தமிழ்நாட்டில் வேலையின்மை சதவீதம்! இந்தியாவில் எத்தனையாவது இடம் தெரியுமா? முதலிடத்தில் இந்த மாநிலமா?
சென்னை: NSO எனப்படும் தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் கணக்கெடுப்பு படி தமிழ்நாட்டின் வேலையின்மை விகிதம் 5.7 சதவீதமாக இருக்கிறது. 2025-ன் மூன்றாவது காலாண்டான ஜூலை -செப்டம்பர் கால புள்ளிவிவரத்தின் படி தேசிய அளவில் 11 வது இடத்தில் தமிழகம் இருக்கிறது. முதல் இடத்தில் எந்த மாநிலம் இருக்கிறது? வேலையின்மை சதவீதம் என்றால் என்ன? என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்
ஒவ்வொரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவற்றை எடை போடும் அளவுகோல்களில் முக்கியமானது வேலையின்மை விகிதம். வேலை செய்யத் தகுதியும் விருப்பமும் இருந்தும் வேலை கிடைக்காமல் இருப்பவர்களின் சதவீதமே இந்த வேலையின்மை விகிதமாகும்.
நாடு முழுவதும் இருப்பது போலவே, தமிழகத்திலும் இந்த விகிதம் ஒவ்வொரு காலாண்டிலும் உயர்வதும், குறைவதும் இயல்பாகவே இருக்கிறது. தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் (NSO) காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு (PLFS) அடிப்படையில் ஆண்டுக்கு நான்கு முறை இந்தத் தகவல்கள் வெளியிடப்படுகின்றன.

தமிழ்நாடு வேலையின்மை
அதன்படி, ஜூலை - செப்டம்பர் 2025 எனும் மூன்றாவது காலாண்டுக்கான புதிய புள்ளிவிவர அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், தமிழ்நாட்டின் வேலையின்மை விகிதம் 5.7% என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மாநிலங்களில் வேலையின்மை குறைவாக உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 11வது இடம் பிடித்துள்ளது. இது, நாட்டின் பெரிய தொழில்மயத்துக்கு ஏற்ற மாநிலமாக உள்ள தமிழகத்திற்கு இது ஒரு சீரான நிலை என நிபுணர்கள் கருதுகின்றனர்.
பீஎல்எப்எஸ் தரவு
இந்தியாவில் மிகக் குறைந்த வேலையின்மை விகிதம் கொண்ட மாநிலம் குஜராத். அங்கு இந்த விகிதம் வெறும் 2.2% தான். அதனைத் தொடர்ந்து கர்நாடகா 2.8% விகிதத்துடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இந்த பட்டியலைப் பார்க்கும்போது தென்னிந்திய மாநிலங்கள் இந்திய அளவில் பொருளாதார ரீதியாக உறுதியாக இருப்பதை வெளிப்படுத்துகிறது. தமிழ்நாட்டின் வேலையின்மை விகிதம் கடந்த காலாண்டில் (ஏப்ரல் - ஜூன் 2025) 5.9% ஆக இருந்தது. தற்போதைய காலாண்டில் அது 5.7% ஆக குறைந்துள்ளது. அதாவது, வேலை வாய்ப்புகள் மெதுவாக அதிகரித்து வருகிறது என்பதைக் காட்டுகிறது.
தமிழக வேலை வாய்ப்பு
ஆனால் கடந்த ஆண்டு இதே காலாண்டில் இருந்த விகிதத்துடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு வேலையின்மை சற்று உயர்ந்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது. இதற்கு நாட்டின் மொத்த பொருளாதார மந்தநிலை, IT துறை பணியாளர் குறைப்பு, சில தொழிற்சாலைகளின் உற்பத்தி குறைவு போன்ற காரணங்கள் காரணமாக இருக்கலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
வேலைவாய்ப்பு புள்ளிவிவரம்
வேலையின்மை விகிதத்தை குறைக்க தமிழக அரசு பல துறைகளில் கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி, தொழிற்சாலைகள் அமைக்க புதிய முதலீடுகள் ஈர்ப்பு, அரசு வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது, நான்முதல்வன் போன்ற திறன் மேம்பாட்டு திட்டங்கள், IT -எலக்ட்ரானிக்ஸ்- உற்பத்தி துறைகளில் புதிய நிறுவனங்களை வர வைப்பது போன்ற இந்த நடவடிக்கைகள் வேலையின்மை விகிதத்தை தொடர்ந்து குறையும் வாய்ப்பை உருவாக்கி வருகின்றன.
தமிழக பொருளாதாரம்
வேலையின்மை விகிதம் 0% ஆக இருந்தாலும் அது நல்லதல்ல என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். அதாவது, 0% வேலையின்மை என்பது யாரும் வேலையை மாற்ற விருப்பம் இல்லாத நிலையை குறிக்கும். இது பொருளாதாரத்தில் ஒரு மந்தநிலை அல்லது நின்று கிடக்கும் வளர்ச்சி எனக் கருதப்படும். அதனால், ஒரு மாநிலத்திற்கு 3% முதல் 5% வரை வேலையின்மை விகிதம் இருப்பது மிகவும் ஆரோக்கியமான பொருளாதார நிலையாகக் கருதப்படுகிறது. தமிழ்நாடு தொழில்மயமாக்கப்பட்ட மாநிலம் என்பதால், 5% சதவீதத்துக்குள் விகிதம் சீராக நிலைத்திருப்பது எதிர்கால வளர்ச்சிக்கு நல்ல சிக்னலாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications