’சுகம்’ நல்ல நேரம்..யாருக்குனு தான் தெரியல! திங்கள் 2 மணி..உச்சநீதிமன்றத்தில் விசாரணை! பரபர அதிமுக!
சென்னை : மிகுந்த எதிர்பார்ப்பு அரசியல் பரபரப்புகளுக்கு இடையே அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு வருகின்ற திங்கட்கிழமை மதியம் 2 மணிக்கு பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், அதிமுக ஓபிஎஸ்-இபிஎஸ் என இரு தரப்பினரும் மிகுந்த பரபரப்புடன் விசாரணையை எதிர்நோக்கி இருக்கின்றனர்.
நல்லாத்தான போய்கிட்டு இருக்கு! என்ற ரீதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக அதிமுகவில் இருந்த உட்கட்சி விவகாரம் கடந்த மாதம் திடீரென வெடித்துக் கிளம்பியது பொதுக்குழு கூட்டம் தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் எழுந்தது.
இதனை முதன் முதலில் பற்ற வைத்தவர் சாட்சாத் ஜெயக்குமார் தான் கட்சி அலுவலகத்திற்குள் பேசிய விவகாரத்தை பொதுவெளியில் போட்டு உடைக்க அதன் பிறகு ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் இடையே மோதல் வெடித்தது.

அதிமுக விவகாரம்
அன்றிலிருந்தே தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் என்ன செய்வது என்பது குறித்து யோசித்து வந்தார். இதே போல எடப்பாடி தரப்பிலும் ஆதரவு நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். நாளுக்கு நாள் இந்த விவகாரம் முற்றிய நிலையில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 16 இல் இருந்து 11ஆகவும் பிறகு வெறும் 6 என்ற எண்ணிக்கையாக குறைந்தது.

எடப்பாடி பழனிச்சாமி
கட்சியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு செல்வாக்கு இருப்பதை உணர்ந்த பல்வேறு நிர்வாகிகளும் அவர் பக்கம் தாவினர். இதையடுத்து கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தனித்தலைமை விவகாரம் தீர்ந்துவிடும் என நினைத்திருந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றத்தை நாடி பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதையடுத்து அவருக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர்களும் திரள ஆரம்பித்தனர். அது பொதுக்குழு கூட்டத்தில் வெளிப்படையாக வெடித்தது. மேலும் சொந்த கட்சி தொண்டர்களே தண்ணீர் பாட்டில்களை வீசியதாகவும் கூறப்படுகிறது.

பொதுக்குழு வழக்கு
இதற்கு அடுத்து நடந்த பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதோடு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதை அடுத்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது எனவும் அதிமுகவில் கடந்த ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலை இடிக்க வேண்டும் என ஆகஸ்ட் மாதத்தில் தீர்ப்பளித்தார்.

உச்சநீதிமன்றம்
இதை அடுத்து எடப்பாடி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பாக செப்டம்பர் மாதத்தில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற உயர் நீதிபதிகள் அமர்வு தனி நீதிபதி கொடுத்த தீர்ப்பை ரத்து செய்தது. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் ஓ பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில் உயர்நீதிமன்றத்தில் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் ஒரு உரிய உத்தரவை புதைக்க வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஷ்வரி தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இடைக்கால நிவாரணம்
கடந்த முறை விசாரணைக்கு வந்த போது அதிமுக பொது குழு வழக்கு விசாரணை நடந்தபோது பழனிச்சாமி தரப்பு என்னென்ன நிவாரணங்களை எதிர்பார்க்கிறீர்கள் என்பது குறித்து இடைக்கால மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் கால அவகாசம் கூறிய ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி உச்சநீதிமன்றத்தில் புதிய இடைக்காலம் ஒன்றினை தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் உள்ள அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது இதை அடுத்து தேர்தல் தேதி எப்போதும் வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்பதால் ஓபிஎஸ் இரட்டை இலை தொடர்பாக இடைவு செய்யக்கூடாது என உத்தரவிட கோரிக்கை விடுத்து இருந்தார்.

மீண்டும் விசாரணை
இதற்கு ஓபிஎஸ் தரப்பில் விளக்கம் என்று தனியாக தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் இரு தரப்பு விவாதங்கள் நடைபெற்றது. அப்போது பொதுக்குழு கூட்டப்பட்ட நடைமுறை மற்றும் தீர்மானங்கள் சட்ட விதிகளை மீறியது என ஓபிஎஸ் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இதனையடுத்து அதிமுக பொது குழு தொடர்பான வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். இந்த நிலையில் வருகின்ற ஜனவரி நான்காம் தேதி அதாவது திங்கட்கிழமை மதியம் 2 மணிக்கு இந்த வழக்கில் விசாரணையானது நடைபெற இருக்கிறது.

பரபரப்பு
இதற்கிடையே பாஜக ஆதரவு ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து இபிஎஸ் தரப்புக்கு மாறி உள்ள நிலையில் தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரும் என இரு தரப்புமே ஆர்வமாக எதிர்நோக்கி இருக்கின்றனர். அதே நேரத்தில் திங்கட்கிழமை நடைபெறுவது இறுதி விசாரணை இல்லை எனவும் இன்னும் சில நாட்கள் தீர்ப்பு தள்ளி போகலாம் எனவும் மற்றொரு தகவலும் உலாவுகிறது. எனவே வரும் ஜனவரி மாதம் அதிமுகவில் பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமே இருக்காது என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications