மகளிருக்கான உரிமை தொகை ரூ.1000 எப்போது?..சபாநாயகர் அப்பாவு சொன்னது இதுதான்
சென்னை : மகளிருக்கான உரிமை தொகை வரும் ஆண்டில் நிச்சயம் வழங்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். திமுக அரசின் மிக முக்கியமான வாக்குறுதியாக உரிமைத் தொகை எப்போது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் 2023ஆம் ஆண்டில் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளார் சபாநாயகர் அப்பாவு.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 13வது உலகத் தமிழ் ஆசிரியர்கள் மாநாட்டினை சபாநாயகர் அப்பாவு மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தனர்.
3 நாட்கள் நடைபெறும் மாநாட்டின் தொடக்க விழாவான நேற்று கரகாட்டம், தெருக்கூத்து என தமிழரின் பண்பாடு சார்ந்த நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய சபாநாயகர் அப்பாவு தமிழ்நாட்டின் வருவாய் பெருக்கி திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்துவர் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு மகளிருக்கான உரிமை தொகை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

திமுக தேர்தல் அறிக்கை
திமுக தேர்தல் அறிக்கையில் மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை, நீட் தேர்வு ரத்து, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம், மகளிருக்கு உரிமைத் தொகை மாதம் ரூ.1000, முதியோர் ஓய்வூதியம் ரூ.1500, கல்வித் துறை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருதல் என குறிப்பிடத்தக்க வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மகளிர் உரிமைத் தொகை
மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை திட்டத்தை அரசு எப்போது அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு பெருமளவில் எழுந்துள்ளது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகும் நிலையில் உரிமைத் தொகை திட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் உரிய நேரத்தில் அறிவிப்பார் என்றும் அமைச்சர்கள் அவ்வப்போது கூறி வருகின்றனர்.

முதல்வர் கையெழுத்து
இந்த திட்டம் முதல் நாளே முதல்வரின் கையெழுத்துடன் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அந்த அறிவிப்பு வெளியாகவில்லை. கலைஞரின் பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி இந்தத் திட்டம் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அப்போதும் தொடங்கப்படவில்லை.

உரிமைத் தொகை எப்போது
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி இந்தியாவில் முதல்வருக ளுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தக்க தருனத்தில் அதனை அறிவிப்பார் என்று கடந்த மாதம் ஐ. பெரியசாமி கூறினார்.

மூன்று மாதங்களில் ரூ.1000
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், கடந்த ஆட்சியில் இருந்த அதிமுக கஜானாவை காலி செய்துவிட்டு சென்றுள்ளது. அதனால் இந்த அரசுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. உரிமை தொகை திட்டம் தாமதமாக அதுதான் காரணம். இந்த திட்டம் ஓரிரு மாதங்கள் மட்டுமே என்றால் நிறைவேற்றிவிடலாம். ஆனால், காலத்துக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்பதால் தாமதமாகிறது. இத்திட்டத்திற்கான கணக்கெடுப்பு நடந்து வருகிறது என்றும் இன்னும் மூன்று மாதங்களில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறினார்.

பொங்கல் அறிவிப்பாக வருமா?
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையின் சிறப்பு பரிசாக மகளிருக்கு உரிமைத் தொகையான ரூ.1000 ரூபாயை முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பார் என்று சொல்லாமல் சொல்லியுள்ளார் சபாநாயகர் அப்பாவு. லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மகளிரின் மனம் கவரும் அறிவிப்பை இந்த ஆண்டு வெளியிடுவாரா முதல்வர் ஸ்டாலின் பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications