சைத்தான் ஆட்சி நடத்தும் தவெக.. உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் திமுக அஞ்சாது! சேகர்பாபு திட்டவட்டம்!
சென்னை: திமுக சட்டத்தின் ஆட்சியை நடத்தி நிலையில் தமிழக வெற்றி கழகம் சைத்தான் ஆட்சியை நடத்துவதாகவும், அன்றாடம் ஒரு வழக்கு.. கைது நடவடிக்கை என திமுகவை மிரட்ட பார்க்கிறார்கள் என கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு. மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக அஞ்சாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி பணம் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திங்களன்று கைது செய்யப்பட்டு சென்னை ஊழல் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சேகர்பாபு
இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுடன் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் 2வது முறையாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு உடன் சென்றார். ஏற்கனவே நேற்று முன்தினம் சிறையில் சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் இன்று மீண்டும் 2வது முறையாக நேரில் சந்தித்து பேசினார்.
உதயநிதி ஸ்டாலின்
5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலின் அன்பில் மகேஷுடன் சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். ஜாமீன் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து சுமார் 30 நிமிடங்கள் ஆலோசனை நடத்தி முடித்து உதயநிதி ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.
சேகர் பாபு
தொடர்ந்து சிறை வாயிலில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர்," கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடந்து வருகிறது. தொடர்ந்து பலமுறை சோதனை நடத்தி, மிரட்டி பார்க்கிறார்கள். பல காட்டாறுகளை கடந்து வந்த இயக்கம் திமுக. அன்பில் மகேஷ் சட்ட ரீதியாக இந்த வழக்கை எதிர்கொள்வார்.
திமுக
கட்சியும் தலைவரும் அவருக்கு உறுதுணையாக இருக்கும். மிரட்டல், உருட்டல், பழிவாங்கும் நடவடிக்கை, இதனால் திமுகவின் மக்கள் சார்ந்த பணிகளையும் இயக்கத்தின் கொள்கையில் ஒரு நாளும் மங்க செய்ய முடியாது. இன்னும் கூர்மையாக தான் இருக்கும். நெருக்கடி ஆற்றில் நீந்தி வந்த இயக்கம் தான் திமுக, இதை பற்றி கவலைப்பட மாட்டோம்.
தவெக ஆட்சி
மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த தவெக ஆட்சியின் உடைய அவலங்களை.. இந்த ஆட்சி மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை விட்டு விட்டு திமுகவையும் மிரட்டுகின்ற தொணியில் வழக்குகளையும், சோதனைகளை அன்றாடம் செய்து செய்து கொண்டிருக்கிறது. நாட்டில் நடக்கும் கொடுமைகளை மறைப்பதற்காக இப்படி ஒரு நரேட்டிவ் செய்கிறார்கள். யாரையாவது கைது செய்கிற போது யாரும் செல்ல கூடாது என இதுவும் ஒரு மிரட்டலாக பார்க்கிறோம்.
சட்டத்தின் ஆட்சி
நாங்கள் சட்டத்தை மதிப்பவர்கள். சட்டத்தின் ஆட்சி நடத்தியது திமுக ஆட்சி. இது சைத்தான் ஆட்சி நடப்பதால் இப்படி பட்ட சூழல் ஏற்பட்டுள்ளது. வேலூர் திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அவருக்கு ஜாமின் மாத்திரம் கொடுக்கவில்லை. நீதிமன்றம் ஒரு குட்டே வைத்திருக்கிறது. கைது நடவடிக்கைக்கு அவசர கோலத்தில் அப்படி என்ன ஒரு கோலம் என்று நேற்றே சொந்த ஜாமீனில் விடுவித்து இருக்கிறார்கள்" என கூறினார்.





Click it and Unblock the Notifications
