100வது நாளில் சிஎம் விஜய் சிக்சர்! பத்திரப்பதிவில் மெகா மாற்றம்! இனி கால்கடுக்க காத்திருக்க வேண்டாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பத்திர பதிவுத்துறையில் இன்று முதல் மிக முக்கிய மாற்றம் அமலுக்கு வருகிறது. அதாவது ஆகஸ்ட் 17ஆம் தேதியான இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய விதிமுறையின் படி வீடு, மனை விற்பனைக்கான பத்திரப்பதிவுகளை ஆன்லைன் முறையில் மட்டுமே பதிவு செய்ய முடியும் என பதிவுத்துறை தெரிவித்துள்ளது. 'ஸ்டார் 3.0' மென்பொருள் மூலம் வீடு, மனை வாங்குவோர் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் மற்றும் ரியல் எஸ்டேட் அலுவலகங்களில் இருந்தே பத்திர பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சார் பதிவாளர் அலுவலகங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இனி இருக்காது. முதல்வர் விஜய் பதவி ஏற்று நூறாவது நாளில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகமெங்கும் சுமார் 575-க்கும் மேற்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நிலம், வீடு உள்ளிட்ட சொத்து தொடர்பான ஆவணங்கள் மட்டுமல்லாமல், திருமணப் பதிவு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களும் பதிவு செய்யப்படுகின்றன.

Tamil Nadu Registration land sales

முன்பு வரை, ஆவண எழுத்தர்கள் மூலம் பத்திரங்கள் தயார் செய்யப்பட்டு, முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்திய பிறகு, சார்பதிவாளர் அலுவலகத்தில் நேரடியாக பதிவு செய்யப்படும் நடைமுறை இருந்து வந்தது.

தமிழக பத்திரப்பதிவுத்துறை

இந்த முறையில் ஆவணங்களை சரிபார்த்து பதிவு செய்ய அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டதால், பொதுமக்கள் பல மணி நேரம் அலுவலகங்களில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இந்த காலதாமதத்தை குறைக்கும் நோக்கில், பதிவுத்துறை படிப்படியாக ஆன்லைன் சேவைகளை அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில் 'ஸ்டார் 1.0' என்ற முறையில் எழுத்துப்பூர்வமாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப 'ஸ்டார் 2.0' என்ற இணைய அடிப்படையிலான மென்பொருள் கொண்டு வரப்பட்டது.

ஸ்டார் 3.0

தற்போது, அதனை மேலும் மேம்படுத்தி 'ஸ்டார் 3.0' என்ற புதிய மென்பொருள் நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் பத்திரப் பதிவு, வில்லங்கச் சான்று பெறுதல், பிரதி ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்வது போன்ற பல சேவைகள் ஆன்லைன் வழியாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வீடு, மனை வாங்குவோருக்கான பத்திரப்பதிவு நடைமுறையில் இன்று முதல் முக்கிய மாற்றம் அமலுக்கு வருகிறது. இன்று முதல் வீடு, மனை விற்பனைக்கான பத்திரங்களை ஆன்லைன் முறையில் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்பதிவாளர் அலுவலகம்

இனி கடந்த காலங்களைப் போல சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் சென்று பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக, வீடு அல்லது மணை வாங்குபவர்கள் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் அல்லது ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான வசதிகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே தங்கள் அலுவலகங்களில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

டிஜிட்டல் பத்திரப்பதிவு

இதுதொடர்பாக பதிவுத்துறை தலைவர் அருண் சுந்தர் தயாளன், கட்டுமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், புதிய திட்டங்களில் வீடு, மனை விற்பனை பத்திரங்களை, இன்று முதல் ஆன்லைன் முறையில் மட்டுமே பதிவு செய்ய முடியும். 'மேனுவல்' முறையில் சார் - பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது. இதன்படி வீடு, மனை வாங்குவோர், சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவன அலுவலகத்தில் இருந்தபடியே பத்திரப்பதிவு செய்யலாம். இதற்காக அந்த அலுவலகங்களில், குறிப்பிட்ட சில வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

பயோமெட்ரிக்

பத்திரப்பதிவுக்காக, 'வெப் கேமரா' வாயிலாக புகைப்படம் எடுக்கும் இடத்தில், பின்னணி திரை தெளிவாக, எவ்வித படங்களும் இன்றி இருக்க வேண்டும். பத்திரப்பதிவு செய்வோரை படம் பிடிப்பதற்கு ஏதுவாக, தரமான, 'வெப் கேமரா' இருக்க வேண்டும். சொத்து விற்பவர், வாங்குபவர் விரல் ரேகை மற்றும் 'பயோமெட்ரிக்' விபரங்களை பதிவு செய்ய, பதிவுத்துறை மென்பொருளுடன் ஒத்துப்போகக்கூடிய கருவியை அமைக்க வேண்டும்.

இணையதள சேவை

கருவிழி பதிவுக்கான கருவிகள் நவீன முறையில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். பத்திரப்பதிவு நடக்கும் இடத்தில், 100 எம்.பி.பி.எஸ்., வேகத்தில் இணையதள சேவை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பதிவுத்துறை இணையதளத்தில், 'லாக் இன்' எனப்படும் நுழைவு வசதியை முன்கூட்டியே ஏற்படுத்தி இருக்க வேண்டும். கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள், நிதி நிறுவனங்கள், வங்கிகள் ஆகியோர், இதற்கான வசதிகளை உரிய முறையில் ஏற்படுத்த வேண்டும். ஆன்லைன் பத்திரப்பதிவு வெற்றிகரமாக நடக்க, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+