பிரபல தொழில் அதிபர் பி.எல்.எம். பிரேம்குமாரின் 103 கோடி சொத்துக்கள் முடக்கம்.. அமலாக்கத்துறை
சென்னை: பிஎல்எம் என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் லஜ்னா மல்டி ஸ்டேட் ஹவுசிங் கூட்டுறவு சங்கம் மற்றும் அதன் நிறுவனர் பிரேம்குமார் ஆகியோர் தொடர்புடைய வழக்கில், பொதுமக்களின் பணத்தை முறைகேடாகக் கையாடல் செய்து, அந்தப் பணத்தின் மூலம் தனிப்பட்ட மற்றும் குடும்பச் சொத்துகளை வாங்கி, சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, கடந்த நவம்பர் 4ஆம் தேதி அமலாக்கத்துறை கொச்சி மண்டல அதிகாரிகள் கேரளா மற்றும் சென்னையில் 12 இடங்களில் சோதனை நடத்தினர். பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 (PMLA) இன் கீழ் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்தச் சோதனையின்போது ரூ.103 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி உள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த 58 வயதாகும் பிரேம்குமார் தொழில் அதிபர் ஆவார். இவர் சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். பிரேம்குமார், கேரளா, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில், 155 கிளைகளுடன், ஆண்டுக்கு, 162 கோடி ரூபாய் வரவு, செலவு செய்யும், 'பாரத் லஜ்னா மல்டி ஸ்டேட் ஹவுசிங் கோ ஆப்ரேடிங்' என்ற கூட்டுறவு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.இவர் அந்த நிறுவனத்தில் கடந்த, 2006 - 2016 வரை, அதன் தலைவராக இருந்தார். இந்த கூட்டுறவு நிறுவனத்தில், 5,000 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்திருப்பதாகவும், இந்த பணம் பிரேம்குமாருக்கு சென்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகாரின் பேரில் கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியை சேர்ந்த, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அண்மையில் பிரேம்குமாரை சென்னையில் கைது செய்தனர். பின்னர் கேரளா மாநிலத்திற்கு அழைத்து சென்றனர். கேரள மாநில போலீசார் பிரேம்குமாரை கைது செய்து ஆஜர்படுத்தியபோது, அவரை சிறைக்கு அனுப்ப, நீதிமன்றம் மறுத்துவிட்டது. முறைகேடுகள் ஏதும் நிரூபிக்கப்படாத நிலையில், இச்சோதனை சட்ட விரோதமானது என்று மறுத்தது.

இந்த சூழலில் அவர் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட புகார் தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தனியாக விசாரித்து வருகின்றனர். அவர்கள், சென்னை அண்ணா நகரில் உள்ள, பிரேம்குமாரின் கூட்டுறவு நிறுவனத்தின் தலைமை அலுவலகம், சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள, அவரின் மற்றொரு அலுவலகம், விருகம்பாக்கத்தில் உள்ள வீடு, கேரளாவில், கோழிக்கோடு, கொச்சி, திருச்சூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அலுவலகம் என, 11 இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு பின்னர் பிஎல்எம் நிறுவனர் பிரேம்குமாரின் ரூ.103 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பாரத் லஜ்னா மல்டி ஸ்டேட் ஹவுசிங் கூட்டுறவு சங்கம் (BLMSHCS) மற்றும் அதன் நிறுவனர் ஆர். பிரேம்குமார் தொடர்பாக, பணமோசடி தடுப்புச் சட்டம், 2002-ன் கீழ் அமலாக்கத்துறையின் (ED) கொச்சி மண்டல அலுவலக அதிகாரிகள் 2026 நவம்பர் 4ஆம் தேதி 12 இடங்களில் சோதனை நடத்தினர்.
கேரளாவின் எர்ணாகுளம், கோழிக்கோடு, திருச்சூர், திருவனந்தபுரம், மூணாறு மற்றும் சென்னை ஆகிய இடங்களில் இந்தச் சோதனைகள் நடைபெற்றன. பாரத் லஜ்னா கூட்டுறவு சங்கத்துக்குச் சொந்தமான பொதுமக்களின் பணத்தை முறைகேடாகக் கையாடல் செய்து, அதன் மூலம் பிரேம்குமார் தனது பெயரிலும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களிலும் சொத்துகளை வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக இந்தச் சோதனைகள் நடந்தன.
போலீஸ் வழக்கின் அடிப்படையில் விசாரணை
பாரத் லஜ்னா கூட்டுறவு சங்கத்தின் நிறுவன உறுப்பினரும், அதன் தலைவருமான ஆர். பிரேம்குமார் மற்றும் சிலர் மீது கேரள காவல்துறை பதிவு செய்த எப்ஐஆர் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்கியது.
பொதுமக்களிடமிருந்து டெபாசிட்டாக வசூலிக்கப்பட்ட சங்கத்தின் பல கோடி ரூபாயை, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பிரேம்குமார் மாற்றியதாக முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் சொத்துகள் வாங்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், பாரத் லஜ்னா கூட்டுறவு சங்கத்துக்குச் சொந்தமான சொத்துகளை அடமானம் வைத்து, அதன் மூலம் பெறப்பட்ட நிதியைத் தனிப்பட்ட ஆதாயத்துக்கும், பிரேம்குமாரின் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் சொத்துகளை வாங்குவதற்கும் பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையின்படி, இந்த முறைகேட்டின் மூலம் உருவான குற்ற வருவாய் சுமார் ரூ.80 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
320 வங்கிக் கணக்குகள் மூலம் பணப் பரிமாற்றம்
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், பாரத் லஜ்னா கூட்டுறவு சங்கத்தின் நிதியைப் பல்வேறு கட்டங்களாகப் பரிமாற்றம் செய்து அதன் மூலத்தை மறைப்பதற்காக, பிரேம்குமார் மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் சுமார் 320 வங்கிக் கணக்குகளை இயக்கி வந்தது தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்த வங்கிக் கணக்குகளின் ஆய்வில், கூட்டுறவு சங்கத்தின் பொதுமக்கள் பணம் பிரேம்குமாரின் தனிப்பட்ட ஆதாயத்துக்காகவும், அவரது குடும்ப உறுப்பினர்கள் அல்லது அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களின் பெயர்களில் அசையும் மற்றும் அசையாச் சொத்துகளை வாங்குவதற்காகவும் திருப்பிவிடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், பாரத் லஜ்னா கூட்டுறவு சங்கத்துக்குச் சொந்தமான சொத்துகளை அடமானம் வைத்து நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறப்பட்டு, அந்தக் கடன் தொகையும் பிரேம்குமாரின் தனிப்பட்ட சொத்துகளை வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டிருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
பணத்தின் உண்மையான மூலத்தை மறைப்பதற்காக, பல்வேறு வங்கிக் கணக்குகள் வழியாகப் பணம் தொடர்ந்து பரிமாற்றம் செய்யப்பட்டு, அதன் தடயங்கள் மறைக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. வங்கிக் கணக்குகளின் ஆய்வில், பாரத் லஜ்னா கூட்டுறவு சங்கத்தின் நிதி பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதன் துல்லியமான தொகையைக் கணக்கிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ரூ.103 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம், பறிமுதல்
சோதனையின்போது, பிரேம்குமார் இன்றுவரை பாரத் லஜ்னா கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக விவகாரங்களைத் தீவிரமாகக் கட்டுப்படுத்தி வந்தது தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. சங்கத்தின் பல்வேறு சட்டப்பூர்வ ஆவணங்களிலும் அவர் கையெழுத்திட்டு வந்துள்ளார்.
ED, Kochi has conducted search operations across 12 premises on 04.11.2026 in Kerala and Chennai under the PMLA, 2002 in connection with Bharath Lajhna Multi State Housing Co-operative Society Ltd (BLMSHCS) and founder R. Premkumar over the misappropriation and laundering of public funds to acquire personal and family assets. During the search, assets worth Rs. 103 Crore were seized/frozen.
— ED (@dir_ed) November 5, 2026
சோதனையின்போது, பின்வரும் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது
- சொகுசு கார்கள்: போர்ஷே, ரோல்ஸ் ராய்ஸ், டொயோட்டா வெல்ஃபயர், மஹிந்திரா BE 6e, மெர்சிடிஸ் உள்ளிட்ட 8 உயர்தர சொகுசு கார்கள் - மதிப்பு சுமார் ரூ.7 கோடி.
- தங்க நகைகள்: 7,400 கிராம் எடையுள்ள தங்க நகைகள் - மதிப்பு சுமார் ரூ.9.6 கோடி.
- பங்குகள்: சுமார் ரூ.80 கோடி மதிப்பிலான பங்குகள்.
- அசையாச் சொத்துகள்: சுமார் ரூ.5 கோடி மதிப்பு.
- வங்கிக் கணக்குகளில் உள்ள இருப்புத் தொகை: சுமார் ரூ.1.86 கோடி.
இவ்வாறு மொத்தம் ரூ.103 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன அல்லது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் அமலாக்கத்துறையின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது." இவ்வாறு அமலாக்கத்துறை அறிக்கையில் கூறியுள்ளது.




Click it and Unblock the Notifications
