'பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை' - போலீசார் விளக்கம்.. என்ன நடந்தது?
சென்னை : கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மூத்த பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணன் விடுவிக்கப்பட்டார்.
சைபர் கிரைம் காவல்துறையினர் சென்னையில் இருந்து விசாரணைக்காக மூத்த பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணன் ஒலக்கூர் அழைத்துச் சென்றது.
ஒலக்கூரில் சுமார் 2 மணி நேர விசாரணைக்குப் பின்னர் சைபர் கிரைம் போலீசார் பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணன் விடுவித்துள்ளனர்.
மூத்த பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணன மீது வழக்குப் பதியவில்லை என்றும் விடுவித்து விட்டோம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி சம்பவம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி மரணம் அடைந்தது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக யூடியூப் சேனல்கள் பல்வேறு தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர். இது சிபிசிஐடி விசாரணையில் இடையூறு ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மாணவி மரணம் தொடர்பாக எந்த புலன் விசாரணையையும் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் வெளியிடக் கூடாது என போலீசார் அறிவித்திருந்தனர்.

மூத்த பத்திரிகையாளர் கைது
இந்த நிலையில், மூத்த பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணன், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில், மாணவி எழுதிய கடிதத்தில் உள்ள கையெழுத்து அவருடையது இல்லை என தடயவியல் துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளருமான சாவித்திரி கண்ணனை சைபர் கிரைம் போலீசார் இன்று கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

ஒலக்கூருக்கு அழைத்துச் சென்ற போலீசார்
சென்னை சாஸ்திரி நகரில் வசித்து வந்த மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் (57) வீட்டிற்கு சீருடை அணியாத போலீசார் சென்று, அவரிடமிருந்து செல்போனை பறித்ததாகக் கூறப்படுகிறது. அவரை சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்கிறோம் என்று அவரது மனைவியிடம் கூறிவிட்டு, ஈசிஆர் வழியாக அவரை விழுப்புரம் மாவட்டம் ஓலக்கூருக்கு அழைத்துச் சென்றனர்.

கடுமையான கண்டனக் குரல்கள்
இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்தன. பத்திரிகையாளர் மன்றம், ஜனநாயக அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. கருத்துரிமையை பறிக்கும் தமிழக காவல்துறையின் இந்த கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க குரல் கொடுப்பது சட்ட நடைமுறைக்கு எதிரானது கிடையாது என்றும் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

வழக்குப்பதிவு செய்யவில்லை - போலீசார் விளக்கம்
இதைத்தொடர்நதது, சைபர் கிரைம் போலீசாரின் 2 மணி நேர விசாரணைக்குப் பின் சாவித்ரி கண்ணன் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார், சாவித்ரி கண்ணன் நடத்திவரும் இணையதளத்தில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக சிலவற்றை பதிவிட்டிருந்தார். அதுதொடர்பாக 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவரை அவரது வழக்கறிஞருடன் அனுப்பி வைத்துவிட்டோம். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications