இலங்கை அதிபரின் நிலைதான் வரும்.. பிரதமர் மோடி-சங்பரிவாரை எச்சரித்த திருமாவளவன், மம்தா கட்சி எம்எல்ஏ
சென்னை: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே விரட்டியடிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி, சங்பரிவார்களுக்கு இதேநிலை தான் ஏற்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி திருமாவளவன் மற்றும் மம்தா பானர்ஜியின் கட்சி எம்எல்ஏ எச்சரிக்கை செய்துள்ளனர்.
Recommended Video
கொரோனா பரவலை தொடர்ந்து இலங்கை கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. இதனால் இந்த ஆண்டு துவக்கம் முதல் இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர தொடங்கின.
இதையடுத்து பொதுமக்கள் தன்னெழுச்சியாக திரண்டு போராட்டத்தை முன்னெடுத்தனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சேவை ராஜினாமா செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

அதிபர் பதவியை விடாத கோத்தபய
இந்த போராட்டத்தை தொடர்ந்து இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. மேலும் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இருப்பினும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இதேபோல் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். இருப்பினும் கோத்தபய ராஜபக்சே மட்டும் ராஜினாமா செய்ய மறுத்து வந்தார். மேலும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார்.

ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா
இவர்களின் செயல்பாடுகளும் இலங்கை மக்களின் பிரச்சனைக்யை தீர்க்கும் வகையில் இல்லை. இதனால் நேற்று மீண்டும் இலங்கை மக்கள் சாதி, மத பாகுபாடு இன்றி நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து கொழும்பு நோக்கி வந்து அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். உயிருக்கு பயந்து கோத்தபய ராஜபக்சே தப்பியோடினார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் வீட்டுக்கும் தீவைக்கப்பட்டது. இந்த போராட்டம் இன்னும் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே தான் ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். கோத்தபய ராஜபக்சேவும் அதிபர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட மக்கள் தொடர்ந்து அங்கு அமர்ந்து நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்கின்றனர்.

திருமாவளவன் எச்சரிக்கை
இந்நிலையில் தான் இலங்கை நிலைமை கருத்தில் கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவரும் எம்பியுமான திருமாவளவன் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், ‛‛ ஒரே இனம், ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே தேசம் எனும் இனவாதம் இனவெறுப்பாகி, இனவெறுப்பு இனவெறியாகி, இனவெறி இனக்கொலையாகி, இனக்கொலை பாசிசமாகி பாசிசம் புறப்பட்ட புள்ளிக்கே பூகம்பமாக திரும்பி சிங்கள பெளத்த பேரினவாத பாசிஸ்டுகளை விரட்டியடிக்கிறது. சங்பரிவார்களுக்கும் இது ஒரு எச்சரிக்கை'' என குறிப்பிட்டுள்ளார்.

மம்தா கட்சி எம்எல்ஏ எச்சரிக்கை
இதேபோல், மம்தா பானர்ஜி கட்சியின் எம்எல்ஏவாக இட்ரிஸ் அலி இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ‛‛மத்திய பாஜக அரசு இந்தியாவில் பிரித்தாளும் கொள்கையை பின்பற்றி ஆட்சி செய்கிறது. நாளை கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் நிலையம் திறப்பு விழா நடைபெற உள்ள நிலையில் முதல்வராக உள்ள மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது கண்டிக்கத்தக்கது. இத்தகைய சூழல் தொடரும் பட்சத்தில் மேலும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு ஏற்பட்ட நிலை தான் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நேரிடும்'' என்றார்.

தொடரும் மோதல்
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு திரிணாமுல் காங்கிரஸ், மத்திய பாஜக அரசு இடையே சுமூகமான உறவு இல்லை. இந்நிலையில் தான் கொல்கத்தாவில் நாளை சீல்டா மெட்ரோ ரயில் நிலையம் புதிதாக திறக்கப்பட உள்ளது. மத்திய அமைச்சர் ஸ்மிருத இரானி மெட்ரோ ரயில் நிலையத்தை திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவுக்கு மாநில முதல்வராக உள்ள மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதற்கு முன்பும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தைமையில் விக்டோரிய நினைவு இடத்தில் நடந்த மீட்டிங்கிற்கு மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில் இட்ரிஸ் அலி இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications