நுபுர் ஷர்மா பேச்சுக்கு அவர் காரணமில்லை.. ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு தடை தேவை.. திருமாவளவன் அதிரடி!
சென்னை: நுபுர் ஷர்மாவின் வெறுப்பு பேச்சுக்கு ஆர்எஸ்எஸ் இயக்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றும், இந்தியாவில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா செல்லும் முன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது குடியரசுத் தலைவர் தேர்தல், மகாராஷ்டிரா அரசியல் விவகாரம், நுபுர் ஷர்மா பற்றிய உச்சநீதிமன்றத்தின் கருத்து, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தல்
குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து பேசிய அவர், குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகள் பொது வேட்பாளராக நிறுத்தியுள்ள யஷ்வந்த் சின்ஹாவை வெற்றி பெற வைக்க வேண்டும். பாஜக அடையாள அரசியலை உயர்த்தி பிடித்துள்ளது. பழங்குடி சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை குடியரசு தலைவர் வேட்பாளராக நிறுத்துகிறோம் என்று பழங்குடி மக்களின் பாதுகாவலர் போல் காட்டிக்கொள்கிறது.
இதன்மூலம் பாஜக அரசியல் சூதாட்டத்தை செய்கிறது. நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து சூழ்ந்து உள்ள நிலையில் கே.ஆர்.நாராயணன் போல் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையும் அரசியலமைப்பு சட்டத்தின் மீது நம்பிக்கையும் கொண்ட ஒருவரை குடியரசு தலைவராக தேர்ந்து எடுக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் யஷ்வந்த் சின்ஹாவை நிறுத்தி உள்ளோம் என்று தெரிவித்தார்.

மகாராஷ்டிரா அரசியல்
தொடர்ந்து மகாராஷ்டிரா விவகாரம் குறித்து பேசிய திருமாவளவன், மகாராஷ்டிராவில் திட்டமிட்டு சிறப்பாக செயல்பட்ட சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பாஜக சிதறடித்துள்ளது. சிவசேனாவை உடைத்த அநாகரீக அரசியல் நாட்டின் பாதுகாப்புக்கே ஆபத்தானது. பாஜகவின் போக்கை பொதுமக்கள் புரிந்து கொண்டு தனிமைப்படுத்த வேண்டும் என்று கூறினார்.
Recommended Video

பாலியல் துன்புறுத்தல்
தொடர்ந்து, பள்ளிகளில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. இதற்காக முதலமைச்சர் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும். சிறுமிகளின் பாதுகாப்புக்கு பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து மீட்க தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தினார்

நுபுர் ஷர்மா சர்ச்சை
மேலும் நுபுர் சர்மா குறித்து உச்ச நீதிமன்றம் கூறியுள்ள கருத்து நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது. அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என நீதிமன்றத்தில் நீதிபதிகள் கூறியது தீர்ப்பில் எழுதப்பட்டதா என தெரியவில்லை. நுபுர் சர்மாவின் வெறுப்பு பேச்சுக்கு அவர் மட்டுமே காரணம் இல்லை. அவருக்கு பின்னால் இருந்து இயங்குகிற ஆர்எஸ்எஸ் இயக்கம் பொறுப்பு ஏற்க வேண்டும். ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
