“பறையா”என்பது இழிவு சொல்லா? புரட்சியின் அடையாளமா? அனல் பறக்கும் விவாதம்.. வன்னியரசு சொல்வது உண்மையா?
சென்னை : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சர்வதேச பறையா என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ள நிலையில், பறையர் என்றால் எதிர்ப்பின் அடையாளம் என விசிகவின் வன்னியரசு கூறியுள்ளார். உண்மையில் "பறையா" என்பது இழிவு சொல்லா? புரட்சியின் அடையாளமா..? என இணையத்தில் விவாதம் தொடங்கியுள்ளது.
சர்வதேச பறையா என்ற வார்த்தை உலக அளவில் பேசுபொருளாக இருக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பறையன் எனக் கூறி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
சண்டாளா... கேப்மாரி...நாதாரி... இந்த வார்த்தைகள் எல்லாம் இந்தியாவில் குறிப்பிட்ட ஒருசில மக்களின் சாதிப் பெயர்கள். இவற்றை நம்மில் சிலர் அறியாமல் சக மனிதர்களை இழிவாக பேசுவதற்கு பயன்படுத்துகிறார்கள், இதேபோன்றுதான் பறையா என்ற வார்த்தையும்.

சர்வதேச பறையா
இந்நிலையில் ஜோ பைடனின் பேச்சு குறித்து பேசிய விசிகவின் வன்னியரசு, இனி பறையா என்றால், எதிர்ப்பின் அடையாளம் எனவும், புரட்சியின் அடையாளம் எனவும் கூறியுள்ளார். மேலும் அவர், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை, சர்வதேசப் பறையா என இழிவுபடுத்தியிருந்தார் தற்போதைய பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி எனவும், அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிராக போராடிய சதாம் உசேனை புஷ் சர்வதேச பறையா என புஷ் கூறிதையும் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா அதிபர்
ஆனால், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை, சர்வதேசப் பறையா என இழிவுபடுத்தியிருந்தாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தின்போது, சுப்பிரமணியன் சுவாமி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டு அவர் தலைமறைவாக இருந்தார். சுவாமிக்கு முன்னதாக, ஈராக் அதிபர் சதாம் ஹுசேனை இழிபடுத்தும்விதமாக அவரை சர்வதேசப் பறையன் என அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ். அதன் தொடர்ச்சியாக, இன்றைக்கு ரஷ்ய அதிபர்.

மறைக்கும் ஆபத்து
இந்திய அரசியல் சட்டப்படி, பறையன் எனக் கூறி ஒருவரை இழிவுபடுத்துவது, தடை செய்யப்பட்டிருக்கிறது. அப்படியிருக்க, பறையன் என ஜோ பைடன் தற்போது கூறியிருப்பதை அனைவரும் கடுமையாக கண்டிக்க வேண்டும் என வாதங்கள் முன்வைக்கப்படுகிறது. இந்தியாவில் அந்த சொல் எப்படியான இழிவாக பயன்படுத்தப்படுகிறது என்பதையும் உலகளாவில் விவாதிக்க வேண்டும் எனவும், அதை விடுத்து, பறையர் என்றால் எதிர்ப்பின் அடையாளம். புரட்சியின் அடையாளம் ஆதிக்கத்திற்கு எதிரானது என பெருமை பேசுவது அச்சொல்லின் மூலமாகச் சுட்டப்படும் சாதிய இழிநிலையை மறைத்துவிடும் ஆபத்து இருப்பதை உணர வேண்டும் என பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ஏன் என கேள்வி?
உலக அளவில் பறையா என்ற சொல் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை. காரணம் அந்தச் சொல்லுக்கும் ஆங்கில பேசும் மக்களுக்கும் எந்தவிதமான நேரடி தொடர்பும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் இந்தியா போன்ற நாடுகளில் குறிப்பிட்ட மக்களை குறிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தும் போது அது உலக அளவில் வாழும் குறிப்பிட்ட சமூக மக்களை மனதளவில் பெரிதும் பாதிக்கும். எந்த இடங்களில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது என்பதே முக்கியம். சாதியை ஒழித்து சமுதாய ஒற்றுமையை வளர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துவரும் நிலையில் கற்றறிந்த பலரும் ஜோ பைடன் கூறுவது போல் பறையா என்ற வார்த்தை புரட்சியின் அடையாளம் என குறிப்பிடுவது ஏன் எனவும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications