திவ்யா சத்யராஜ் நறுக்! 77 வருஷமா திமுகவை பார்த்துமா திருந்தல? அன்பில் மகேஷ் வீட்டு ரெய்டால் கொதிப்பு
சென்னை: திவ்யா சத்யராஜ் என்றாலே திமுக ஆதரவு.. தவெக தலைவர் விஜய் மீதான விமர்சனம் என அரசியல் களத்தில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார்.. அண்ணன் சிபிராஜ் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில், திவ்யா மட்டும் தவெகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருகிறார்.. இப்போது திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் நடந்த சோதனை விவகாரத்திலும் திவ்யா வெளியிட்டுள்ள பதிவு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!!
சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ்.. ஊட்டச்சத்து நிபுணராக இருப்பதுடன், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணை செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது திமுகவுக்கு ஆதரவாக தீவிரமாக பிரச்சாரமும் மேற்கொண்டார்.

சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ்
அதே நேரத்தில், சத்யராஜின் மகன் சிபிராஜ், தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், திவ்யா மட்டும் தவெகவுக்கு எதிரான நிலைப்பாட்டை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.
கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பெரம்பூர் தொகுதியில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த திவ்யா சத்யராஜ், விஜய்யை நேரடியாகவே விமர்சித்திருந்தார். அனுபவம் இல்லாத அரசியல்வாதியிடம் நாட்டை ஒப்படைப்பது ஆபத்தானது, உங்களுக்கு பிரச்சனை என்றால் நான் உடனே வீட்டுக்கு வருவேன்.. விஜய் அப்படி வருவாரா?" என்றும் பெரம்பூர் மக்களிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
தவெக மீதான திவ்யாவின் விமர்சனம்
தவெக மீதான திவ்யாவின் விமர்சனம் நின்றுவிடவில்லை. திமுக பிரச்சாரத்தின்போது தவெக தொண்டர்கள் செருப்பு வீசியதாக திவ்யா சத்யராஜ் குற்றம்சாட்டியிருந்தார். அரசியல் களத்தில் எதிர்க்கட்சியினரை மதிக்கும் பண்பை தவெக தொண்டர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் விஜய்க்கு வலியுறுத்தியிருந்தார். குறிப்பாக பெண்கள் மற்றும் மாற்றுக் கருத்து கொண்டவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற திவ்யாவின் கருத்தும் இணையத்தில் கவனம் பெற்றது.
இந்த நிலையில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று ரெயிடு நடத்தி வருகிறார்கள்.. . தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை, திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்
இந்த சோதனை குறித்து திவ்யா சத்யராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், "தொடர் மின்வெட்டு, லண்டன் ஏமாற்று வேலை, விலைவாசி உயர்வு, பட்டினப்பாக்கம் மக்கள் போராட்டம், விவசாயிகள் போராட்டம், டெண்டர் ஊழல் புகார்கள் என தொடர்ச்சியாக மக்களிடம் அடிவாங்குவதால் அதை திசைதிருப்புவதற்கு மீண்டும் ரெய்டு எனும் ஆயுதத்தைப் பிரயோகிக்கிறது தவெக அரசு,.
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் மீது ஏவிவிடப்பட்டிருக்கும் இந்த சோதனை கடும் கண்டனத்துக்குரியது. அவரும் கழகமும் இதனை சட்டரீதியாக எதிர்கொண்டு வெல்வோம்
திமுக இதுபோன்ற மிரட்டல்களுக்கு அஞ்சாது என்பதை 77 வருடங்களாகப் பார்த்தும் இன்னும் திருந்தவில்லை என்றால், திருத்தப்படுவீர்கள்" என்றும் திவ்யா சத்யராஜ் தனது பதிவில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.. இதன் மூலம் அன்பில் மகேஷ் வீட்டில் நடைபெறும் சோதனையை அரசியல் ரீதியாக கடுமையாக எதிர்த்து தனது நிலைப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications
