மயிலாப்பூரில் ரேஷன் கடைக்கு போன எஸ்வி சேகர்.. கைரேகை, விழிரேகையால் வந்த சத்திய சோதனை
சென்னை: உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் அவர்களை டேக் செய்துள்ள நடிகர் எஸ்வி சேகர், தயவு செய்து ரேஷன் பொருட்கள் வாங்குமுன் வைக்கப்படும் கைரேகை விழிரேகை கொடுப்பது போல கொடுமை வேறெதுவுமில்லை. இந்த பழைய மெஷின்களை மாற்றுங்கள். 8 முறை கைரேகை 7 முறை விழி ரேகைக்குப்பின் பதிவாகியது. 9வது மண்டலத்தில் உள்ள 126 வதுவார்டில் இதுதான் நிலை என்று நடிகர் எஸ்வி சேகர் புகைப்படத்துடன் கோரிக்கை வைத்துள்ளார்.
ரேஷன் கார்டுடன் ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வாங்க சென்றால், வயதானவர்களுக்கு கைரேகை, கண் கருவிழி நேரகை பதிவாகாமல் இருப்பதாக புகார்கள் உள்ளது. பலருக்கு வயதின் மூப்பு காரணமாக கண் விழி பதியவில்லை என்றும், கைரேகை பதியவில்லை என்றும் கூறப்படுகிறது. அவர்கள் மீண்டும்ஆதார் அலுவலகம் சென்று பயோமெட்ரிக்கை புதுப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. இதுபற்றி தான் நடிகர் எஸ்வி சேகர் கோரிக்கை வைத்துள்ளார்.

எஸ்வி சேகர் பிரபலம் என்பதால் அவரால் அமைச்சரை டேக் செய்து கேள்வி கேட்க முடிகிறது. சாமானிய மக்கள் ரேஷனில் பொருள் வாங்க முடியாமல் போகும் போது அமைச்சரை டேக் செய்து பிரச்சனையை கிளப்ப முடியாது. காரணம் அவர்களுக்கு ட்விட்டரை பயன்படுத்த தெரியாது. அதிகாரிகளை அழைத்து கூறவும் முடியாது. அவர்கள் பிரச்சனை ரேஷன் கடை ஊழியரை தாண்டி போகாது. அவர்கள் பொதுவாக ரேஷன் கடை ஊழியர்களிடம் தான் புகார்களை கூற முடியும்.அந்த புகார் அவர்களை தாண்டி அதிகாரிகளிடம் சேருவதே கடினம் என்பது தான் நிலை.
அதே நேரம் சாமானிய வயதான மக்கள் பயோமெட்ரிக் வைக்க முடியாத காரணத்தால், அரிசி, பருப்பு, மளிகை சாமான்களை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். மீண்டும் ஆதார் இ சேவை மையத்திற்கு சென்று மாற்றிய பின்னரே அரிசி பருப்பு வாங்க முடியும் என்கிற நிலை ஏற்படுகிறது. பொதுவாக வயதாகும்போது விரல் தோலில் ஏற்படும் மாற்றங்களால் கைரேகையைச் சரியாகப் பதிவு செய்வதை கடினமாக்குகிறது. தோல் வறட்சி, காயங்கள், ரேகையில் ஏற்படும் தேய்மானம் போன்றவை சிக்கலுக்கு காரணமாகிறது.
அதேபோல் எஸ்வி சேகர் குறிப்பிட்டது போல் ஸ்கேனரின் தரமும் ஒரு காரணம். ஸ்கேனர் கருவியின் பராமரிப்பு, இணைய இணைப்பு மற்றும் சர்வர் வேகம் ஆகியவற்றாலும் பதிவு தோல்வி அடைவது அதிகமாக இருக்கிறது. 2026 ஜனவரியில் சென்னையில் பொங்கல் பரிசு விநியோகத்தின்போதும் கைரேகை மற்றும் நெட்வொர்க் பிரச்சினைகள் அதிகமாகவே எழுந்தன.
கண் கருவிழியைச் சரியாகப் படம் பிடிக்கலாம் என பலரும் நினைக்கிறார்கள், ஆனால் உண்மையில் ஸ்கேனரைச் சரியாகப் பயன்படுத்தாதது அல்லது கருவியின் கோளாறு போன்ற காரணங்களால் பதிவில் சிக்கல் ஏற்படுகிறது. மாற்று முறையாகக் கருவிழிப் பதிவு கிடைத்தாலும், அதுவும் எல்லா நேரங்களிலும் வெற்றியளிப்பது இல்லை. எனவே அரசு கைரேகை தோல்வியடைந்தால் கருவிழி அல்லது முக அடையாளச் சரிபார்ப்பு அல்லது ஒடிபி முறை மூலம் பொருட்களை வழங்க வேண்டும்.
பயோமெட்ரிக் பதிவு அல்லது நெட்வொர்க் பிரச்சினைகளுக்காக ரேஷனில் பொருள் வழங்க மறுக்கக்கூடாது. வயதானவர்கள் தொழில்நுட்பத்துக்குத் தங்களை மீண்டும் மீண்டும் நிரூபிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவது அரசுகள் வேடிக்கை பார்க்கக்கூடாது. ரேஷனில் முறைகேட்டை தடுக்கவே கைரேகை பதிவு கொண்டுவரப்பட்டிருந்தாலும், அந்த சிஸ்டத்தால் ஏழைகள் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது.இதற்கு அரசு தான் தீர்வுகளை உருவாக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications
