தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க! ஒரு நிமிஷம் ‘கேப்டனாக’ மாறிய கேஎஸ் அழகிரி! தொண்டர்களுக்கு ‘பளார்’!
சென்னை : தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனின் நேற்று இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் அடிதடியாக மாறிய நிலையில் தன்னிடம் பேச வந்த தொண்டர்களை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி பளார் பளார் என அறைந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி என்றாலே கோஷ்டி பூசல் என்று அனைவரும் சொல்வார்கள். அந்த அளவுக்கு மூத்த தலைவர்கள் முதல் மாவட்டம், வட்டாரம் என எல்லா நிலைகளிலும் கோஷ்டி மோதல் இருக்கத்தான் செய்கிறது. இது பல நேரங்களில் வெளிப்பட்டும் இருக்கிறது.
ஈவிகேஎஸ் இளங்கோவன், ப சிதம்பரம், தங்கபாலு, தற்போது கேஎஸ் அழகிரி வரை யாராலும் கோஷ்டி பூசலை கட்டுப்படுத்த முடியாமல் போனது. மற்ற கட்சிகளில் பவர் பாலிடிக்ஸ் நடக்கும், ஆனால் காங்கிரஸைப் பொருத்தவரை அடிதடியே நடக்கும்.

கோஷ்டி மோதல்
கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் தற்போது வரை குறைந்தபட்சம் 50 அடிதடி சம்பவங்களையாவது பார்த்திருக்கும் அந்த வகையில் நேற்று நடைபெற்ற சம்பவம் 51 வது சம்பவமாக இருக்கும் என காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர். 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் செயல்பாடு குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

கட்சி அலுவலகத்தில் அடிதடி
இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் வருகை புரிந்தனர். அப்போது, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் ஆதரவாளர்கள், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமாரை நீக்கக்கோரி 300க்கும் மேற்பட்டவர்கள் கட்சி அலுவலகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

மண்டை உடைப்பு
இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கே.எஸ்.அழகிரி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாததால் போராட்டக்காரர்கள் கட்சி அலுவலகத்திற்கு முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தர்ணாவின் போது போராட்டக்காரர்கள் மாவட்ட தலைவர் கே பி கே ஜெயக்குமாரை உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும் என கண்டன முழக்கங்களை எழுப்பினர். மூன்று மணி நேரம் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் திடிரென கைகலப்பு ஏற்பட்டு தள்ளுமுள்ளுவாகி அடிதடியாக மாறியது.

கேஎஸ் அழகிரி பளார்
அப்போது கட்டையால் தாக்கி கொண்டதால் 3 பேர் ரத்தம் சொட்ட சொட்ட அழைத்து செல்லப்பட்டனர். தகவலறிந்து வந்த 100 -க்கும் மேற்பட்ட காவல்துறையினர் விரைந்து வந்து பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மோதல் அடிதடியாக மாறிய நிலையில் தன்னிடம் பேச வந்த தொண்டர்களை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி பளார் பளார் என அறைந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications