அதிமுக 4 சீட் கூட வெல்லாது.. செங்கோட்டையனை தொடர்ந்து.. தவெகவுக்கு ஒரு படையே வருது.. நாஞ்சில் சம்பத்!
சென்னை: செங்கோட்டையனை தொடர்ந்து அதிமுகவில் உள்ள ஏராளமான தலைவர்கள் தவெகவுக்கு செல்வார்கள் என்றும், 2026 சட்டசபைத் தேர்தலில் அதிமுக 4 தொகுதிகளை வெல்வதே கடினம் என்றும் திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். நாஞ்சில் சம்பத் அளித்த நேர்காணலை முழுமையாக ஒன் இந்தியா தமிழ் யூடியூப் பக்கத்தில் காணலாம்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், திடீரென தவெகவில் இணைந்துள்ளார். நேற்று முன்தினம் தவெகவில் இணைந்த செங்கோட்டையன், நேற்று சொந்த ஊரான கோபிச்செட்டிபாளையம் சென்றார். கோவை வந்த நொடி முதல் கோபிச்செட்டிபாளையம் வரை அவருக்கு தவெகவினரும், செங்கோட்டையன் ஆதரவாளர்களும் மிகப்பெரிய வரவேற்பை அளித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் தவெகவினர் மத்தியில் செங்கோட்டையன் பேசுகையில், இன்னும் பல முன்னாள் அமைச்சர்கள் வரப் போகிறார்கள். டிசம்பருக்குள் தவெக கூட்டணி விரிவடையும் என்று தெரிவித்திருக்கிறார். இது தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. இதுதொடர்பாக ஒன் இந்தியா தமிழுக்கு திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக நாஞ்சில் சம்பத் பேசுகையில், தவெகவுக்கு இது மிகப்பெரிய பலத்தை கொடுக்கும். செங்கோட்டையனின் நகர்வு எடப்பாடி பழனிசாமியின் அரசியல் இருப்பை இது கேள்விக்குறியாகி இருக்கிறது. கொடுக்கும் பணியை சிறப்பாக செய்யக் கூடியவர் செங்கோட்டையன். திமுகவில் எப்படி துரைமுருகன் இருக்கிறாரோ, அதுபோல் அதிமுகவில் செங்கோட்டையன் இருந்து வந்தார்.
சசிகலா செய்த தவறு எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியது தான். அதன்பின் எடப்பாடி பழனிசாமி பதவி கொடுத்தவர்களுக்கே பாவத்தை செய்கிறார். சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை தொடர்ந்து செங்கோட்டையனையும் அதிமுகவில் இருந்து நீக்கிவிட்டார். செங்கோட்டையன் ஒருங்கிணைய வேண்டும் என்பதை தவிர வேறு ஒன்றும் சொல்லவில்லை.
77 வயதில் ஒரு கட்சியில் போய் சேர்ந்து உடனே ஒரு பதவியை வாங்கியது தமிழ்நாடு அரசியலுக்கே புதியது. மதுரை முதல் கன்னியாகுமரி வரை அதிமுகவுக்கு ஒரு தொகுதி கூட கிடையாது. எடப்பாடி பழனிசாமி தலைமையேற்ற பின் அத்தனை தேர்தல்களிலும் அதிமுக தோல்வி. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 13 தொகுதிகளில் 3வது இடம். ஒரு தொகுதியில் 4வது இடம்.. ஒரு தொகுதியில் டெபாசிட் காலி..
எடப்பாடி பழனிசாமி இனி மீண்டு வர முடியாத நிலையை உருவாக்கி இருக்கிறது. அதேபோல் செங்கோட்டையன் தவெகவுக்கு சென்றது திமுகவுக்கும் சிக்கல்தான். தமிழ்நாட்டில் திமுக மற்றும் தவெக இடையில் தான் போட்டி உள்ளது. தவெகவை பார்த்து திமுக பயப்பட வேண்டிய நிலை வந்துவிட்டது. செங்கோட்டையனுக்கான சீனியாரிட்டிக்கு மரியாதை கொடுத்துள்ளார்.
அதேபோல் அதிமுகவை ஒரு பொருட்டாகவே விஜய் கருதவில்லை.. அதிமுக ஒரு கோமா நிலைக்கு வந்துவிட்டது. டிசம்பர் 10ஆம் தேதிதான் அதிமுகவின் கடைசி பொதுக்குழு.. செங்கோட்டையனுக்கு இன்னும் ஏராளமான அதிமுக தலைவர்கள் தவெகவுக்கு செல்லப் போகிறார்கள். விஜய் ஓடுகிற குதிரை.. அதற்கேற்ப செங்கோட்டையனும் சென்று சேர்ந்துள்ளார்.
இந்த தேர்தலில் அதிமுகவுக்கு 4 தொகுதிகள் கிடைப்பதே கடினம்.. எப்போது பாஜகவுடன் கூட்டணி என்று அதிமுக முடிவு எடுத்ததோ, அப்போது கரை சேர முடியாது என்று தொண்டர்கள் நம்பிவிட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications