சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான் பேச நினைப்பதெல்லாம் நீங்க கேட்க வேண்டும்.. இதுதான் மோடி ஸ்டைலா?

Google Oneindia Tamil News

சென்னை: குறுகிய காலத்தில் 2 முறை தமிழகம் வந்து சென்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இன்னொரு முறையும் வரவுள்ளார். ஆனால் வந்த 2 முறையும் அவர் தமிழகத்தின் உயிர் நாடி பிரச்சினைகளை எட்டிக் கூட பார்க்கவில்லை, தொட்டுக் கூட பேசவில்லை.

இரண்டு வார கால இடைவெளியில் இருமுறை தமிழகம் வந்து விட்டார் இந்தியப் பிரதமர் மோடி. தமிழகத்தில் எண்ணற்ற பிரச்சனைகள் நிலவும் இந்த தருணத்தில் தமிழகத்திற்கு வரும் மோடி தமிழகம் தலை நிமிர பல்வேறு திட்டங்களை தருவார் அல்லது குறைந்தபட்சம் தமிழகப் பிரச்சனைகள் தீர வழிகோலுவார் அதுவும் இல்லாத பட்சத்தில் வாக்குறுதிகளையாவது கொடுப்பார் என்று தமிழக மக்கள் பிரதமரின் வருகைக்காக வழி மேல் விழி வைத்து காத்திருந்தனர்.

தமிழக டெல்டா மாவட்டங்கள் கஜா புயலினால் பாதிக்கப்பட்டபோது இந்திய நாட்டின் பிரதமர் இது வேறு எதோ நாட்டில் நடந்த பேரிடர் போன்று அதற்கான எவ்வித எதிர்வினைகளும் செய்யாது இருந்தார். குறைந்த பட்சம் ஆறுதலாக டிவிட்டரில் கூட ஒரு வார்த்தை கூறவில்லை. இந்திய நாட்டின் பிரதமர் என்ற முறையில் அவரிடமிருந்து தமிழக மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் காலம் கடந்து இருமுறை தமிழகம் வந்தாலும் கஜா தாக்கிய இடங்களை சென்று பார்ப்பார் குறைந்த பட்சம் பாதிப்புகளை குறித்து நீங்கள் கவலைப் படாதீர்கள் நான் இருக்கிறேன் என்று ஆறுதல் வார்த்தைகளாவது கூறுவார் என்று எதிர்பார்த்தனர் ம்ஹூம் பிரதமரின் வாயிலிருந்து அப்படி எந்த வார்த்தைகளும் வரவே இல்லை.

வேதனையில் விவசாயிகள்

வேதனையில் விவசாயிகள்

விவசாயம் பொய்த்து போய் பல மாதங்களாகிவிட்டன விவசாயிகள் தினமும் கண்ணீரில் தவித்துக் கொண்டிருக்கிறான். இன்னும் சொல்லப் போனால் இந்திய தலைநகர் டெல்லியில் தமிழக விவசாயிகள் அம்மணமாக ஓடிக்கொண்டிருக்கிறான். அப்போது பிரதமர் அவர்களை டெல்லியில் சந்திக்க அனுமதி கேட்டபோது கொடுக்காதவர் நடிகையின் திருமணத்திற்கு சென்று வாழ்த்திக் கொண்டிருந்தார். சரி அப்போதுதான் தங்களை சந்திக்கவில்லை, தங்கள் பிரச்சனை குறித்து பேசவில்லை

பேசவில்லை பிரதமர்

பேசவில்லை பிரதமர்

தமிழகத்திற்கு வரும்போதாவது நமது பிரச்சனைகள் குறித்து நமது பிரதமர் பேசுவார் வாருங்கள் விவசாயத் தோழர்களே நாம் சந்திப்போம் பேசுவோம் என்று அப்பாவி விவசாயிகள் காத்திருந்தனர். ம்ஹூம் பிரதமரின் வாயிலிருந்து அப்படி எந்த வார்த்தைகளும் வரவே இல்லை. மேக்கேதாட்டு அணைப் பிரச்சனையில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது, காவிரி நீரில் இன்னமும் நீதி கிடைக்கவில்லை அதைப் பற்றி நமது பிரதமர் பேசுவார் நமக்கு நிம்மதி பிறக்கும் என்றெல்லாம் டெல்டா மாவட்ட விவசாயிகள் ஏக்கத்துடன் காத்திருந்தனர் ம்ஹூம் பிரதமரின் வாயிலிருந்து அப்படி எந்த வார்த்தைகளும் வரவே இல்லை

மீனவர்களின் பிரச்சினை

மீனவர்களின் பிரச்சினை

கடந்த 2014 தேர்தலின்போது நமது மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் 56" இன்ச் மார்பளவு கொண்ட தான் பிரதமராக வரும்போது தீர்த்து வைக்கப்படும் என்று கூறினார் பிரதமர் வேட்பாளர் மோடி. அவரே பிரதமரும் ஆனார். ஆனால் மீனவர்களின் பிரச்சனைகள் தான் தீரவே இல்லை. சரி இப்போதாவது நமது பிரச்சனைகளுக்கு நமது பிரதமர் ஒரு தீர்வு கூறுவார் என்று நம்பியிருந்தனர் மீனவர்கள் ம்ஹூம் பிரதமரின் வாயிலிருந்து அப்படி எந்த வார்த்தைகளும் வரவே இல்லை

7 தமிழருக்கு விடிவில்லை

7 தமிழருக்கு விடிவில்லை

ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஆகப்போகிறது 7 தமிழர்களின் சிறைவாழ்வு. இவர்களின் வாழ்க்கை இவ்வளவு நாட்களும் சட்டப் போராட்டங்கள், நீதிமன்ற காத்திருப்புகள் என்று கடந்துவிட்டது. இப்போது நீதிமன்றம் ஒரு தீர்வை கூறிவிட்டது ஆனால் பாஜகவை சேர்ந்த ஆளுநர் ஒருவரால் காலம் கடத்தப்படுகிறது. ஏழைத் தாய் ஒருவர் நீதிமன்ற நெடுவாயில்களிலும் அதிகார மையங்களிடமும் பெரும் போராட்டம் நடத்துகிறார். இவர்களுக்கு ஒரு தீர்வை ஏழைத்தாயின் மகன் கூறுவார் என்று காத்திருக்கிறது தமிழகம். ம்ஹூம் பிரதமரின் வாயிலிருந்து அப்படி எந்த வார்த்தைகளும் வரவே இல்லை

ஜிஎஸ்டி சோதனை

ஜிஎஸ்டி சோதனை

தங்களது நள்ளிரவு சாதனை என பாஜக கூறிக்கொள்ளும் ஜி எஸ் டி -யில் IGST மூலமாக தமிழகத்திற்கு மத்திய அரசு தரவேண்டிய நிலுவைத் தொகை 5400கோடிகள் என்றும் GST மூலமாக 450 கோடிகள் என்றும், பாஜக கூறியதால் தர்ம யுத்தம் துவங்கி, அவர்கள் கூறியதால் அணிகளை இணைத்தோம் என்று கூறிய தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் கூறினார். தமிழகத்தின் நிதி நிலை மோசமாவதற்கு இது ஒரு காரணம் என்று கூறியபின்னர் இதை உண்மைக்கு மாறானது என்றால் மறுத்தோ அல்லது உண்மை என்றால் இந்த நிதிகளை எல்லாம் மத்திய அரசு கடனில் தத்தளிக்கும் தமிழகத்திற்கு எப்போது தரும் என்ற பதிலை கேட்க ஆவலுடன் காத்திருந்தார்கள் தமிழக மக்கள். ம்ஹூம் பிரதமரின் வாயிலிருந்து அப்படி எந்த வார்த்தைகளும் வரவே இல்லை.

உதய் மின் திட்டம்

உதய் மின் திட்டம்

உதய் மின்திட்டம் - ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை மிகக் கடுமையாக எதிர்த்த ஒரு திட்டம். இந்த திட்டத்தில் அவர் இறந்ததுமே இணைந்து விட்டது அம்மாவின் அரசு. அப்படி இணைந்ததால் ஏற்பட்ட கடன் அதற்காக தமிழக அரசு செலுத்திக் கொண்டிருக்கும் வட்டி தொகை இவையெல்லாம் கூட தமிழக அரசின் நிதி நிலை சரிவுக்கு காரணம் என்றார் நிதியமைச்சரும் துணை முதலைமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம். இதற்கு மத்திய அரசு உதவி செய்யும் என்று நீண்ட எதிர்பார்ப்பில் காத்திருந்தது தமிழகம் ம்ஹூம் பிரதமரின் வாயிலிருந்து அப்படி எந்த வார்த்தைகளும் வரவே இல்லை

மாணவர்கள் பாதிப்பு

மாணவர்கள் பாதிப்பு

சர்வசிக்ஷான் அபியான் திட்டத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியான ரூ. 6 ஆயிரம் கோடிகளை கொடுக்காததால் 34 ஆயிரம் குழந்தைகள் கல்வியின்றி பாதிக்கப் பட்டுள்ளனர் என்று சட்டமன்றத்தில் முழங்கினார் நிதியமைச்சரும் துணை முதலமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம். இதை உண்மைக்கு மாறானது என்றால் மறுத்தோ அல்லது உண்மை என்றால் இந்த நிதியை எப்போது தருவார்கள் என்றோ நமது பிரதமர் அறிவிப்பார் என்று அந்த 34ஆயிரம் குழந்தைகளோடு கோடிக்கணக்கான இதயங்கள் காத்திருந்தது பிரதமரின் பதிலுக்காக. ம்ஹூம் பிரதமரின் வாயிலிருந்து அப்படி எந்த வார்த்தைகளும் வரவே இல்லை.

பாஜகவினருக்கும் ஏமாற்றமே

பாஜகவினருக்கும் ஏமாற்றமே

இதெல்லாம் பொதுமக்களின் சாதாரணமான, நியாயமான எதிர்பார்ப்பு. மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்று திருப்பூரில் திரும்பிய திசையெல்லாம் முழங்கிய பாஜக கட்சித் தொண்டர்கள் எதிர்பார்த்தார்களே நாம் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறோம். தமிழகத்தில் நம்மை ஏற்றுக் கொண்டு பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட சாலி யார் என்று தெரிந்து கொள்ள கட்சி தொண்டர்கள் காத்து காத்து பூத்திருந்தனரே. ம்ஹூம் அதுகுறித்துக் கூட ஒரு வார்த்தைக் கூட கூறவில்லையே பிரதமர்

மொத்தத்தில் நான் பேசுவதை மட்டுமே நீங்கள் கேட்க வேண்டும். நீங்கள் எதிர்பார்ப்பதை எல்லாம் நான் பேச முடியாது என்று புது பாணியை பிரதமர் கடைப்பிடிக்கிறாரோ என்னவோ.

English summary
PM who had come to TN did not spoke anything about TN’s problems
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X