SIR வேண்டாம்.. இது ஆளும் கட்சிக்கு சாதகமான அரசியல் சூழ்ச்சி.. சென்னை புஸ்ஸி ஆனந்த் குற்றச்சாட்டு
சென்னை: SIR எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து தவெக சார்பில் இன்று மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்று பேசினார். அப்போது, ‛‛படித்தவர்களே விண்ணப்பங்களை நிரப்ப சிரமப்படுகிறார்கள். அப்படியென்றால் பாமர மக்கள் என்ன செய்வார்கள். நாம் கேள்வி கேட்க யாரிடமும் முறைவான, தெளிவான பதில் இல்லை. சர்வர் பிரச்சனை என்கிறார்கள். தொழில்நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இது கோளாறு அல்ல. குளறுபடி. இது அலட்சியம் அல்ல. ஆளும் கட்சிக்கு சாதகமான அரசியல் சூழ்ச்சி'' என்று கடுமையாக தாக்கி பேசினார்.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்பட 8 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்கள் என்று மொத்தம் 12 இடங்களில் SIR எனும் வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. இதற்கு தமிழகத்தில் திமுக, அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதன்மூலம் ஏராளமான வாக்காளர்கள் தங்களின் வாக்குரிமையை இழப்பார்கள் என்று கூறி வருகின்றனர். அதோடு உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு விஜயின் தவெகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் கைவிட வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
இந்நிலையில் தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று தவெகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரசார நிர்வாக பிரிவின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.அப்போது SIR நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் பேசியதாவது:
இன்று விஜய் ஆணைப்படி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. நாம் இப்படி போராடு சாதாரண கோரிக்கைக்காக அல்ல. நமது நாட்டின், நமது மாநிலத்தின் ஜனநாயகத்தின் ஆணிவேரையே அசைத்து பார்க்கும் மாபெரும் விஷயத்துக்காக நமது குரலை பதிவு செய்ய கூடியிருக்கிறோம். வாக்காளர் பட்டியில் சிறப்ப தீவிரம் திருத்தம் என்ற பெயரில் நடைபெறுவது உண்மையில் என்ன? குறிப்பிட்ட பகுதியில் உள்ளவர்கள் தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பவர்களின் பெயர்களை முன்னறிவிப்பு இன்றி கூட்டம் கூட்டமாக நீக்கப்படுகிறது என்று மக்கள் நம்மிடம் கூறுகிறார்கள்.
வீடு மாறி சென்றுவிட்டதாகவோ, இறந்து விட்டதாகவோ கூறி உயிருடன் இருக்கும் குடிமகனின் வாக்குரிமையை பறிப்பது என்பது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம். அதேபோல் கள்ள ஓட்டு போடுவதற்காக ஒரே நபர்களின் பெயர்கள் கூடுதலாக சேர்க்கப்படுவதாக சொல்கிறார்கள். இது எதை காட்டுகிறது? நேர்மையாக தேர்தலை நடத்த ஆட்சியாளர்களுக்கு விருப்பம் இல்லை. அதிகாரத்தின் துணையோடு குறுக்கு வழியில் வெல்ல துடிக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.
பழைய வாக்காளர்கள் முதல் புதிய வாக்காளர்கள் வரை அனைவருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. படித்தவர்களே விண்ணப்பங்களை நிரப்பசிரமப்படுகிறார்கள். அப்படியென்றால் பாமர மக்கள் என்ன செய்வார்கள். நாம் கேள்வி கேட்க யாரிடமும் முறைவான, தெளிவான பதில் இல்லை. சர்வர் பிரச்சனை என்கிறார்கள். தொழில்நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இது கோளாறு அல்ல. குளறுபடி. இது அலட்சியம் அல்ல. ஆளும் கட்சிக்கு சாதகமான அரசியல் சூழ்ச்சி. இதனால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை வேண்டாம்'' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications