு 9 மணியளவில் 20 பேர் கொண்ட கும்பல் கையில் பெட்ரோல் வெடிகுண்டு, கத்தி, உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சென்று தெருவில் நின்று கொண்டிருந்தவர்களை மிரட்டி உள்ளனர். பின்னர் அந்த தெருவில் கடைசியில் சித்தர் கோயில் சுற்றி புதர்மண்டிய காலி இடம் உள்ளது, அங்கு பெட்ரோல் வெடிகுண்டு வீசி பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

பொதுமக்கள் அச்சம்
இதனை கண்ட அப்பகுதி மக்கள் அலறி அடித்து ஓடினர். அப்போது இந்த கும்பல் நாங்கள் தான் இங்கு பெரிய ரவுடி என கத்திக் கொண்டே கையில் இருந்த கத்தியால் அந்த தெருவில் நின்று கொண்டு இருந்த நவீன்,31, ஷபீக்,22,அபுபக்கர்,19, ஆகிய மூன்று பேரை தலையில் வெட்டிவிட்டு, தெருவோரம் இருந்த இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, பிளாஸ்டிக் சேர் ஆகியவற்றை அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

பதற்றம்
இதனால் அச்சமடைந்த பெண்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்தில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். பதற்றமான சூழ்நிலை நிலவியதால் பதற்றத்தை தவிர்க்க பரங்கி மலை துணை ஆணையர், அடையார் துணை ஆணையர், மடிப்பாக்கம் உதவி ஆணையர், உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டனர்.

படுகாயம்
தலையில் வெட்டுக்காயத்துடன் மூவரையும் கிண்டி கத்திபாரா அருகில் உள்ள பாலாஜி மருத்துவமமையில் சிகிச்சைக்காக அனுமத்தித்தனர். இதில் நவீன் மற்றும் அபுபக்கர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஷபீக் மட்டும் மேல் சிகிச்சைக்காக இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சாலை மறியல்
இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷபீக்கின் மருத்துவ கட்டணம் 19500 ரூபாய் கட்டிய நிலையில் மேலும் மருந்து செலவாக 6500 ரூபாய் கட்ட வேண்டும் என கூறியதால் அவரது உறவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

போலீஸ் ஆய்வு
போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்தனர் பின்னர் கலைந்து சென்றனர். தப்பியோடிய நபர்கள் யார் என சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர் எதற்காக வந்தார்கள் எனவும் விசாரணை மேற்கொண்டனர்.முதற்கட்ட விசாரணையில் கிண்டியில் பிரபல ரவுடி ஆதம்பாக்கம் ரவுடி ராபின் என்பவரின் உறவினர் அனில் என்பவரை, அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி நாகூர் மீரான் என்பவரை ராபின் கடந்த ஆண்டு வெட்டிக் கொலை செய்தார் அதற்கு பழிதீர்க்கும் விதமாக அனிலை கிண்டியில் வைத்து கடத்திச் சென்று ராபின் எங்கு என கேட்டு அடித்து விட்டு மீண்டும் வீட்டினருகே வந்து விட்டு விட்டு சென்றனர்.

19 பேர் கைது
இதனையடுத்தே நாகூர் மீரான் எப்போதும் இருந்த இடம் தான் ஆபிரகாம் தெரு அதனால் அங்கு சென்று தங்கள் பலத்தை நிரூபிக்க மிரட்டியிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீசி வன்முறையில் ஈடுபட்ட ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்த சஞ்சய், அனில் தலைமையிலான 19 பேர் கொண்ட அந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். மடிப்பாக்கம் காவல் உதவி ஆணையாளர் தலைமையில் போலீசார் அதிரடி வேட்டை நடத்தி இந்த 19 பேரையும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications