தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல்.. கடைசி நேரத்தில் நடந்த டிவிஸ்ட்
சென்னை: நடிகர்கள் சங்க தேர்தலுக்கு அடுத்தபடியாக பரபரப்பை எகிற வைப்பது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்களான தேர்தல் தான். பொதுதேர்தலுக்கு போட்டியாக பிரச்சாரங்கள், வாக்குறுதிகள் ,அன்பளிப்புகள், கவனிப்புகள் என வழக்கறிஞர்கள் சமூதாயத்தினர் மத்தியில் அமர்களமாக இருக்கும். கடந்த மார்ச் 30ம் தேதி 23 கவுன்சில் உறுப்பினர்கள் தேர்வு செய்ய தமிழகம் முழுவதும் 143 வழக்கறிஞர்கள் போட்டியிட்டதில் ஒன்னரை லட்சம் வாக்காளர்கள் வாக்களித்தனர்.
இதற்கான மராத்தான் வாக்கு எண்ணிக்கை ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் கடந்த ஏப்ரல் ஐந்தாம் தேதி தொடங்கி சுமார் 85 நாட்கள் நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பரணிதரன், பார் கவுன்சில் தற்போதைய தலைவர் அமல்ராஜ், அதிமுக வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் பாலமுருகன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் பால் கனகராஜ், பாமக செய்தி தொடர்பாளர் கே பாலு, முன்னாள் அரசு வழக்கறிஞர் விஜயராஜ், ஏற்கனவே உறுப்பினராக இருந்த வழக்கறிஞர் எம்.வேல்முருகன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் மோகனகிருஷ்ணன் உள்ளிட்டோரும், பெண்கள் தரப்பில்பிரசன்னா, சாவித்திரி உள்ளிட்ட மொத்தம் 23 பேர் வெற்றி பெற்றனர்.

சென்னை உயர்நீதிமன்றம் சார்பில் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற நீதிபதி வேலுமணி மற்றும் சுதர்சன சுந்தர் ஆகியோரை தலைமை நீதிபதி நியமித்தார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களிலிருந்து தலைவர் துணைத் தலைவர் அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் தேர்தல் 16ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டதும் வழக்கறிஞரகள் மத்தியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
தற்போதைய சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் தலைமையில் ஒரு அணியும், முன்னாள் பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் தலைமையில் ஒரு அணியும் களத்தில் குதித்தது.. அனைவரும் பரஸ்பர நண்பர்கள் என்றாலும் போட்டி என்று வந்ததால் களத்தில் அனல் பறந்தது..
தேர்தல் நெருங்க நேரத்தில் நடந்ததுதான் உச்சகட்டட டிவிஸ்ட் ஏற்பட்டது. வேட்பு மனுவுக்கு முதல்நாள் இரவு ஒரு போன் கால் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜூக்கு பறந்துள்ளதாம். சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் ஒரு அணியைச்சேர்ந்த சில உறுப்பினர்களை மறைத்து வைத்துள்ளதாகவும், பணபட்டுவாடா நடப்பதாகவும் தகவல் போக, சம்பந்தப்பட்ட சரக துணை ஆணையர் தலைமையில் விசாரணை நடத்த ஆணையர் உத்தரவிட்டாராம்..
இந்த தகவல் உயர்நீதிமன்ற செய்தியாளர்களுக்கும் பரவியது... இதனிடையே துணை ஆணையரும் போலீஸ் படையோடு நட்சத்திர ஓட்டலுக்கு சோதனை நடத்த சென்றபோது , நாங்கள் சுயமனதோடுதான் இங்கு உள்ளோம் என உறுப்பினர்கள் சொல்ல, ஒரு சில உறுப்பினர்கள் காவல்துறைக்கு எதிர்ப்பு தெரிவிக்க காவல்துறையும் திருப்பி விட்டது.
இந்த தகவல் இரவாக இரவாக உளவுப்பிரிவு மூலம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ரத் அரவிந்த் தர்மாதிகரிக்கு தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த தலைமை நீதிபதி, தனது சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி தேர்தலிலேயே ரத்து செய்து விடுவதாக எச்சரித்தாராம். இன்னொரு பக்கம் உளவுத்துறை போலீசார் மூலமாக தமிழக சட்டத்துறை அமைச்சர் சிடிஆர். நிர்மல்குமாருக்கும் தகவல் சென்றதாம். இரு அணி நிர்வாகிகளும் உடனடியாக சட்ட அமைச்சரை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினாராம்.
வழக்கறிஞர்கள் மத்தியில் பிளவு ஏற்படக்கூடாது என இரு அணி தரப்பு நிர்வாகிகளிடம் தனித்தனியாக விடிய விடிய பேசி, போட்டியை தவிர்க்குமாறும், ஒருவருக்கொருவர் பொறுப்புகளை விட்டுக்கொடுத்து ஏக மனதாக நிர்வாகிகளை தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டாராம் அமைச்சர் நிர்மல் குமார்.

இதற்கு ஓகே சொன்ன நிர்வாகிகள், போட்டியின்றி ஏக மனதாக முதல்நாளே செஞ்சி நீதிமன்ற வழக்கறிஞர் கே.கதிரவன் தலைவராகவும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இ.பாலமுருகன் துணைத் தலைவராகவும், அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினராக ஏற்கனவே தலைவராக இருந்த பி.எஸ்.அமல்ராஜ் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்தனர்.
பார் கவுன்சில் தேர்தல் வரலாற்றில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது இதுவே முதன்முறை என்று சொல்கிறார்கள். சூடாக தொடங்கி தேர்தல் சுபத்தில் முடிந்த நிலையில்,, சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற பார் கவுன்சில் நிர்வாகிகள், இப்பொது வழக்கம்போல நண்பர்களாக விடை பெற்று சென்றார்கள்.


Click it and Unblock the Notifications
