சென்னையில் வேலைக்கு வராத பெண் பெயரில் சம்பளம்.. மாநகராட்சி ஒப்பந்த நிறுவனம் கண்டுபிடித்தது எப்படி?
சென்னை: சென்னை: சென்னை மாநகராட்சியில் சில தனியார் நிறுவனங்கள் ஒபபந்தம் எடுத்து தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அப்படியான ஒரு தனியார் ஒப்பந்த நிறுவனத்தில், வேலைக்கு வராத பெண்ணின் பெயரில் சம்பளம் பெற்று மோசடி நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் தூய்மை பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள மேற்பார்வையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையில தூய்மை பணியில் ஈடுபடும் ஒப்பந்த நிறுவனங்களில் சில நேரங்களில் வேலைக்கே வராத பெண் பெயரில் சம்பளம் போடுவது போன்ற முறைகேடுகள் அவ்வப்போது நடக்கின்றன.இந்த முறைகேடுகளை மேலாளர்கள் சில ஊழியர்களின் துணையுடன் மேற்கொள்கிறார்கள்.இப்படி மோசடி செய்பவர்கள் குறித்து தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் புகார் அளிக்கின்றன. அப்படி ஒரு சம்பவம் தான் ஆலந்தூரில் நடந்துள்ளது.

சென்னை ஆலந்தூர் பகுதியில் தனியார் தூய்மை பணி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இந்த தனியார் நிறுவனம் சென்னை மாநகராட்சியின் 10-வது மண்டலம், 128-வது வார்டு சாலிகிராமம் பகுதியில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இங்கு கார்த்திகேயன் என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த 8-11-2025 முதல் 2-4-2026 வரை மகாலட்சுமி என்பவர் தூய்மை பணியாளராக வேலை செய்ததாக பதிவுசெய்து, மாத சம்பளம் ரூ.19,800 வீதம் 5 மாதங்களுக்கு ரூ.98,930 அவரது மகன் பாண்டியன் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டிருக்கிறது.ஆனால், மகாலட்சுமி ஒரு நாள்கூட பணிக்கு வரவில்லை என்றும், அரும்பாக்கத்தைச் சேர்ந்த அவரது மகன் பாண்டியன் (வயது 29) அதே நிறுவனத்தில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருவதாகவும் நிறுவனத்தின் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அத்துடன் தனியார் நிறுவனத்தின் வருகைப்பதிவேடு, சம்பள கணக்கு மற்றும் வங்கி விவரங்களை ஆய்வு செய்தனர். அதில் மேற்பார்வையாளர் கார்த்திகேயனும், தூய்மை பணியாளர் பாண்டியனும் இணைந்து மோசடியில் ஈடுபட்டதாகவும், இதற்காக கார்த்திகேயன் மாதந்தோறும் பாண்டியனிடம் கமிஷன் பெற்றதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து தூய்மை பணியாளர்பாண்டியனை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.40 ஆயிரம், 2 வங்கி பாஸ் புத்தகங்கள் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேற்பார்வையாளர் கார்த்திகேயனை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




Click it and Unblock the Notifications
