2 மேட்டர்.. அஸ்திரத்தை எடுத்த பாஜக.. காரணமே "அவர்"தான்.. மாட்டிவிட்ட "தலைகள்".. அப்செட்டில் ஸ்டாலின்
நளினி சிதம்பரத்தை நீட் விவகாரத்தில் மாட்டிவிட்டுள்ளனர் செல்லூர் ராஜுவும் எச்.ராஜாவும்
சென்னை: ஒரே நேரத்தில்.. ஒரே மாதிரியாக, ஒரே கூட்டணியில் உள்ள கட்சிகள் திமுகவுக்கு செக் வைத்து வருவது, தமிழக அரசியலில் கவனத்தை பெற்று வருகிறது.
விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. இதற்காக இப்போதே தேசிய அரசியல் தயாராகி வருகிறது.. அந்த வகையில் தமிழகத்திலும் பிரதான கட்சிகள் மும்முரமாகிவிட்டன.
நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழக பாஜகவும் தயாராகி வருகிறது.. அதிமுகவை முந்திக் கொண்டு போகிற வேகத்தை பார்த்தால், தனித்து களமிறங்கினாலும் ஆச்சயரிப்படுவதற்கில்லை என்றும் சொல்கிறார்கள்.

பாஜக தலைமை
அதிலும் இந்த எம்பி தேர்தலில் 5 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் மாநில தலைமை செயல்பட்டு வருகிறது.. இதற்காக, மக்களின் கவனத்தை கவரும் வகையில், தன் பாணி அரசியலை மாற்றி கொண்டுள்ளது.. திமுக, அதிமுக இரு கட்சிகள் ஆட்சியில் இருக்கும்போது, ஒன்றையொன்றை தாக்கி கொள்வதும், மாநில அரசை கண்டித்து இன்னொரு கட்சி ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவதும் வழக்கம். இதில் பாஜக முனைப்புடன் களத்தில் உள்ளது.

டேமேஜ் திமுக
ஆனால், திமுகவை டேமேஜ் செய்யும் விஷயத்தில், அதிமுகவும் பாஜகவும் ஒரே மாதிரியான ரூட்டைதான் பிடித்துள்ளனர்.. முதல் ஆயுதமாக, இருகட்சிகளுமே திமுகவின் ஊழல் புகார்களை வெளிச்சம் போட போவதாக சொல்லி அந்த வேலையை முடித்து வருகின்றன.. இதில் அண்ணாமலை லிஸ்ட் வெளியிட்டு சில துறைகளின் பெயர்களை கோடிட்டு காட்டி உள்ளார்.. இதுபோக, ஆளுநரிடம் திமுக பற்றி, வரும் 15-ம் தேதி புகார் புத்தகம் தர போகிறார்.. அதேபோல அதிமுகவும், பிரதமரிடம் திமுக பற்றிய புகார்களை அறிக்கையாக தயாரித்து, ரகசிய ரிப்போர்ட்டை பிரதமரையே நேரில் சந்தித்து தந்ததாக சலசலக்கப்பட்டது.

செல்லூர் ராஜு
இப்போது 2வது அஸ்திரத்தை இந்த இரு கட்சிகளுமே மறுபடியும் ஒன்றாக கையில் எடுத்துள்ளன.. அது நீட் விவகாரம்தான்.. சில தினங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "முதல்வர் ஸ்டாலின் கச்சத்தீவு மீட்பு, நீட் தேர்வு உள்ளிட்ட கோரிக்கையை வைத்திருக்கிறார்.. இது எப்படி இருக்கு தெரியுமா? தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போல இருக்கு.. கச்சத்தீவு தாரைவார்ப்பு திமுக ஆட்சி காலத்தில் கருணாநிதி காலத்தில் தான் கொடுக்கப்பட்டது... இப்போது அவருடைய மகன் வந்து பிரதமரிடம் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று கேட்கிறார்.

ப சிதம்பரம்
அதேமாதிரி நீட் தேர்வு குறித்து முதல்வர் பேசியிருக்கிறார்.. இது அப்பட்டமான விளம்பரம்தான்.. நீட் தேர்வு மத்தியில் அங்கம் வகித்த திமுக ஆட்சி காலத்தில் தான் கொண்டுவரப்பட்டது. அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம்தான் இந்த நீட் தேர்வு கொண்டு வர கோர்ட்டில் வாதாடினார்.. அதன் அடிப்படையில்தான் சுப்ரீம் கோர்ட் நீட் தேர்வை கொண்டு வர உத்தரவிட்டது.. அப்போதுகூட நளினி சிதம்பரம், கோர்ட்டுக்கு வெளியே ஒரு பேட்டி தந்தார்..

என்னாச்சு?
அதில், "இனி எந்த காலத்திலும் நீட் தேர்வு தமிழகத்துக்கு வராது" என்றுதான் சொன்னார்.. ஆனால், பிறகு என்ன ஆயிற்று? அவர்தான் வழக்காடி நீட் வருவதற்கு காரணமாக இருந்தவர். மாணவ செல்வங்களின் படிப்பு இப்போது நீட் தேர்வால் பாதிப்படைந்துள்ளது.. அதிமுகவை தொடர்ந்து பாஜகவும், இதேநீட் விவகாரத்தை ஆரம்பித்துள்ளது.. அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா தேனியில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசியதாவது:

கருணாநிதி
"நீட் தேர்வை எதிர்த்து தீர்மானம் போட்டதாக முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார்.. அந்த தீர்மானம் வெறும் வெத்துக் கடுதாசி தான்... கடந்த 2010-ல் திமுக இடம் பெற்றிருந்த காங்கிரஸ் அமைச்சரவையில் தான் நீட் தேர்வு முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 2013-ல் முதல் முறையாக நீட் தேர்வும் நடத்தப்பட்டது. அப்போது ஏன் ஸ்டாலினும் அவருடைய அப்பா கருணாநிதியும் எதிர்க்கவில்லை? நீட் தேர்வை எதிர்த்து மத்திய அமைச்சரவையில் இருந்து விலகி இருக்கலாமே?

ப சிதம்பரம் மனைவி நளினி
நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டது உச்சநீதிமன்ற தீர்ப்பால் தான். முதல்வர் ஸ்டாலினுக்கு நீட் தேர்வில் விலக்கு வேண்டுமென்றால் அவர் தட்ட வேண்டிய இடம் சுப்ரீம்கோர்ட் கதவுகள் தான்... சுப்ரீம்கோர்ட்டில் நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடி வெற்றி பெற்றவர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் தான்... ஸ்டாலின் இதனை திசை திருப்பும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்... தமிழ்நாட்டிற்காக 31,000 கோடி ரூபாய் அளவிற்கு நலத்திட்டங்களை வழங்க வந்த பிரதமரிடம் ஒப்பாரி வைப்பதற்கு பதிலாக, நளினி சிதம்பரத்தின் வீட்டிற்கு தினமும்போய், ஸ்டாலின் ஒப்பாரி வைக்க வேண்டியதுதானே?" என்றும் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

நளினி சிதம்பரம்
ஆக, 2வது அஸ்திரமான நீட் விவகாரத்தை இரு கூட்டணி கட்சிகளுமே பெரிதாக்கி வருகின்றன.. ஏற்கனவே அண்ணாமலை சொன்ன ஊழல் புகார்களுக்கு இதுவரை திமுக மேலிடம் வாயே திறக்கவில்லையே? என்று பாஜக தலைவர்களே கேள்வி எழுப்பி வரும் நிலையில், 2வது பிரச்சனையை கிளப்பி உள்ளனர்.. இதற்கு திமுக தரப்பு என்ன சொல்ல போகிறது என்று தெரியவில்லை.. ஆனால், பாஜக அள்ளி வீசும் குற்றச்சாட்டுகளை மிக கவனத்துடன் கையாள வேண்டும், திமுக தம்பிகள் அசால்ட்டாக எடுத்து கொள்ளக்கூடாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் எச்சரித்தது இங்கு நாம் குறிப்பிட வேண்டி உள்ளது..!












Click it and Unblock the Notifications