ஆன்லைன் ரம்மி தடை! போட்டி போடும் அரசியல் கட்சிகள்! ஆனால் ‘பாட்டாளிகள்’ என்ன சொல்றாங்க தெரியுமா?
சென்னை : ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட தடைச் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தாங்கள்தான் தடை பெற காரணம் எனக் கூறிவரும் நிலையில், அன்புமணி ராமதாஸ் பாமக தலைவர் ஆன பிறகு நடத்தப்பட்ட முதல் போராட்டமே ஆன்லைன் ரம்மி எதிர்ப்பு போராட்டம் தான் என்கின்றனர் பாமகவினர்.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பலரும் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆன்லைன் ரம்மியை ஒழிக்க தமிழக அரசு சார்பில் குழு அமைப்பட்டு, அந்த குழுவும் தமிழக அரசிடம் அறிக்கை அளித்தது.
அதிமுக, பாஜக, பாமக, உள்ளிட்ட கட்சிகள் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை ஒழிக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை இல்லாத நிலையில் தொடர்ந்து தற்கொலைகள் நடைபெற்று வருவதாக அக்கட்சிகள் குற்றம் சாட்டினர்.

ஆன்லைன் ரம்மி
கடந்த சில நாட்களுக்கு முன்தினம் கூட ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததற்காக இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் தனது சாவுக்கு காரணம் முழுக்க முழுக்க ஆன்லைன் ரம்மி தான் காரணம் எனவும் அவர் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டது.

அவசரச் சட்டம்
இந்த அவசரச் சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த ஒன்றாம் தேதியே ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து அக்டோபர் 17ஆம் நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்டமாக இயற்றப்படும் என தமிழக அரசு தகவல் கூறியிருக்கிறது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் கொண்டு வர யார் காரணம் என அரசியல் கட்சிகளிடையே கடும் விவாதம் எழுந்திருக்கிறது.
ஆன்லைன் ரம்மி தடை! போட்டி போடும் அரசியல் கட்சிகள்! ஆனால் 'பாட்டாளிகள்' என்ன சொல்றாங்க தெரியுமா?

பாமக அன்புமணி
ஆன்லைன் ரம்மி சூதாட்ட ஒழிப்பை பொறுத்தவரை மிகத் தீவிரமாக ஆரம்பத்தில் இருந்து போராட்டம் நடத்தி வந்தது பாமக. இது தொடர்பாக அக்கட்சியின் நிறுவன ராமதாஸ் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வந்தனர். குறிப்பாக அன்புமணி ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக பொறுப்பேற்றதற்கு பிறகு நடத்தப்பட்ட முதல் போராட்டமே ஆன்லைன் ரம்மிக்கு எதிரானது தான் அன்றுதான் ஆன்லைன் ரம்மி தொடர்பாக அறிக்கை அளிக்க குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது என்கின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியினர்.

யார் காரணம்?
அதே நேரத்தில் தமிழகத்தை பொறுத்தவரை பல்வேறு கட்சிகளும் ஆன்லைன் ரம்மி போராட்டத்தில் உறுதியாக இருந்திருக்கின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் கொண்டுவரப்பட்ட போதும் உயர் நீதிமன்றம் அதற்கு தடை விதித்தது. இதை அடுத்து தற்கொலைகள் அதிகரித்து நிலையில் அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர்களான ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஆன்லைன் ரம்மிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். இதே போல பாஜக விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் ஆன்லைன் ரம்மிக்காக குரல் கொடுத்து வந்த நிலையில் தற்போது தடை விதிக்கப்பட்டிருப்பது அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதோடு வரவேற்பையும் பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications