திருமாவளவன் மேல நல்ல மரியாதை இருக்கு.. ஆனா இப்போ! ட்விஸ்ட் வைத்துப் பேசிய திமுக மாஜி சேகர் பாபு!
சென்னை: சென்னையில் அதிக அளவு மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காமல் இருந்ததற்கு நாங்கள் செயல்படுத்திய திட்டங்கள் தான் காரணம் எனவும், த.வெ.க ஆட்சி நிர்வாக சீரழிவை ஏற்படுத்தி உள்ளது.. எங்கள் ஆட்சியின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டும் ரிப்பன் வெட்டிக் கொண்டும் இருக்கிறார்கள் என திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். மேலும், திருமாவளவன் மீது மரியாதை உள்ளது, அவர் பேச்சுக்கு பதில் கூற முடியாது எனவும் கூறியுள்ளார்.
திமுக சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் உட்கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அம்பத்தூர் அடுத்த கள்ளிகுப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு பகுதி கழகச் செயலாளருமான ஜோசப் சாமுவேல், மண்டல குழு தலைவர் பி.கே மூர்த்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் சேகர்பாபு.
சேகர் பாபு
அப்போது பேசிய அவர்," ஆளும் கட்சியுடன் கூட்டணி என ஒன்று உருவாகியுள்ளது. அது குழம்பிய குட்டை அதில் மீன்பிடிக்க முடியாது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது மரியாதை வைத்துள்ளேன் அவர் பேசுவதற்கு பதில் கூற முடியாது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அரசியல் கட்சி ஆரம்பித்ததில் நிலையில்லாமல் பேசி வருகிறார். மாறி மாறி பேசும் ஒருவருடைய பேச்சு என்றால் அது வைகோ தான்.
மதிமுக வைகோ
கடந்த கால பேச்சுகளை எடுத்துப் பார்த்தாலே தெரியும். அது அவரின் நிலை தடுமாற்றமாக இருக்கும். சிறந்த பேச்சாளர் ஏனோ மாறி மாறி பேசி வருகிறார். சர்வதேச பிரச்சனையாக இருந்தாலும் மாநிலத்தை கட்டுப்பாட்டோடு கட்டு குறையாமல் வைத்திருப்பது மாநில அரசின் பொறுப்பு. அந்த பொறுப்பில் இருந்து இந்த ஆட்சி விலகி செல்வதை உணர்ந்த மக்கள் தவெகவில் இருந்து விலகி வருகிறார்கள. இந்த ஆட்சி நிர்வாக சீரழிவுவை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
சென்னை மழை
நாங்கள் ஏற்படுத்திய கட்டமைப்பால் தான் சென்னையில் 17 செ.மீ அதிகமான மழை பெய்தும்கூட சில சில பகுதிகளை தவிர்த்து பெரிய அளவில் மழை நீர் தேங்கவில்லை, இந்த ஆட்சி நல்ல பெயர் வாங்குவதற்கு காரணம் திராவிடம் மாடல் ஆட்சி தான் காரணம். சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியது போல 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பு ஏற்று பின் 721 இடங்கள் பள்ளப்பகுதி என கணக்கிடப்பட்டது. தற்போது 231 ஆக குறைந்திருக்கிறது என்பதை மாநகராட்சி ஆணையரே கூறியுள்ளார்.
தவெக ஆட்சி
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் முன்பு கோவில்களில் கட்டணம் இல்லாமல் சுவாமி தரிசனம் எனக் கூறினார். ஆனால் தற்போது எப்படி நிலைமை எப்படி என அனைவருக்கும் தெரியும். தற்போது ஆன்லைன் தரிசனம், செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி மறுப்பு, மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு என எதையுமே வெற்றிகரமாக முடிக்கவில்லை. எங்கள் ஆட்சியில் முதலமைச்சர் கொண்டுவந்த திட்டங்களுக்கு தான் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டும், ரிப்பன் வெட்டிக் கொண்டும் இருக்கின்றனர். இன்னும் ஓராண்டு கழித்து பேசினாலும் கூட நிர்வாக திறன் போதாது" என கூறினார்.




Click it and Unblock the Notifications
