உழைச்சா மரியாதையே இல்லை.. பின்னால் வந்தவங்க எம்பி எம்எல்ஏ ஆகிட்டாங்க! கொட்டித் தீர்த்த ஆர்.எஸ் பாரதி
சென்னை : ஒரே கொடி, ஒரே கட்சி என இருந்ததால் பதவி கிடைக்கவில்லை. உழைத்தவர்களுக்கு சீட் கிடைக்காமல், உழைக்காதவர்கள் பதவியில் வந்து உட்கார்ந்து உள்ளனர் என திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர்.எஸ்.பாரதி ஆதங்கம் தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக திமுகவினர் பலரும் சமூக வலைதளங்களில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைவுக்குப் பிறகு அக்கட்சியின் செயல் தலைவராக இருந்த ஸ்டாலின் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு நடந்த தேர்தலில் மக்களை சந்தித்து தமிழக முதல்வராகவும் உள்ளார்.
அவரது அமைச்சரவையில் பல புதிய முகங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அதே நேரத்தில் அதிமுகவில் இருந்து வந்த பலருக்கும் எம்.எல்.ஏ. வாய்ப்பு, அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டது. இது குறித்து திமுகவினரே சமூக வலைதளங்கள் தங்கள் அதிருப்தியை பதிவு செய்து வந்தனர்.
ஆன்லைன் ரம்மி..அரசாணை பிறப்பிக்க தாமதம்..உயிர்பலிக்கு திமுக அரசே காரணம்.. அண்ணாமலை புகார்

அதிமுக மாஜிக்கள்
முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், அதன்பிறகு ஜெயலலிதா காலத்தில் கட்சியிலும் ஆட்சியிலும் அதிகாரம் மிக்க நபர்களாக வலம் வந்த பலர் தற்போது திமுக ஆட்சியிலும் அமைச்சர்களாக உள்ளனர். அந்த வகையில் அதிமுகவில் சக்தி வாய்ந்த தலைவர்களாக இருந்த எ.வ.வேலு, எஸ்.ரகுபதி, ஈரோடு முத்துச்சாமி, அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், செந்தில்பாலாஜி, சேகர் பாபு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உள்பட 8 பேர் இப்போது திமுகவின் அமைச்சர்களாகி உள்ளனர்.

அமைச்சர்களில் 25 சதவீதம்
ஆனால் அமைச்சரவையில் சிறப்பாக செயல்படுபவர்களாகவும் அவர்கள் இருக்கின்றனர் என திமுக தரப்பு கூறி வருகிறது. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த சில நாட்களிலேயே செந்தில் பாலாஜிக்கும், தங்க தமிழ்ச்செல்வனுக்கும் மாவட்டச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தலிலும் வாய்ப்பளிக்கப்பட்டது. அதற்கு முன் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், எ.வ.வேலு, சேகர் பாபு உள்ளிட்டோரும் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தவர்கள் தான். தற்போது அமைச்சர்களாக இருப்பவர்களில் கிட்டத்தட்ட 25 சதவீதம் மாஜி அதிமுகவின் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆர் எஸ் பாரதி
அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு எடுத்த எடுப்பிலேயே மாவட்ட செயலாளர் எம்எல்ஏ அமைச்சர் என பதவிகள் வாரி வழங்கப்பட்டது அந்தந்த மாவட்ட திமுக உடன் பிறப்புகளை அதிருப்தியில் ஆழ்த்தினாலும் அதனை அவர்கள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இந்நிலையில் முதன்முறையாக பின்னால் வந்தவர்களுக்கு எம்பி எம்எல்ஏக்கள் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. கட்சியில் உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லை என வெளிப்படையாக ஆதங்கத்தை கொட்டி தீர்த்து இருக்கிறார் திமுக மூத்த தலைவரான ஆர் எஸ் பாரதி.

கட்சியில் பரபரப்பு
கடந்த சில நாட்களாக திமுக தரப்பிலிருந்து பாஜகவுக்கு பதிலடி கொடுக்கும் முக்கிய தலைவர்களில் ஒருவராக ஆர்எஸ் பாரதி இருக்கிறார். குறிப்பாக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த தலைவர்களை விமர்சிப்பது ஆர் எஸ் பாரதியின் வழக்கமாக இருக்கிறது. இதை அடுத்து பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் ஆர்எஸ் பாரதிக்கு தட்டு அனுப்பும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். கடந்த வாரம் பரபரப்பாக பேசப்பட்ட ஆர் எஸ் பாரதி தற்போது புதிய பரபரப்பு ஒன்றினை பற்ற வைத்திருக்கிறார்.

ஒரே கட்சி ஒரே கொடி
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் ஆர்எஸ் பாரதி," ஒரே கட்சி ஒரே கொடி என இருந்த தனக்கு 63 வயதில் தான் எம்பி பதவியே கிடைத்தது. இவையெல்லாம் வேறு வழியில்லை.. ஜீரணித்துக்கொள்ள தான் வேண்டும். கட்சியில் துரோகம் செய்துவிட்டு முதுகில் குத்தி விட்டு சென்றவர்கள் பின்னால் வந்து கொஞ்சுவார்கள். அதனால் நான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறேன். நாங்கள் கொண்டுவந்த கட்சியில் சேர்த்தவர்கள் எல்லாம் எம்பி அமைச்சராகிவிட்டனர்.

திமுகவினர் கருத்து
நாங்கள் இன்னமும் அப்படியேதான் இருக்கிறோம்.. கட்சியில் எவ்வளவோ கஷ்டப்பட்டாலும் நம்மளை ஒதுக்கி விடுவார்கள். ஆனால் அதை எல்லாம் சகித்துக் கொண்டு கட்சியில் ஒரு தொண்டனாக இருக்க வேண்டும். பதவி ஒருநாள் அதுவாகவே கிடைக்கும். தற்போது ஆர் எஸ் பாரதியின் இந்த பேச்சு தான் சமூக வலைதளங்களில் பரபரப்பினை பற்ற வைத்திருக்கிறது. என்ன இருந்தாலும் திமுகவில் மூத்த பதவியில் இருக்கும் ஒருவர் இவ்வாறு பேசக்கூடாது என சிலரும் ஆர் எஸ் பாரதி பேசி இருப்பது உண்மைதான் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை என சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.