சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரூ.250 கோடிக்கு பல்நோக்கு மருத்துவமனை.. மதுரை நூலகம்.. 6 முக்கிய திட்டங்களை அறிவித்த தமிழ்நாடு அரசு

Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு 6 முக்கிய திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

முன்னாள் தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்த நாளை திமுகவினரும், பொது மக்களும் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகிறார்கள். அவர் கொண்டு வந்த திட்டங்களை நினைவு கூர்ந்து, இணையத்தில் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு 6 முக்கிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருக்கிறது. சென்னை கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் பல்நோக்கு மருத்துவமனை தொடங்கி, திருவாரூர் மாவட்டத்தில் நெல் கிடங்கு உள்ளிட்ட திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கருணாநிதி பிறந்த நாள்: தலைநிமிர்ந்து வருகிறேன்-வாழ்த்துகள் சொல்வீர்களா தலைவரே?மு.க.ஸ்டாலின் உருக்கம்கருணாநிதி பிறந்த நாள்: தலைநிமிர்ந்து வருகிறேன்-வாழ்த்துகள் சொல்வீர்களா தலைவரே?மு.க.ஸ்டாலின் உருக்கம்

6 அறிவிப்புகள் என்ன?

தமிழக அரசு வெளியிட்டு இருக்கும் 6 அறிவிப்புகள் பின் வருமாறு,

1. தென் சென்னையில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும். சென்னைப் பெருநகரத்தில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில், 250 கோடி ரூபாய் செலவில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய, பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக அமைக்கப்படும்.

திருவாரூர் நெல்

திருவாரூர் நெல்


2. திருவாரூர் மாவட்டத்தின் நெல் உற்பத்தியினை கருத்தில் கொண்டும், விவசாய விளைபொருட்கள் மழை வெள்ள பாதிப்பினால் சேதமடைவதை தவிர்ப்பதற்கும் கிராமப்புற அளவில் கூடுதலாக கிடங்குகள் கட்டுமானம் செய்வது விவசாயிகளுக்கு பேருதவியாக அமையும். திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம், நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி மற்றும் வலங்கைமான் வட்டாரங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் காலியாக உள்ள இடங்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் இனங்கண்டு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களிலும் ரூபாய் 24 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் 16,000 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும்.
மேலும், அறுவடைக்கு பின் தானியம் மற்றும் பயறு வகைகளை சரியான முறையில் உலர வைக்காததால் ஏற்படும் இழப்பினை தவிர்க்க விவசாயிகள் நலன் கருதி திருவாரூர் மாவட்டத்தில் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் 10 வட்டாரங்களில் சூரிய ஒளியில் உலர்விக்கும் 50 களங்களும், கோட்டூர் மற்றும் வலங்கைமான் வட்டாரங்களில் ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் 2 மறுசுழற்சி தொகுப்பு உலர்விப்பான்களும், நீடாமங்கலம் மற்றும் மன்னார்குடி வட்டாரங்களில் ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் 2 தொடர் ஓட்ட உலர்விப்பான்களும் ஆகமொத்தம் ரூபாய் 6 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் மேற்கூறியவாறு 54 உலர்களம் மற்றும் உலர்விப்பான்கள் ஏற்படுத்தப்படும்.

மதுரையில் நூலகம்

மதுரையில் நூலகம்

3 சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில், இரண்டு இலட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடியவகையில், 70 கோடி ரூபாய் செலவில், கலைஞர் நினைவு நூலகம் ஒன்று அமைக்கப்படும். அண்ணா நூற்றாண்டு நூலகம் போல தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் வாழும் மக்களும், இத்தகைய அரிய வாய்ப்பினைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, இந்த நூலகம் அமைக்கப்படும்.

இலக்கிய மாமணி விருது

இலக்கிய மாமணி விருது

4. இயல், இசை, நாடகத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், "இலக்கிய மாமணி" என்ற விருது உருவாக்கப்பட்டு, தமிழின் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும். இவ்விருதாளர்களுக்கு பாராட்டுப் பத்திரம் மற்றும் ஐந்து இலட்சம் ரூபாய் ரொக்க பரிசும் வழங்கப்படும்.

வீடு வழங்கப்படும்

வீடு வழங்கப்படும்

5. தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும்.

திருநங்கைகளுக்கும் இலவச பயண சலுகை

திருநங்கைகளுக்கும் இலவச பயண சலுகை

6. மகளிர் நலன் கருதி இந்த அரசு பொறுப்பேற்ற அன்றே முதலமைச்சர் மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவச பயணச் சலுகையை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்கள். அதன் தொடர்ச்சியாக, மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கும் நகரப்புற அரசு பேருந்துகளில் இலவச பயண சலுகை வழங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். ஊரடங்கு காலம் விலக்கிக் கொள்ளப்பட்டவுடன் இந்த ஆணை நடைமுறைக்கு வரும், என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

English summary
Tamilnadu government announces 6 schemes including a multispeciality hospital in chennai on the birthday of late former CM Karunanidhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X