"புதுமை பெண் திட்டம் மட்டும் இல்லைனா.." உருக்கமாக பேசிய மாணவி.. உடனே அழைத்து முதல்வர் தந்த கிப்ட்
சென்னை: புதுமை திட்டம் மூலம் தனக்கு மாதாமாதம் வரும் ரூ.1000 தான் கல்விச் செலவுகளைச் சமாளிக்க உதவுவதாகக் கூறிய மாணவி, தனது நெகிழ்ச்சியான பயணத்தைக் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார். இதைக் கேட்ட முதல்வர் ஸ்டாலின், அப்போதே மாணவியை அழைத்து அவருக்கு ஒரு பரிசு கொடுத்தார்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் திட்டங்கள் மூலம் தாங்கள் எந்தளவுக்குப் பயன் பெற்றுள்ளனர் என்பது குறித்து விளக்கிப் பேசினர்.

புதுமைப் பெண்
அப்போது புதுமைப் பெண் திட்டம் மூலம் தான் எந்தளவுக்குப் பலன் பெற்றேன் என்பது குறித்த தகவல்களை மாணவி ஒருவர் பகிர்ந்து கொண்டார். அப்போது முதல்வரே அவரை அழைத்து கிப்ட் ஒன்றைக் கொடுத்தார். கலை, அறிவியல், தொழில்முறை படிப்புகள் உள்ளிட்ட படிப்புகளைப் படிக்கும் மாணவியருக்கு அப்படிப்புக்கான உதவித்தொகையாக மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சாப்பிடாமல் இருந்தேன்
அந்த மாணவி பேசுகையில், "நான் ராணிப்பேட்டையில் உள்ள கல்லூரியில் படிக்கிறேன். இங்கு அனைவரும் தங்கள் பெற்றோர் தங்களைப் படிக்க வைத்ததாகக் கூறினார்கள். ஆனால், நான் +2 முடித்த பிறகு, படிக்க வேண்டும் எனச் சொல்லி வீட்டில் கேட்டேன். ஆனால், பெண்கள் எல்லாம் எதற்குப் படிக்க வேண்டும்.. படிக்க எல்லாம் கூடாது எனச் சொல்லிவிட்டார்கள். படித்தே தீர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நான் 3 நாட்கள் சாப்பிடாமல் இருந்தேன்.
என்னைக் கல்லூரியில் மட்டுமே சேர்த்துவிடுங்கள் எனச் சாப்பிடாமல் இருந்தேன். கல்லூரிக்கு அப்ளிகேஷன் போடவும் கடைசி நாள் வந்துவிட்டது. அப்போது கையிலும் காசு இல்லை. அப்போது தினக்கூலியாக விவசாய வேலைக்குச் சென்று, அதில் வரும் பணத்தை வைத்துத் தான் அப்ளிகேஷன் போட்டேன்.
தாய்மாமா உதவினார்
என்னது அப்பா ஆடு மேய்க்கும் விவசாயி. அம்மாவும் கூலி வேலை செய்பவர் தான். இருவருக்குமே என்னைப் படிக்க வைக்க வேண்டும் என்ற விவரம் இல்லை. நான் படிக்க வேண்டும் எனச் சொல்லி நின்றபோது இருவருமே எனக்கு உதவவில்லை. அப்போது எனது தாய்மாமாவிடம் தான் உதவிக்குப் போனேன். அவர் தான் உதவ முன்வந்தார்.
தினக்கூலியாகப் போன காசை வைத்துத் தான் அப்ளிகேஷன் போட்டேன். எனக்குச் சீட்டும் கிடைத்தது. ஆனால், அப்போதும் எனக்காக யாரும் இல்லை. அப்போது எனது அக்காதான் எனக்கு ஆதரவாகப் பேசினார்.. 3 நாளாகச் சாப்பிடாமல் இருக்கிறார்.. எதாவது செய்து கொள்ளப் போகிறாள் என வீட்டில் சொல்லி என்னைக் கல்லூரியில் சேர்க்கச் சம்மதித்தனர்.
கல்லூரி கட்டணம்
நான் கல்லூரியில் சேர்ந்தபோதும் என்னால் கல்லூரி கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை. அப்போது கல்லூரியில் வேலை செய்த ஒருவரே கட்டணம் செலுத்தவும் எனக்கு உதவினார். புதுமைப் பெண் திட்டம் மூலம் எனக்குக் கிடைத்த பணத்தை வைத்து நான் அவருக்குத் திரும்பப் பணத்தைக் கொடுக்கப் போனேன். ஆனாலும், அவர் அந்தப் பணத்தை வாங்க மறுத்துவிட்டார். இருப்பினும் அதையும் தாண்டி அவருக்குக் கொடுத்துவிட்டு வந்தேன்.
எனக்கு இப்போது திருமணமாகிவிட்டது. ஆனாலும். புதுமைப் பெண் திட்டம் இருப்பதால் மாதாமாதம் வரும் ரூ.1000 திட்டத்தைச் சேர்த்து வைத்துப் படிப்புக்குத் தேவையானவற்றை, தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த முடிகிறது. படிப்புச் செலவுகளைச் சமாளிக்க இது உதவுகிறது. புத்தகம் வாங்க யாரிடமும் கையேந்தி நிற்கத் தேவையில்லை. இதனால் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வர் கொடுத்த கிப்ட்
நான் கணிதம் துறையைத் தேர்வு செய்துள்ளேன். எனக்குக் கணித ஆசிரியர் ஆக வேண்டும் என்பதே ஆசை. இப்போது யுஜி படிப்பிற்கு மட்டுமே புதுமைப் பெண் திட்டம் வழங்கப்படுகிறது. யுஜி படிப்போருக்கும் புதுமைப் பெண் திட்டத்தை வழங்க வேண்டும் என்பதைக் கோரிக்கையாக வைக்கிறேன்" என்றார். இதைக் கேட்டதும் முதல்வர் ஸ்டாலின் அந்த மாணவியை அழைத்து கிப்ட் ஒன்றைக் கொடுத்தார். மேலும், கணித ஆசிரியர் ஆக வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார். அருகே இருந்த தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் அந்தப் பெண்ணுக்கு வாழ்த்து தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications