இபிஎஸ் இலக்கு..ஈரோடு கிழக்கு! எடப்பாடி பழனிசாமியை சுத்துப் போடும் ‘மாஜிக்கள்’! இப்பவே ஆரம்பிச்சாச்சு
சென்னை : பல்வேறு சிக்கல்கள் இருந்தாலும் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக எடப்பாடி தரப்பு போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் தற்போது இருந்தே சில முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி நெருக்கி வருவதாக சில தகவல்கள் உலாவுகின்றன.
பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளது. எதிர்பார்த்தது போலவே இந்த தேர்தலிலும் பலமுனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க பல்வேறு சிக்கல்களுக்கு இடையிலும் அதிமுக போட்டியிடுவது உறுதியாகியிருக்கிறது. இதனை எடப்பாடி பழனிச்சாமி தரப்பும் உறுதி செய்திருக்கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி
கடந்த சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி ஜிகே வாசனின் தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. அக்கட்சி சார்பில் போட்டியிட்ட யுவராஜ் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவேராவிடம் சுமார் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார். இந்த நிலையில் தற்போதைய சிக்கல்கள் காரணமாக மீண்டும் ஜிகே வாசன் கட்சிக்கு அந்த தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்ப்புகள் எழுந்தன. ஆனால் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த தேர்தலை நேரடியாக சந்திக்க எடப்பாடி தரப்பு திட்டமிட்டுள்ளது.

காங்கிரஸ் போட்டி
திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் போட்டியிட போவதாக யூகங்கள் கிளம்பி இருக்கும் நிலையில் அக்கட்சி தலைவர் கே எஸ் அழகிரி அதனை உறுதிப்படுத்தினார். இந்த நிலையில் திமுக கூட்டணியை போல் அல்லாமல் அதிமுகவே போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு இருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம் திமுக கூட்டணி மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறிவரும் அதிமுக இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறது.

எடப்பாடி பழனிச்சாமி
குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி அணி நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த தேர்தலை கருதுகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் அதிமுகவுக்கு மற்றொரு சிக்கலும் இருக்கிறது. ஓபிஎஸ் இபிஎஸ் ஆகியோர் தற்போதைய தேர்தல் ஆணைய தரவுகளின் படி அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளராக தொடர்கின்றனர். ஒருவேளை தேர்தலில் எடப்பாடி தரப்பு போட்டியிட்டாலும் சின்னத்துக்கு கையெழுத்து இட வேண்டியது ஓ.பன்னீர்செல்வம். ஓ.பன்னீர்செல்வம் தரப்பு போட்டியிட்டாலும் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்து விட வேண்டும்.

மோதல் நீடிக்கும்
தற்போது இருவருக்கும் இடையே மோதல் நீடிக்கும் நிலையில் இரு தரப்பும் வேட்பாளர்களை அறிவித்தால் கண்டிப்பாக இரட்டை இலை சின்னம் முடக்கப்படும். ஆனால் இரட்டை இலை சின்னம் தங்களுக்கு தான் என இரு தரப்புமே கூறி வருவது மேலும் சிக்கலை அதிகரித்திருக்கிறது. இது ஒரு புறம் இருக்க எடப்பாடி தரப்பில் போட்டியிடப் போவது யார் என்று எதிர்பார்ப்பும் எகிறி இருக்கிறது. தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் முக்கிய முன்னாள் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில் பலர் இடைத்தேர்தலில் போட்டியிட முயற்சி செய்து வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர்கள்
குறிப்பாக கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்த முன்னாள் அமைச்சர்கள் பலரும் தற்போதைய தேர்தலில் போட்டியிடலாமா என ஆலோசித்து வருகின்றனர். மேலும் முகமறிந்த நபர் போட்டியிட்டால் எளிதில் வெற்றி கிடைக்கும் என்பது எடப்பாடி தரப்பின் எண்ணமாக இருக்கிறது. இதனால் கடந்த தேர்தலில் தோல்வியுற்ற ஜெயக்குமார் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் இந்த தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல்கள் உலாவுகின்றன. அதே நேரத்தில் தேர்தலில் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்களுக்கு தான் நிச்சயம் வாய்ப்பு என எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எது எப்படி இன்னும் ஒரு வாரத்திற்குள் அதிமுக எடப்பாடி தரப்பு வேட்பாளர் யார் என்று அறிவிப்பு வந்துவிடும். அதே நேரத்தில் ஓபிஎஸ் வேட்பாளரை அறிவிப்பார் என்கின்றனர் தேனி தரப்பினர். இதனால் தேர்தல் கணக்கை விட அதிமுக கணக்கு என்னவாக இருக்கும் என்பதை பல நிலவரம் ஆக இருக்கிறது.












Click it and Unblock the Notifications