Gold Loan: கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைகளை அடமானம் வைக்க போகிறீர்களா? விரைவில் குட் நியூஸ்
சென்னை: கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் தங்க நகைகளை அடமானம் வைத்து பெறப்படும் கடன் தொகையை உயர்த்த கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது. தற்போது ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ 8 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வரும் நிலையில் இனி ரூ 10 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஆலோசனை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் மொத்தம் 22,793 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. கூட்டுறவுச் சங்க பதிவாளரின் கட்டுப்பாட்டின் கீழ் மட்டும் 10,368 சங்கங்கள் உள்ளன. 1 மாநில தலைமை கூட்டுறவு வங்கி உள்ளது. தமிழகத்தில் 23 மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.

அது போல் 1,454 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிளைகள் உள்ளன. இந்த கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் தங்க நகைகளை அடமானம் வைத்தால் கடன் வழங்கப்படும். அதாவது ஒரு கிராம் தங்கம் ரூ 8 ஆயிரம் என மதிப்பிடப்பட்டு கடன் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும் நிலையில் இந்தக் கடன் தொகையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களால் தங்கம் விலை ஏழை மக்களால் வாங்க முடியாத நிலைக்குச் சென்றுவிட்டது. நேற்றைய தினம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ 1,19,600 ஆகும்.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விலையேறாமல் நேற்றைய விலைக்கே விற்கப்பட்டு வருகிறது. நாளை மார்க்கெட் திறந்தால் விலையேறுமா இல்லை விலை குறையுமா என தெரியவில்லை.
இதனால் தங்கத்தை அடமானம் வைத்து அதிகளவில் கடன் பெறும் நிலை உள்ளது. தேயமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் ஒரு கிராம் தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ 10 ஆயிரம் வரை கடன் வழங்கப்படுகிறது. இதனால் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் கூட்டுறவு நிறுவனங்களில் நகைக் கடனுக்கான தொகையை அதிகரிக்க முடிவு செய்துள்ளார்கள். இது தொடர்பாக வரும் வாரம் நடைபெறும் கூட்டுறவு துறை அதிகாரிகள் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என தெரிகிறது.
இந்த அறிவிப்பால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். இந்த கடன் தொகை அதிகரித்தால் மக்கள் குறைந்த எடையுள்ள நகைகளை அடமானம் வைத்தே அதிக கடனை பெறலாம்.
மருத்துவம், கல்விக் கட்டணம், விவசாய செலவுகள் மற்றும் அவசரக் குடும்பச் செலவுகளுக்கு பணம் தேவைப்படும் போது கூடுதல் பவுன் நகைகளை அடமானம் வைக்கத் தேவையில்லை, குறைந்தளவில் அடமானம் வைத்தாலே போதுமானது.
கூட்டுறவு வங்கிகளில் கடன் தொகை போதவில்லை என்பதால்தான் மக்கள் அதிக வட்டி வசூலிக்கும் தனியார் அடகு கடைகள், கந்து வட்டிக்காரர்களை தேடி செல்லும் நிலை உள்ளது. கூட்டுறவு வங்கிகளில் அதிக கடன் கிடைத்தால் அவர்கள் கந்து வட்டியால் பாதிக்கும் நிலை ஏற்படாது. சிறு வியாபாரிகள், சுயத் தொழில் செய்வோர் தங்கள் தொழிலை விரிவுப்படுத்த தினசரி முதலீடுகளுக்கும் கூடுதல் தொகையை எளிதாக கடனாக பெற முடியும்.


Click it and Unblock the Notifications
