சசிகலாவிடம் போன 2 சீனியர்கள்.. எடப்பாடி பழனிசாமிக்கு தந்த லாஸ்ட் சான்ஸ்? அதிமுகவில் கிளம்பிய சூறாவளி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று சசிகலா அழைப்பு விடுத்துள்ள நிலையில், பல பரபரப்பு நடவடிக்கைகள் கட்சிக்குள் நடந்து வருகின்றன.. இடைத்தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக சீனியர்கள் நடத்திய முக்கிய ஆலோசனைகளும், எடப்பாடி பழனிசாமி - சசிகலா சந்திப்புக்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகளும் இப்போது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.. அதிமுகவுக்குள் தற்போது நடந்துவரும் இந்த நகர்வுகள் குறித்து பிரத்யேகமான தகவல் ஒனறு நமக்கு கிடைத்துள்ளது.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!!

நாளை அக்டோபர் 17-ந்தேதி 55-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது அதிமுக. இந்த நாளை நினைவுகூர்ந்துவிட்டு, அனைவரும் ஒன்றிணையும் காலம் வந்து விட்டது என்று சொல்லியிருக்கிறார் சசிகலா.

Sasikala

3வது இடத்தில் அதிமுக

இவரது நினைவுகூரலுக்கு முன்பு அதாவது இடைத்தேர்தல் முடிவுகள் வந்ததும் அதில் அதிமுக 3வது இடத்துக்கு தள்ளப்பட்டதுமான சூழலில், அதிமுக சீனியர்கள் பலரும் கவலையடைந்தனர். எஸ்.பி.வேலுமணியும், சி.வி.சண்முகமும் சுமார் ஒரு மணி நேரம் ஃபோனிலேயே விவாதித்திருக்கிறார்கள்.. இதனையடுத்து இருவரும், சசிகலாவை தொடர்பு கொண்டு வருத்தப்பட்டு பேசியிருக்கிறார்கள்.

சில அதிரடி முடிவுகளை எடுக்கும் வகையில், "அதிமுகவிற்குள் நீங்கள் வர வேண்டும்" என்கிற கோரிக்கையையும் அவர்கள் தரப்பில் சசிகலாவிடம் வைக்கப்பட்டிருக்கிறது.

கேபி முனுசாமிக்கு போன்

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் மிக முக்கியமான, நம்பிக்கைக்குரிய மற்றும் தூணாக விளங்கும் தலைவரான கே.பி.முனுசாமியிடம், எஸ்.பி.வேலுமணியும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியும்மும் விவாதித்துள்ளனர். அப்போது 2 பேருமே ஒரே கோணத்திலேயே கேபி முனுசாமியிடம் பேசியுள்ளனர்.

அதாவது, "அதிமுக என்கிற மாபெரும் இயக்கம், நான் இல்லை என்கிற நிலை வந்தாலும் கூட 1000 ஆண்டுகளுக்கு நிலைத்திருக்கும், ஆட்சியில் இருக்கும் என்று அம்மா ஜெயலலிதா சொன்னார். ஆனால், அம்மாவின் கனவை ஐந்தே ஆண்டுகளில் நிராசையாக்கி கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.. இதெல்லாம் அவருக்கு தேவையா? அவரை சூழ்ந்துள்ள உங்களுக்கும் தேவையா?

தொடர்ந்து கட்சி தோல்வியடைவதை கண்டு ஒவ்வொரு அதிமுக தொண்டனும் ரத்தக்கண்ணீர் வடிக்கிறான். இது, உங்களுக்கும் எடப்பாடிக்கும் தெரியவில்லையா? எடப்பாடியின் பிடிவாதத்தால் அதிமுக அழியணுமா?

அனைவரும் இணைய வேண்டும்

சாதாரண ஒரு நடிகர், அதிமுகவை பலவீனப்படுத்துவதை எப்படி உங்களால் ஏற்க முடிகிறது? இனியும் காலம் தாழ்த்தினால் அதிமுக என்ற கட்சியை இல்லாமல் போய்விடும். இதனை எடப்பாடிக்கு எடுத்துச் சொல்லுங்கள். எல்லோரும் இணைந்து கட்சியை காப்பாற்றலாம்.

பழையபடி அதிமுக மாற வேண்டுமானால், நாம் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும். ஒன்றிணைந்தால் மட்டும் தான் அடுத்து வரக்கூடிய கிராமப்புற உள்ளாட்சி மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். அந்த வெற்றி கிடைத்தால் தான் அதிமுக மீண்டு எழுந்துள்ளதாக தொண்டர்களுக்கு நம்பிக்கை வரும். அதிமுகவினருக்கு உடனடி தேவை நம்பிக்கை தான்" என்றெல்லாம் நீண்ட நேரம் பேசியுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி ஈகோ

இதனை ஒப்புக்கொண்ட கே.பி.முனுசாமி, "எடப்பாடிக்கும் இந்த வருத்தமும் கவலையும் இருக்கிறது. என்ன ஒரேயொரு சிக்கல் என்றால், சில ஈகோ அவரை தடுக்கிறது.. அதனால்தான் சற்று கீழிறங்கி வர மறுக்கிறார். நாங்கள் சொல்லி புரிய வைக்கிறோம். நீங்களும் உங்க ஈகோவை மறந்து கட்சி தலைமையகத்துக்கு வந்து எடப்பாடியை சந்தியுங்கள். எல்லாம் சரியாகி விடும். இங்கு நமக்குள் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. எல்லாம் ஈகோதான். நீங்கள் வந்து முதலில் சந்தியுங்கள். எல்லாம் தானாக அமையும்.

சசிகலா அம்மையாருக்கும் இதனை சொல்லுங்கள்... ஒருவேளை தலைமையகம் வந்து எடப்பாடியை சந்திக்க சசிகலா விரும்புகிறார் என்றால், எடப்பாடியிடம் பேசி சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்.

தன்னை வந்து எடப்பாடி பழனிசாமி சந்தித்து, "கட்சி பொறுப்பை ஏற்று நீங்களே ஏற்று நடத்துங்கள்" என சொல்ல வேண்டும் என சசிகலா எதிர்பார்க்கிறார்.

அதேபோல, சசிகலா தன்னை சந்தித்து, "எல்லோரும் இணைந்து செயல்படுவோம், அதிமுகவை நீங்களே வழிநடத்துங்கள், நான் உறுதுணையாக இருக்கிறேன்" என சசிகலா சொல்ல வேண்டும் என எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பார்க்கிறார்.

அவரவர் நிலையிலிருந்து எதிர்ப்பார்ப்பு எகிறுவதால் தான் இந்த பிரச்சனையே. அதனால், சசிகலா அம்மையாரை எடப்பாடியை தொடர்புகொண்டு பேசி விட்டு, கட்சி தலைமையகத்துக்கு வரச் சொல்லுங்கள். கட்சி அலுவலகத்தில் இருவரும் சந்தித்தாலே போதும் . மற்றதெல்லாம் தானாக நடக்கும் என்று சி.வி. சண்முகத்திடம் வலியுறுத்தியுள்ளார் கே.பி.முனுசாமி.

சசிகலா கேட்ட நறுக் கேள்வி

இதனை சசிகலாவிடம் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.. அப்போது சசிகலா, "அதிமுக கட்சியையும் ஆட்சியையும் பழனிச்சாமியிடம் ஒப்படைத்து விட்டு போனேன். நீங்கள் வந்ததும் உங்களிடமே கட்சியை ஒப்படைப்பேன் என பழனிச்சாமி அப்போது என்னிடம் சொன்னார்.

அவரை ஆளாக்கியது, அதிகாரத்தில் உட்கார வைத்தது எல்லாம் நான். அப்படியிருக்கையில் நான் போய் அவரை சந்தித்து கட்சியில் சேர்த்து கொள்ளுங்கள் என கெஞ்ச வேண்டுமா? நாம் இன்றைக்கு உயர்ந்த இடத்தில் இருப்பதற்கு யார் காரணம் என நினைத்துப்பார்த்து என்னை வந்து பார்க்க மாட்டாரா? என்று தனக்கிருக்கும் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் சசிகலா.

இப்படியான பரபரப்புக்கு நடுவில்தான், "அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்று தனது கருத்தை நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று பதிவு செய்துள்ளார் சசிகலா.

ஆக, எடப்பாடி - சசிகலா சந்திப்பு நடக்க வேண்டும் என்று எடப்பாடியோடு முரண்பட்டு நிற்கும் அதிமுக சீனியர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஒருவேளை, இந்த சந்திப்பு அக்டோபருக்குள் நடக்காது போனால், நவம்பரில் எடப்பாடிக்கு எதிராக போட்டி பொதுக்குழுவைக் கூட்டி விவாதிக்கும் ஆலோசனையில் ஈடுபட போகிறார்களாம் எடப்பாடியின் எதிர்ப்பாளர்கள்...!!

- நமது சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+