உயிர் பறிக்கும் நீட் - தொடரும் தற்கொலைகள்.. என்னதான் தீர்வு
சென்னை: நீட் தேர்வு பயம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்வது தொடர்கிறது. மாணவர்களே நீட் தேர்வு குறித்து பயம் வேண்டாம். நிச்சயம் நம்மால் சாதிக்க முடியும். மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய முடியும். தற்கொலை எண்ணம் வந்தால் 104க்கு அழையுங்கள். உங்களுக்கு நல்ல ஆலோசனைகள் கிடைக்கும்.
சேலம் மாவட்டம், மேட்டூர், கூழையூரைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார் என்பவரது இரண்டாவது மகன் தனுஷ் ஏற்கெனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்தார்.
இந்நிலையில இந்த முறை நீட் தேர்விற்கு முழுமையாக தயாராகாமல், அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வை எதிர்கொள்ள அச்சப்பட்டு, இந்தமுறையும் தோல்வி அடைந்தால் தனது மருத்துவர் கனவு கலைந்துவிடுமோ என்ற அச்சத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் .

பள்ளியில் முதலிடம்
இதேபோல் அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகள் கனிமொழி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 562 மார்க் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவி கனிமொழி நீட் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை எழுதியுள்ளார்.

அதிர்ச்சி
இந்நிலையில் நீட் தேர்வு கடினமாக இருந்ததால் சரியாக எழுதவில்லை என தந்தையிடம் கூறி மன உளைச்சலில் இருந்த மகளை தந்தை தேற்றியுள்ளார் எனினும் மருத்துவ கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் நேற்று தனிமையில் வீட்டில் இருந்த கனிமொழி வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த இரண்டு சம்பவங்களும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பயம்
ஏற்கனவே நீட்தேர்வு காரணமாக அனிதா உள்பட 10க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மாணவர்களின் தற்கொலைக்கு முக்கிய காரணம் நீட் தேர்வு குறித்த பயம். குழப்பம். நீட் தேர்வில் வெற்றி பெறாவிட்டால் வாழ்க்கையே இல்லை என்பதுபோல் டாக்டர் ஆகவே முடியாது என்று நினைப்பது, தங்கள் எதிர்காலமே இனி தொலைந்துபோனதாக கருதுவது போன்றவை தான் தற்கொலைக்கான காரணங்களாக பார்க்கப்படுகிறது,.
Recommended Video

சிபிஎஸ்இ பாடத்திட்டம்
பள்ளி மாணவர்கள் 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றும், நீட் தேர்வில் தோல்வி அடைய காரணம், அவர்களின் இயலாமை அல்ல. தேர்வுக்கு உரிய பாடத்திட்டங்கள் என்னென்ன என்பது தெரியாதது தான். முழுக்க முழுக்க சிபிஎஸ்இ பாடத்திட்ட அடிப்படையில் நடத்தப்படும் நீட் தேர்வை மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் எதிர்கொள்வது சிரமமானது. அதற்கு தனி பயிற்சி தேவை என்பதே எதார்த்தமான உண்மை.

என்ன செய்ய வேண்டும்
டாக்டர் ஆக விரும்பும் மாணவர்கள் 9 ம் வகுப்பில் இருந்தே பாடத்திட்டங்களை முறையாகப்படிப்பது, நீட் தேர்வுக்கு உரிய படங்களை படித்து தயார் ஆவது தான் சிறந்த வழியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் மற்ற மாநிலங்களில் அல்லது நீட்தேர்வில் தேர்ச்சி பெற்ற பலர் கோச்சிங் சென்டரில் படித்தவர்கள் ஆக இருக்கிறார்கள். அதேநேரம் வீட்டில்இருந்தே இதற்கு தயாராக வேண்டும் என்றால், எந்தெந்ந பாடங்கள், அவற்றிற்கான புத்தகங்கள் இவற்றை கல்வியாளர்களின் உதவியுடன் தேர்வு செய்து ஓராண்டாவது முயற்சிகளை தொடங்க வேண்டும். ஏனெனில் நாடு முழுவதும் இதற்கு என்றே மாணவர்கள் தயாராகி வருவதால் அவர்களுடன் போட்டி போடுவதற்பே முழுமையாக உள்வாங்கி படிக்க வேண்டும். இதற்கு அரசும் உதவ வேண்டும். இதுதான் சிறந்த வழி.

ஓராண்டு தேவை
ஏனெனில் ஏராளமான மாணவர்கள் 12ம் வகுப்பு முடித்துவிட்டு ஓராண்டை முழுமையாக அர்பணித்து நீட் தேர்வுக்கு என்றே தயார் ஆகி அதில் தேர்ச்சி பெற படிக்கிறார்கள். எனவே நீட் தேர்வு குறித்து என்ன நடக்கிறது. என்ன செய்ய வேண்டும். இதில் உள்ள சூழல்களை ஆசியர்கள் மாணவர்கள் விளக்கி கூற வேண்டும். அத்துடன் நீட் தேர்வு எழுதும் அல்லது தோல்வி அடையும் மாணவர்களுக்கு உரிய கவுன்சிலிங் கொடுத்து மனதைரியம் கொடுக்க வேண்டும். அதை தமிழக அரசு முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ளது. இது நல்ல அறிவிப்பு.

தற்கொலை தீர்வல்ல
உண்மையில் நீட் தேர்வை ரத்து செய்வது அல்லது தமிழகத்திற்கு விலக்கு தருவது என்பது மத்திய அரசின் கைககளில் உள்ள விஷயம் ஆகும். அதை மத்திய அரசு நினைத்தால் மட்டுமே ரத்து செய்ய முடியும். மாநில அரசுகள் அழுத்தம் மட்டுமே தர முடியும். ஏனெனில் கல்வி பொதுப்பட்டியலில் இருக்கிறது. மாநில பட்டியலில் இல்லை. எனவே நீட் தேர்வு விவகாரத்தில் நடக்கும் அரசியலை கண்டுகொள்ளாமல் மாணவர்கள் தயாராவது மட்டுமே இப்போதைக்கு ஒரே வழி. மாணவர்களே எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வு அல்ல. வேண்டாம் விபரீத முடிவு. உங்களுக்கு தற்கொலை எண்ணம் வந்தால் உடனே 104 என்ற எண்ணிற்கு அழையுங்கள். தன்னம்பிக்கை தான் வாழ்க்கை. எதையும் கடந்து போவோம். நிச்சயம் ஒரு நாள் விரும்பிய மாற்றம் நடக்கும்.












Click it and Unblock the Notifications