சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொய்யான குற்றச்சாட்டுகள்.. என்ஐஏ ரெய்டில் அதிகாரிகள் அத்துமீறலிலும் ஈடுபட்டனர்: எஸ்.டி.பி.ஐ. தலைவர்

Google Oneindia Tamil News

சென்னை: விசாரணை ஏஜென்சிகளின் அத்துமீறிய நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. அமைப்பின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கண்டனம் தெரிவித்துள்ளார். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு எதிராக இன்று நாடு முழுக்க என்ஐஏ நடத்தும் சோதனைகளுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை மேற்கொண்டு வருகிறது. ஃபிரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ உள்ளிட்ட அமைப்புகளின் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை புரசைவாக்கத்தில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ அமைப்பினர் சாலை மறியல் செய்து வருகின்றனர்.

என்ஐஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த கடலூர், தேனி, கோவை மாவட்ட தலைவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தமாக நாடு முழுக்க 100க்கும் மேற்பட்டோர் இன்றைய ரெய்டில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த ரெய்டை முன்னிட்டு இன்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி, நெல்லை புறநகர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, மாவட்ட துணைத் தலைவர்கள் எஸ்.எஸ்.கனி, ஹயாத் முகமது, மாவட்ட செயலாளர் முஸ்தபா ஆகியோர் உடனிருந்தனர். செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் என்ஐஏ ரெய்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

டெண்டர் முறைகேடு வழக்கு.. ரத்து செய்ய கோரிய எஸ் பி வேலுமணியின் வழக்கு.. அக்டோபர் 12-ல் இறுதி விசாரணைடெண்டர் முறைகேடு வழக்கு.. ரத்து செய்ய கோரிய எஸ் பி வேலுமணியின் வழக்கு.. அக்டோபர் 12-ல் இறுதி விசாரணை

கண்டனம்

கண்டனம்

அவர் தனது பேட்டியில், தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஒரு போலியான குற்றச்சாட்டை முன்வைத்து போலியான தேடுதல் வேட்டை நடத்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்ளிட்ட ஜனநாயக சக்திகளை முடக்கும் நடவடிக்கைகளை என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளைக் கொண்டு ஒன்றிய பாஜக அரசு மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. தனது சோதனைகளை மேற்கொண்டுள்ளது.

எஸ்.டி.பி.ஐ.

எஸ்.டி.பி.ஐ.

மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் நஜ்மா பேகம் அவர்களின் இல்லத்தில் பெண் காவலர்கள் கூட இல்லாமல், தேடுதல் வேட்டை என்கிற பெயரில் மத்திய தொழிற் பாதுகாப்பு படைகளுடன் மிகவும் அராஜகமான நடவடிக்கைகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். ஒரு பை நிறைய பணக்கட்டுகளை கொண்டுவந்த அதிகாரிகளிடம் ஏன் அதனை இங்கு கொண்டுவந்து வைக்கின்றீர்கள் என கேட்டதற்கு அது எங்கள் பணம் அதனை எடுத்துச் சென்றுவிடுவோம் என சொல்லிவிட்டு பணம் கைப்பற்றப்பட்டதாக கூறி கையெழுத்திடச் சொல்லியுள்ளனர். அதற்கு நஜ்மா பேகம் மற்றும் அவரது கணவர் இத்ரீஸ் மறுக்கவே அவர்களின் ஒரு வயது குழந்தையை காட்டி மிரட்டி அழுதுகொண்டிருக்கும் குழந்தைக்கு பால் கொடுக்க அனுமதிக்க மாட்டோம் என மிகவும் அராஜகமான முறையில் நடந்துகொண்டதோடு, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது கணவரை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். என்.ஐ.ஏ.வின் இந்த அராஜக நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

போலி ரெய்டு

போலி ரெய்டு

போலியான திட்டமிட்ட சதியுடன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தது மட்டுமில்லாமல் பெண்கள், குழந்தைகளை துன்புறுத்திய அராஜக போக்குக்கு எதிராக பெண்கள் ஆணையம், குழந்தைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். உடனடியாக மாநில செயலாளர் நஜ்மா பேகம் அவர்களின் கணவரை விடுதலை செய்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ராமநாதபுரம் மேற்கு மாவட்டத் தலைவர் பரக்கத்துல்லா அவர்களின் வீடுகளிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டு அவரையும் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். இந்த கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல் கட்சியின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் அஸ்ரப் உள்ளிட்டவர்களும் இன்றைக்கு கைது செய்யப்பட்டுள்ளனர். முழுக்க முழுக்க ஜனநாயக அடிப்படையில் செயல்படக்கூடிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் செயல்பாடுகளை முடக்கும் விதத்திலேயே என்.ஐ.ஏ. வினுடைய இத்தகைய செயல்பாடுகள் அமைந்துள்ளது. அதேபோல் இந்தியா முழுவதும் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட்ஆப் தலைவர்களை குறிவைத்தும், அதன் தலைவர்கள் வீடுகளிலும், அலுவலகங்களிலும் எதிர் குரல்களை நசுக்குகிற விதமாகவும் என்.ஐ.ஏ. சோதனைகளையும், கைது நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

ஆர்எஸ்எஸ்

ஆர்எஸ்எஸ்

ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ சக்திகளின் நடவடிக்கைகளை கண்டு கொள்ளாத என்.ஐ.ஏ., ஜனநாயகத்திற்காக குரல் கொடுக்கும் அமைப்புகளுக்கு கொடுக்கும் இத்தகைய நெருக்கடிகளை ஜனநாயக சக்திகள் கண்டிக்க முன்வர வேண்டும். இல்லாவிட்டால் அடக்குமுறை, அதிகார துஷ்பிரயோகம் மூலம் ஜனநாயகத்தின் வேர்கள் அனைத்தையும் இல்லாமலாக்கிவிடும்.

இந்த சோதனை குறித்து தமிழக காவல்துறைக்கு எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மாநில அதிகாரத்தை மீறி, துணை ராணுவப்படைகளை கொண்டுவந்து இதுபோன்ற ரைடுகளை நடத்துவதன் மூலம் யாரையோ அச்சுறுத்தவும் ஒன்றிய பாஜக அரசு அதிகார துஷ்பிரயோகத்தை மேற்கொண்டு வருகின்றது என்பது தெளிவாகின்றது.

இந்த சோதனைகள் பெரும்பாலும் பாஜக ஆளாத மாநிலங்களில் தான் குறிவைத்து நடத்தப்பட்டிருக்கிறது. மேலும், சிறுபான்மை மக்களை, அவர்களின் நலனுக்காக செயல்படும் ஜனநாயக சக்திகளை அச்சுறுத்தி, ஒரு பெரும்பான்மை வாதத்தை நோக்கி நாட்டை நகர்த்தவும் ஒன்றிய பாஜக அரசால் இந்த ஏஜென்சிகள் தவறாக பயன்படுத்தப்படுகிறன. ஒன்றிய பாஜக அரசின் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கை என்பது குறிப்பிட்ட சமூக அமைப்புகளை மட்டும் தனிமைப்படுத்தும் முயற்சி அல்ல. அவர்களின் இறுதி நோக்கம் என்பது ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கு சேவை புரியும், ஜனநாயகத்திற்காக குரல் கொடுக்கும், அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் உண்மையான, நேர்மையான அனைத்து அமைப்புகளையும், நிறுவனங்களையும், தலைவர்களையும் அச்சுறுத்தி அவர்களை பின்வாங்கச் செய்வதாகும். ஆனால், ஒருபோதும் எஸ்.டி.பி.ஐ. கட்சியை இத்தகைய அடக்குமுறைகளை கொண்டு ஒடுக்க முடியாது என்பதை பாஜக அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

ஒன்றிய அரசு

ஒன்றிய அரசு

ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை அராஜகமானது, சட்டவிரோதமானது, ஜனநாயகத்திற்கு எதிரானது. நியாயமற்ற மற்றும் ஜனநாயக விரோத செயல்களுக்கு எதிராக நாட்டில் உள்ள மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் மௌனம் சாதிப்பது மிகவும் கவலைக்குரியது ஆகவே, அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் ஒன்றிணைந்து இத்தகைய ஆட்சியை எதிர்த்து தோற்கடிக்க முன்வர வேண்டும். ஜனநாயக சக்திகள் தங்கள் குரலை வலுவாக எழுப்ப வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை கண்டிக்க முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.கைது செய்யப்பட்ட அனைத்து தலைவர்களையும் என்.ஐ.ஏ. உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, பாஜக அரசின் ஜனநாயக விரோத செயல்களுக்கு எதிராக நாட்டின் மதச்சார்பற்ற குடிமக்களை உள்ளடக்கிய ஜனநாயகப் போராட்டங்களுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைமை தாங்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்., என்று குறிப்பிட்டுள்ளார்

English summary
SDPI condemns the NIA raid against its members and Popular Front of India organization .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X