‘சான்றோன் எனக் கேட்ட தந்தை’! தலைவரான மகன்.. மேடையில் கண்கலங்கிய தந்தை ராமதாஸ்! நெகிழ்ச்சி காட்சிகள்!
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டிருக்கும் அன்புமணியை, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கட்டித் தழுவி கண்ணீர் மல்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
Recommended Video
பாமகவின் சிறப்புக் பொதுக்குழுக் கூட்டம் ஜி.பி.என். பேலஸ் திருமண அரங்கில் சனிக்கிழமை காலை 11 மணியளவில் தொடங்கியது.
கூட்டத்துக்கு பாமக நிறுவனா் ராமதாஸ் தலைமை வகித்தார். தலைவா் ஜி.கே.மணி முன்னிலை வகித்துப் பேசினார். கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினா்கள், சிறப்பு விருந்தினா்கள் பங்கேற்றுள்ளனர்.

புதிய தலைவராக அன்புமணி
இந்தக் கூட்டத்தில் பாமக புதிய தலைவராக அன்புமணி ராமதாஸை முன்மொழிந்து பேசினார் தலைவர் ஜி.கே. மணி. இதையடுத்து அன்புமணி ராமதாஸ் பாமகவின் புதிய தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். பாமக தலைவராக ஜி.கே.மணி பொறுப்பேற்று 25 ஆண்டுகள் ஆகும் நிலையில், கட்சிக்கு புதுப்பொலிவு கொடுக்கும் பொருட்டு, பாமக இளைஞரணித் தலைவராக இருக்கும் அன்புமணி கட்சியின் தலைவராக பொதுக்குழுவில் ஒருமனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தொண்டர்கள் மகிழ்ச்சி
2004-2009-ஆம் ஆண்டு காலத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக அன்புமணி இருந்தாா். அப்போது, பொது இடங்களில் புகைபிடிக்கத் தடைச் சட்டம், 108 ஆம்புலன்ஸ் உள்பட பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தவர். வரும் மக்களவைத் தோ்தல், சட்டப்பேரவைத் தோ்தலை அன்புமணி தலைமையில் பாமக எதிர்கொள்ளவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

கண்களில் கண்ணீர்
மேடையில் பல பகுதிகளுக்கும் சென்று தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, அவர்களது ஆரவாரத்திற்கிடையே தலைவராக அன்புமணி தேர்வு செய்யப்பட்டார். பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும் தனது தந்தையுமான ராமதாஸின் கால்களில் விழுந்து வணங்கிய அன்புமணியை, கட்டியணைத்து கண்ணீர் மல்க வாழ்த்துக்களை தெரிவித்தார் ராமதாஸ்.

தந்தையாக பெருமை
அப்போது தந்தை மகன் என இருவருமே கண்களில் நீர்மல்க நின்றனர். தொடர்ந்து தனது தந்தைக்கு பொன்னாடை போர்த்தினார் அன்புமணி அப்போதும் ராமதாஸ் கண்களில் கண்ணீர் வழிந்தது. தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸின் தந்தையுமான ராமதாஸ் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்பார்கள். இந்தக் கூட்டத்திற்கு தாய் வரவில்லை ஆனால் தந்தையாக தான் வந்திருக்கிறேன், இது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியான தருணம்" என உருக்கமாக பேசினார்.












Click it and Unblock the Notifications