2015 டிசம்பரில் அப்படியொரு மழை.. 2022 ல் எப்படி? பழைய டேட்டாக்களை தூசி தட்டிய வெதர்மேன்.. என்னவாம்?
சென்னை: 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி 20 மணி நேரம் விடாமல் மழை பெய்தது குறித்து அந்த காலகட்டத்தில் பல இடங்களில் 40 செ.மீ. மழை அளவை தாண்டி பெய்தது குறித்தும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி 20 மணி நேரமாக விடாமல் மழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் 400 மி.மீ மழை பெய்தது.
மொபைல் போனில் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. அப்போது எனது போனில் பேட்டரியும் சில நிமிடங்களில் காலியாகும் சூழலில் நான் ஒரு முக்கிய அப்டேட்டை கொடுத்தேன்.
நடுவானில் சக்கரம்! புயலாகிறதா? வானிலையில் என்ன நடக்கும்? தமிழ்நாடு வெதர்மேன் தந்த 4 முக்கிய வார்னிங்

மழை சற்று குறையும்
அதுதான் மழை சற்று குறையும். நான் அன்று போட்ட இரு வரிகளின் பின்னால் முக்கியமான சம்பவங்கள் உள்ளன. 1976 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரே நாளில் 500 மி.மீ. மழை பெய்துள்ளது. அது போல் 1985 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரு நாட்களில் 600 மி.மீ. வெளுத்து வாங்கியது. 1996 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 நாட்களில் 700 மி.மீ மழை பெய்தது.

500 மி.மீ. மழை
2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரு நாட்களில் 500 மி.மீ. மழை பெய்தது. அது போல் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரே நாளில் 500 மி.மீ. மழை பெய்துள்ளது. இப்படி வரலாற்றுச் சிறப்புவாய்ந்த மழை பெய்துள்ள நிலையில் இந்த ஆண்டு மழை எப்படி இருக்கும் என கேள்விக்குறியோடு தமிழ்நாடு வெதர்மேன் போஸ்ட் போட்டுள்ளார்.

எதற்காக இந்த போஸ்ட்
அதாவது குறிப்பாக மேற்கண்ட ஆண்டுகளில் சராசரியாக 9 முதல் 11 ஆண்டுகள் வரை இடைவெளியில் இது போன்றதொரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மழை பெய்துள்ளது. எனவே 2015 க்கு பிறகு 8 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது எப்படி பெய்யும் என ரீதியில் வெதர்மேன் கேட்டுள்ளாரா என தெரியவில்லை. நெட்டிசன்களும் சென்னை பெருவெள்ளம் குறித்து தங்கள் அனுபவங்களை கூறியுள்ளனர். சிலர் 2015 போல் இந்த ஆண்டும் நடைபெறுமா என கேட்டுள்ளனர்.

டிசம்பர் 5 ஆம் தேதி வங்கக் கடலில் காற்றழுத்தம்
டிசம்பர் 5ஆம் தேதி வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தமிழகம்- புதுவை கடல் பகுதியில் நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே உருவான காற்றழுத்தம் புஸ்வானம் ஆகிவிட்ட நிலையில் தற்போது உருவாகும் காற்றழுத்தம் புயலாக மாறி அதிக அளவு மழையை தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை பெருவெள்ளம்
இன்று மாலை முதல் நாளை வரை மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்யும் போதெல்லாம் வானிலை மையத்திடமும் தனியார் வானிலை ஆய்வாளர்களிடமும் பொதுமக்கள் முன் வைக்கும் கேள்வி 2015 பெரு வெள்ளம் சென்னையில் ஏற்படுமா என்பதுதான். அந்த வகையில் ஒரே நாளில் அந்த ஆண்டு கொட்டித் தீர்த்த கனமழையின் போது செம்பரம்பாக்கம் ஏரி இரவோடு இரவாக திறந்துவிடப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் சென்னையே வெள்ளத்தில் தத்தளித்தது. கோடீஸ்வரர்கள் தங்கள் குழந்தைக்கு ஒரு பாட்டில் பால் வாங்க முடியாமல் சென்னை புறநகர் பகுதிகளில் தவித்த காட்சிகள் இன்னமும் கண் முன் நிழலாடுகின்றன.