தென் மாவட்ட எல்லைகளில் "கை" வைக்குமா மறுவரையறை? உள்ளே ஒளிந்திருக்கும் கணக்கு இதுதான்
சென்னை: தமிழ்நாட்டில் தொகுதி எல்லைகளை மாற்றி அமைக்கும் தொகுதி மறுவரையறை நடந்தால், வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களுக்கு இடையே எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் வருமா என்ற பேச்சு இப்போது கிளம்பியிருக்கிறது.. குறிப்பாக, மக்கள் தொகை அதிகமுள்ள இடங்களுக்கு கூடுதல் தொகுதிகள் கிடைக்கும் பட்சத்தில், மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது...!!
முதல் விஷயம், எல்லா ஊரிலும் மக்கள் தொகை ஒரே வேகத்தில் கூடுகிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.. மக்கள் தொகை அதிகரிக்கும் விதமும் ஒரே மாதிரி கிடையாது.. மக்கள் தொகை விகிதம், தொகுதி எண்ணிக்கை, எல்லைகள் போன்ற அம்சங்களைப் பார்த்துத்தான் முடிவு செய்வார்கள். மக்கள் தொகை கூடினாலே உடனே புதிய தொகுதி வந்துவிடும் என்று சொல்ல முடியாது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு
2001 முதல் 2011 வரையிலான கணக்கெடுப்பில் சில மாவட்டங்களுக்கு இடையே மக்கள் தொகை வளர்ச்சியில் வித்தியாசம் இருப்பது உண்மைதான். ஆனால், எல்லா வடக்கு, மேற்கு மாவட்டங்களையும் தென் மாவட்டங்களையும் மொத்தமாக ஒப்பிட்டு, பெரிய வித்தியாசம் இருக்கிறது எனப் பொதுவாக சொல்வதற்கு போதுமான ஆதாரம் இல்லை.
அந்த 10 வருடங்களில் தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 15.6 சதவீதம் கூடியது. ஆனால், காஞ்சிபுரத்தில் 38.69 சதவீதமும், திருவள்ளூரில் 35.25 சதவீதமும், திருப்பூரில் 28.70 சதவீதமும் உயர்ந்தது.
தென் மாவட்டங்களிலும் ஒரே மாதிரி இல்லை. மதுரையில் 17.95 சதவீதம், தேனியில் 13.69 சதவீதம், ராமநாதபுரத்தில் 12.63 சதவீதம் உயர்ந்தது. கன்னியாகுமரியில் 11.17, விருதுநகரில் 10.96, தூத்துக்குடியில் 9.14 சதவீதம் என ஏறியிருக்கிறது. இந்த டேட்டாக்கள் அனைத்தும் 2001-2011 கணக்கெடுப்பில் உள்ளன.
கூடுதல் தொகுதிகள் கிடைக்குமா?
தொகுதி மறுவரையறையின்போது ஒரு பகுதியில் எத்தனை பேர் வசிக்கிறார்கள் என்பது முக்கியமாகப் பார்க்கப்படும். "ஒரு பகுதியில் மக்கள் தொகை அதிகமாக இருந்தால், புதிய தொகுதிகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்படலாம். அதற்கேற்ப தொகுதி எல்லைகளும் மாற்றி அமைக்கப்படலாம்".
இதனிடையே, ஒவ்வொரு மாநிலத்திலும் இப்போதுள்ள எம்பி மற்றும் எம்எல்ஏ தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது. இது மத்திய அரசின் முன்மொழிவு மட்டுமே.. அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துவிட்டதாலேயே இது சட்டமாகிவிட்டது என்று அர்த்தமில்லை. இப்போது இருப்பதைவிட அதிக தொகுதிகளை உருவாக்குவதுதான் இந்த முன்மொழிவின் நோக்கம்.
அதேநேரம், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டுக்கு இப்போதுள்ள எம்பி தொகுதிகளின் பங்கு, 2051-ம் ஆண்டு வரை அப்படியே தொடர வேண்டும் என்றும் இந்தத் திட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது.
புதிய தொகுதி எல்லைகளை வரைய, இந்த சட்டம் நடைமுறைக்கு வரும் நாளில் வெளியாகியிருக்கும் சமீபத்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்களை பயன்படுத்த வேண்டும் என்று மசோதாவில் சொல்லப்பட்டுள்ளது.. இப்போது கடைசியாக வெளியான முழுமையான கணக்கெடுப்பு 2011-ம் ஆண்டைச் சேர்ந்தது.
இதனால் தமிழ்நாட்டுக்கு மொத்தமாக எத்தனை தொகுதிகள் கூடும் என்பது ஒரு பக்கமிருந்தாலும், எந்தெந்த பகுதிகளில் அந்தத் தொகுதிகள் உருவாகும் என்பதும் முக்கியமான கேள்வியாக நிற்கிறது.
தென் மாவட்டங்களில் என்னாகும்?
மதுரை, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மக்கள் தொகை வளர்ச்சி ஒரே சீராக இல்லை. 2001-2011 கணக்கெடுப்பில் மதுரையின் வளர்ச்சி மாநிலச் சராசரியைவிட அதிகமாக இருந்தது. ஆனால், தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி போன்றவற்றில் வளர்ச்சி குறைவாக இருந்தது.
இதனால் இந்த மாவட்டங்களில் தொகுதி எல்லைகள் மாற வாய்ப்பு உள்ளது. ஆனாலும், மக்கள் தொகை வளர்ச்சித் தரவுகளை மட்டும் வைத்து இந்த மாவட்டங்களின் எல்லைகள் மாறும் என்று உறுதியாக சொல்ல முடியாது. ஒரு தொகுதியில் உள்ள சில ஊர்களை பிரித்து அருகிலுள்ள தொகுதியுடன் சேர்க்கலாம்; மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளைப் பிரித்துப் புதிய தொகுதிகளையும் உருவாக்கலாம்.
ஆனால், மதுரை, தேனி அல்லது வேறு எந்த மாவட்டத்திலும் எத்தனை தொகுதிகள் வரும் என்பதையும் உறுதியாக சொல்ல முடியாது. எந்தெந்த ஊர்கள் எந்த தொகுதிக்குள் வரும் என்பதும் இப்போதைக்கு தெரியாது. எல்லைகள் இறுதி செய்யப்பட்ட பிறகுதான் இந்த விவரங்கள் தெரியவரும்.
நாடாளுமன்றத்தில் குரல் ஒலிக்குமா
அப்படியென்றால் தென் மாவட்ட பிரச்சினைகள் நாடாளுமன்றத்தில் பேசப்படுவது பாதிக்கப்படுமா என்ற சந்தேகம் வருவது இயல்புதான்.. பிரதிநிதித்துவம் என்பது வெறும் எம்பிக்களின் எண்ணிக்கை மட்டுமே கிடையாது.. ; மக்கள் தேர்ந்தெடுக்கும் எம்பிக்கள் அந்த ஊர்ப் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எடுத்துச் சொல்லவும் உதவுகிறார்கள்.
மதுரை, தேனி, விருதுநகரில் விவசாயம், தண்ணீர், நீர்ப்பாசனம், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு போன்ற பிரச்சினைகள் உள்ளன. ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரியில் மீனவர் பிரச்சினைகள், கடலோரப் பாதுகாப்பு, துறைமுகம், போக்குவரத்து போன்ற கோரிக்கைகள் உள்ளன.
தொகுதி எல்லைகள் மாறினால், எந்தெந்த ஊர்கள் ஒரே தொகுதிக்குள் வருகின்றன என்பதும் மாறும். இதனால் ஒரு எம்பி பார்க்க வேண்டிய பகுதிகளும், அந்த மக்களின் பிரச்சினைகளும் மாறலாம்.
இதனால் தென் மாவட்டங்களின் சில பிரச்சினைகள் நாடாளுமன்றத்தில் பேசப்படும் விதத்திலும் மாற்றம் வரலாம் என்பது ஒரு சாத்தியமான கருத்துதான்.. ஆனால், தொகுதி எல்லை மாறுவதால் நாடாளுமன்றத்தில் பிரச்சினைகள் பேசப்படுவது கட்டாயம் மாறும் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. தொகுதிகள் கூடிவிட்டால் மட்டும் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது.. அவற்றை எம்.பி.க்கள் எவ்வளவு முக்கியமாக எடுத்துப் பேசுகிறார்கள் என்பதும் முக்கியம்.
தென் மாவட்ட கவலை
மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் எம்.பி. தொகுதிகளின் பங்கு குறையாமல் தொடர வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் திட்டம். ஆனால், இந்தத் திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்துவிடுமோ என்ற பயத்துக்கு இந்தத் திட்டம் ஒரு பதிலாக இருக்கிறது. ஆனாலும், தமிழ்நாட்டுக்குள்ளேயே வடக்கு, மேற்கு, தெற்குப் பகுதிகளுக்கு தொகுதிகளை எப்படிப் பிரிப்பார்கள் என்ற கேள்வி இன்னும் இருக்கிறது.
தொகுதி எல்லைகள்
அதேபோல, மக்கள் தொகை வளர்ச்சி குறைவாக இருப்பதாலேயே ஒரு மாவட்டத்தின் தொகுதிகள் குறைந்துவிடும் என்று சொல்ல முடியாது. அந்த மாவட்டத்தில் எத்தனை பேர் வசிக்கிறார்கள், அருகில் எந்தெந்த ஊர்கள் இருக்கின்றன, அந்தப் பகுதியின் நில அமைப்பு எப்படி இருக்கிறது, இடஒதுக்கீடு எப்படி அமைகிறது என்பதையெல்லாம் பார்த்துத்தான் தொகுதி எல்லைகளை முடிவு செய்வார்கள். அதனால், தென் மாவட்டங்களின் தொகுதிகள் குறையும் என்று இப்போதே முடிவு செய்ய முடியாது.
அதேநேரம், புதிய தொகுதிகள் உருவாகும்போது தென் மாவட்டங்களின் விவசாயம், தொழில் வளர்ச்சி, நீர்ப்பாசனம், மீனவர்கள், வேலைவாய்ப்பு போன்ற பிரச்சினைகளுக்கும் உரிய கவனம் கிடைக்க வேண்டும் என்பதே அங்குள்ள மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.., பொறுத்திருந்து பார்ப்போம்!!


Click it and Unblock the Notifications
