போயஸ் கார்டனில் கண்காணிப்பு அதிகரிப்பு... சொந்தப் பணத்தில் சிசிடிவி கேமரா பொருத்தும் ரஜினி..!
சென்னை: சென்னை போயஸ் கார்டனில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சொந்தப் பணத்தில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி வருகிறார் ரஜினி.
மேலும், தனது இல்லத்தின் முற்றத்திலேயே கட்சியின் அலுவலகம் அமைப்பது குறித்தும் ரஜினிகாந்த் ஆலோசித்து வருகிறார்.
ரஜினிகாந்தின் அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பிறகு போயஸ் கார்டனுக்கு அவரது ரசிகர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
ரஜினிகாந்த் பாஜகவின் பி டீமா?.. தமிழக பாஜக தலைவர் எல் முருகன் விளக்கம்

வி.ஐ.பி. ஏரியா
சென்னை போயஸ் கார்டன் பகுதியை பொறுத்தவரை வி.ஐ.பி.க்கள் அதிகம் வசிக்கும் இடமாகும். மறைந்த ஜெயலலிதாவின் வேதா இல்லம் தொடங்கி ரஜினிகாந்த், உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களின் இல்லம் அங்கு அமைந்துள்ளது. ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை போயஸ் கார்டனுக்குள் அநாவசியமாக யாரும் சுற்றித்திரிய முடியாது.

போலீஸ் கெடுபிடி
காரணம் அந்தளவுக்கு அங்கு போலீஸ் கெடுபிடிகள் அதிகமாக இருக்கும். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு காட்சிகள் அப்படியே தலைகீழாக மாறத் தொடங்கியது. இந்நிலையில் ரஜினிகாந்த் அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்ட பிறகு அவரது ரசிகர்கள் போயஸ் கார்டனில் நாள்தோறும் குவிந்து வருகின்றனர்.

சிசிடிவி கேமரா
இந்நிலையில் யார் யார் வருகிறார்கள், போகிறார்கள் என்பதை அறிவதற்காக ரஜினிகாந்த் தனது சொந்த நிதியை கொண்டு சிசிடிவி கேமராக்களை பொருத்தி வருகிறார். தெரு முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்தப்படுவது பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

கட்சி அலுவலகம்
இதனிடையே ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் ராகவேந்திரா மண்டபத்தில் கட்சி அலுவலகம் செயல்படும் எனக் கூறப்பட்ட நிலையில் இப்போது போயஸ் கார்டனிலேயே செயல்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.