ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸை இறங்கி அடிக்கும் திமுகவினர்.. கடைசியில் ராகுலையும் விட்டு வைக்கவில்லை
சென்னை: தமிழக அரசியலில் நீண்டகாலமாகத் தொடரும் திமுக - காங்கிரஸ் கூட்டணி, தற்போது 'ஆட்சியில் பங்கு' என்ற விவகாரத்தால் ஒரு இக்கட்டான சூழலை எதிர்கொண்டுள்ளது. காங்கிரஸ் நிர்வாகிகள் எழுப்பியுள்ள இந்தக் கோரிக்கை, கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே வெளிப்படையான கருத்து மோதல்களை உருவாக்கி இருக்கிறது. இந்த விவகாரத்தை பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர், வேலுச்சாமி, ஜோதிமணி உள்பட பலர் எழுப்பி வரும் நிலையில், திமுக நிர்வாகிகள் வெளிப்படையாகவே காங்கிரஸை விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், கடந்த 1967-ம் ஆண்டுக்குப் பிறகு ஆட்சி அதிகாரத்தில் அமர முடியவில்லை. சுமார் 58 ஆண்டுகளாகத் திராவிடக் கட்சிகளுக்குப் பின்னால் நின்றே தேர்தல்களைச் சந்தித்து வருகிறது. அதிமுக அல்லது திமுக உடன் இணைந்தே தேர்தலை சந்தித்து வருகிறது. ஆனால் "இனியும் வெறும் ஆதரவு மட்டும் தந்து கொண்டிருக்க முடியாது, ஆட்சியில் எங்களுக்கும் பங்கு வேண்டும்" என்ற குரல் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்கள் மற்றும் எம்.பி-க்களிடம் இருந்து வலுவாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, மாணிக்கம் தாகூர் போன்ற நிர்வாகிகள், "அதிகாரப் பகிர்வு இல்லாத கூட்டணி முழுமையானதல்ல" என்ற கருத்தை முன்வைத்து வருகின்றனர்.

திமுகவின் கடும் எதிர்வினை
காங்கிரஸ் தரப்பில் முன்வைக்கப்படும் இந்தக் கோரிக்கையை திமுக ஆரம்பத்தில் இருந்தே நிர்வாகிகள் ரசிக்கவில்லை. "மத்தியில் அதிகாரத்தில் இல்லாதபோது காங்கிரஸைத் தாங்கிப் பிடிப்பதே திமுகதான்" என்ற நிலையில், தமிழகத்தில் அமைச்சர் பதவி கேட்பதை ஏற்க முடியாது என்று திமுகவின் உடன்பிறப்புகள் பதிலடி கொடுத்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் திமுகவினர், காங்கிரஸின் வாக்கு வங்கியைச் சுட்டிக்காட்டி விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
தாங்கி பிடிப்பதே திமுக தான்
காங்கிரஸ் கட்சி எல்லா மாநிலங்களிலும் பாஜகவிடம் தோற்று வருகிறது. பீகாரில் கூட பலத்த அடி வாங்கி உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து தான் கடந்த 2019, 2024ம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஏராளமான எம்பிக்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி உள்ளது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியை தாங்கி பிடிப்பதே திமுக தான். ஆனால் எங்களிடமே இப்படி பேசி குழப்பம் விளைவிப்பது தவறு என்று திமுகவினர் எச்சரிக்கின்றனர்.
பப்பு என்று கிண்டல்
"காங்கிரஸ் கட்சி இன்னிக்கி இருக்குற நிலைமைல, அதுவும் பீகாரில் அப்படி ஒரு மரண அடியை வாங்கினதுக்கப்புறம், 40 மக்களவை சீட்டு சொளையா கிடைக்கிற மாநிலத்தோட கூட்டணில குழப்பத்தை உண்டு பண்ணனும்னு எந்த மடையனாவது நினைப்பானா? இந்தாளை பப்புன்னு சொன்னதுல தப்பே இல்ல." இப்படி திமுக ஆதரவாளர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இன்னொரு திமுக ஆதரவாளர், "இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம் தான்யா... அங்க அவனுங்கள எதிர்க்க எந்த அரசியல் திட்டமும் இல்லாம.. நாடு முழுக்க கையில இருந்த எல்லாத்தையும் கோட்டை விட்டுட்டு தொக்கா MP சீட்டுகள தர ஸ்டேட்ல வந்து சென்ட்ரல்ல மெஜாரிட்டியோட ஆட்சியில இருக்க ரேஞ்ச்க்கு கூட்டணிகாரங்க கிட்ட மல்லு கட்டிட்டிருக்கீங்க...." என்று விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தி குறித்த விமர்சனங்கள்
சண்டையின் ஒரு பகுதியாக, காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தியின் செல்வாக்கை முன்னிறுத்திப் பேச முற்படும்போது, திமுகவினர் அவரை விமர்சிக்கத் தயங்கி வந்தனர். ஆனால் இப்போது ராகுலையும் விட்டு வைக்கவில்லை. "ராகுல் காந்திக்குத் தமிழகத்தில் கிடைக்கும் வரவேற்பு என்பது திமுகவின் பலத்தால் வருவது" என்றும், "அகில இந்தியத் தலைவராக இருந்தாலும் தமிழக அரசியலில் ஸ்டாலினின் வழிகாட்டுதலை ராகுல் ஏற்றுக்கொள்கிறார்" என்றும் திமுகவினர் கூறி வருகின்றனர்.
ஸ்டாலின் திட்டவட்டம்
தமிழக வெற்றிக் கழகத்தின் வருகைக்குப் பிறகு, அரசியல் களம் மாறியுள்ளது. ஒருவேளை திமுக ஆட்சியில் பங்கு தராவிட்டால், காங்கிரஸ் வேறு பக்கம் சாயக்கூடும் என்ற ஊகங்களும் நிலவின. ஆனால், திமுகவோ "அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதே எங்களின் இலக்கு, அதில் யாருக்கும் பங்கு தர முடியாது" என்பதில் உறுதியாக இருக்கிறது. முதல்வர் ஸ்டாலினே ஆட்சியில் பங்கு தர முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
ஆட்சியில் பங்கு வாதம்
முதல்வர் ஸ்டாலினிடம், ஆங்கில ஊடகம் ஒன்று 'ஆட்சியில் பங்கு' குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்டாலின், ''ஆட்சியில் பங்கு எனும் வாதம் தமிழகத்துக்கு சரிப்பட்டு வராது. இது காங்கிரஸ் உட்பட கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கும் தெரியும்.கூட்டணிக்குள் ஒரு சலசலப்பை உருவாக்குவதற்கான முயற்சியே இது. திமுக கூட்டணியில் எவ்விதமான சிக்கலும் இல்லை. காங்கிரசுடன் கூட்டணி அமைத்துத்தான் திமுக தேர்தலை சந்திக்கும்'' என்று கூறினார். இது காங்கிரஸ் நிர்வாகிகளிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரவீன் சக்கரவர்த்தி
காங்கிரஸ், நிபுணர்கள் மற்றும் தரவு பகுப்பாய்வு பிரிவின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி கூறும் போது, இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது, தமிழகம் மட்டும் ஏன் தனித்துவம் என்ற போலி பிம்பத்துக்கு பின்னால் ஒளிந்து கொள்ள வேண்டும்? சக இந்தியர்களை போல் கூட்டணி அரசு அமைவதில் தமிழக மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிழகத்தில் காங்கிரஸ் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது. மேலும், ஜார்கண்ட், கேரளா, பீஹார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கூட்டணி ஆட்சி செயல்பட்டு வருகிறது.
மாணிக்கம் தாகூர்
காங்கிரஸ் மக்களவைக் கொறடா மாணிக்கம் தாகூர் கூறும் போது, கூட்டணி ஆட்சியா அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்றார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறும் போது, முதல்வர் அவரின் கருத்தை கூறியுள்ளார். எங்கள் தேசிய தலைவர்களும், முதல்வரும் அமர்ந்து பேசி நல்ல முடிவை எடுப்பார்கள். கூட்டணியில் விரிசல் வருமா என பலரும் எதிர்பார்க்கிறார்கள். ஒருபோதும் பாஜக, அதன் அங்கமாக உள்ள அதிமுக-வை தமிழக மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் என்றார்கள்.
திமுக கூட்டணியில் சிக்கல்
ராகுல் காந்தி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகிய இரு தலைவர்களுக்கு இடையே சுமூகமான உறவு இருந்தாலும், கீழ்மட்ட நிர்வாகிகளிடையே கடுமையான வார்த்தை போர் நடக்கிறது. இது வரும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதிகாரப் பகிர்வு என்பது கோரிக்கையால் திமுக கூட்டணியில் சிக்கல் வருமா அல்லது திமுக சமாளிக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications