அடுத்த 2 மாதங்கள் சவாலானதாக இருக்கும்.. சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் கடிதம்
சென்னை : வடகிழக்கு பருவ மழை தொடங்கிவிட்ட நிலையில், மழையால் டெங்கு உள்ளிட் நோய்கள் அதிகம் பரவ வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் நோய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் தயாராக இருக்க வேண்டும் என்று தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிவிட்டது. அதனால், பருவச் சூழல் மாறிவிட்டது. வழக்கமாகப் பருவநிலை மாறும்போது, டெங்கு உள்ளிட்ட மக்களை அதிகம் பாதிக்கும் நோய்கள் பரவுவது இயல்பு.
கொரோனா தொற்று தற்போது தான் குறைந்துள்ளது. தடுப்பூசி போட்டதன் காரணமாக பெரிய பாதிப்பை தரவில்லை அதேநேரம் இன்னமும் பாதிப்பு இல்லாமல் இல்லை.

ஏடிஎஸ் கொசு
அதேநேரம் டெங்கு உள்ளிட்ட நோய்கள் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறன்றன, ஏடிஸ் பெண் கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. டெங்கு காய்ச்சலால் ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளாத நேரத்தில் உயிரிழப்பு அபாயம் ஏற்படும்.

குமட்டல்
கண் வலி ,குமட்டல், தலைவலி ,வாந்தி, எலும்பு வலி ,தடிப்புகள் ,அசாதாரண ரத்தப்போக்கு, மூட்டு வலி, சோர்வு உள்ளிட்டவை டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளாகும். டெங்கு வைரஸில் இருந்து தப்பிக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கொசுக்கள் உற்பத்தி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை நீக்கி விசாலமாக வீடு இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கடும் பாதிப்பு
இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு மட்டும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 1,36,422 பேர், பன்றிக் காய்ச்சலுக்கு உள்ளானவர்கள் 28,798 பேர் என்கிறது தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம். இந்த நிலையை தடுப்பது பெரும் சவாலாகவே அரசுக்கு உள்ளது. மழைக் காலத்தில் டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் தவிர, ஃபுளூ காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல், மஞ்சள் காமாலை, வாந்தி, வயிற்றுப்போக்கு, சீதபேதி எனப் பலதரப்பட்ட நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.

சுற்றுப்புறம் தூய்மை
மழைக்காலம் மற்றும் குளிர்காலத்தில் பருவ கால நோய்கள் அதிகம் பரவ வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. உடலையும் ,சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம் ஆகும்.

சுகாதார செயலாளர்
இந்நிலையில் தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று கடிதம் எழுதி உள்ளார். டெங்கு, மழை காலங்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த தயாராக இருக்க வேண்டும் என்றும சுகாதாரத் துறைக்கு அடுத்த 2 மாதங்கள் சவாலானதாக இருக்கும் என்றும் நோய் தடுப்பு பணிகளில் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications