சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

500 அநாதை சடலங்களுக்கு இறுதிச் சடங்கு.. 72 வயதில் ஊருக்கு உழைக்கும் புதுக்கோட்டை மருத்துவர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: பலர் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பே உடல்ரீதியாகச் சோர்ந்து போய்விடுவர். சிலருக்கு பணி ஓய்வுக்குப் பிறகுதான் வாழ்க்கை பிரகாசமாக ஜொலிக்க ஆரம்பிக்கும். அப்படியான ஒரு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பவர்தான் புதுக்கோட்டை மருத்துவர் ராமதாஸ்.

அரசு மருத்துவராகப் பணி செய்தபோது வீட்டுக்காக உழைத்த இவர் இன்று பணி ஓய்வுக்குப் பிறகு 72 வயதில் நாட்டுக்காக உழைக்கிறார். அதுவும் ஆள் அடையாளம் தெரியாமல் கிடக்கும் சடலங்களை தூக்கிச் சுமந்து போய் அடக்கம் செய்கிறார்.

பெற்ற பிள்ளைகளே தங்களால் முடியாது எனக் கைகழுவிடும் கடைசிக் காலத்தில் இந்த உதவியை டாக்டர் ராமதாஸ் செய்ய முன்வந்திருப்பது அரிதான காரியம். ஆகவே புதுக்கோட்டையைத் தாண்டி அவரது புகழ்க்கொடி உச்சத்தில் பறக்கிறது.

இப்படி அன்பு இதயம் கொண்ட டாக்டர் ராமதாஸ் எப்படி இந்தச் சேவை உலகத்திற்குள் வந்தார்? எந்தச் சம்பவம் அவரை உலுக்கியது? இதன் அடித்தளமாக அமைந்த நிகழ்வுதான் என்ன? இப்படிப் பல கேள்விகளுடன் 'சர்வஜித் மக்கள் சேவை அறக்கட்டளை'யின் தலைவரான ராமதாஸுடன் பேசினோம்.

அரசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் நியமனம்.. அவுட்சோர்ஸிங் வேண்டாம்: ராமதாஸ்அரசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் நியமனம்.. அவுட்சோர்ஸிங் வேண்டாம்: ராமதாஸ்

அப்பா ராணுவ வீரர்

அப்பா ராணுவ வீரர்

"எங்க அப்பா சஞ்சீவி பெரிய செல்வந்தர். ஆனால் ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் நாட்டுச் சுதந்திரத்திற்காக போராடியவர். ஆகவே இருந்த செல்வம் எல்லாம் கரைந்துவிட்டது. புதுக்கோட்டை முதல் எம்.பி. ஆன வரலாற்று நாயகர் வல்லத்தரசுவுடன் சேர்ந்து தேசத்திற்காக உழைத்தவர். பிறகு ராணுவ வீரராகச் சேவை செய்தார். அவர் வீட்டை விட்டு வடநாட்டுக்குப் போய்விட்டார்.

அவர் போனபிறகு அம்மாவுக்கு மனநிலை பாதித்துவிட்டது. நாங்கள் சிறுவயதில் சரியான வளர்ப்பு இல்லாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டோம். எனக்கு மூன்று தங்கைகள். சாப்பாட்டுக்கே பெரிய கஷ்டம்.

இளமையில் வறுமை

இளமையில் வறுமை

எனது பாட்டிதான் காய்கறி விற்று என்னை மருத்துவம் படிக்க வைத்தார். நான் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்தபோது காலையில் பல் விளக்க மாட்டேன். ஏனென்றால் பசிக்கும். மதிய ஒருவேளைதான் சாப்பாடு. இரவு ரொட்டித் துண்டு தான்" எனக் கூறும் டாக்டர் ராமதாஸுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் சுந்தர் புதுக்கோட்டையில் மருத்துவராகப் பணி புரிகிறார். இரண்டாவது மகன் பாலாஜி அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பணிபுரிகிறார். "நான் அரசு மருத்துவராக 1981இல் வேலைக்குச் சேர்ந்தேன். 2000 வரை வேலை பார்த்தேன். பிறகு விஆர்எஸ் வாங்கிக் கொண்டு பணியைவிட்டு விலகிவிட்டேன்.

மனதை உருக்கிய பத்திரிக்கை செய்தி

மனதை உருக்கிய பத்திரிக்கை செய்தி

ஒருநாள் என் மருத்துவமனைக்கு எதிரே கடைவைத்திருந்த மாற்றுத்திறனாளி ஒருவர் வாரப் பத்திரிகையில் வந்த செய்தியைக் கொண்டு வந்து என்னிடம் காட்டினார். அதில் ஒரு பெண்மணி சென்னையில் ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்வதாக செய்தி அச்சாகி இருந்தது.

அதேபோல் நாமும் செய்தால் என்ன? என்று அவர் கேட்டார். அப்படித்தான் 2008 இல் இந்தச் சேவையில் இறங்கினோம். அன்று தொடங்கிய சேவை இன்றுவரை தொடர்ந்து வருகிறது. காவல்துறை முறைப்படி அனுமதி கிடைத்த பிறகுதான் சடலங்களை அடக்கம் செய்கிறோம். ஆகவே இது சட்டப்படி முறையாக செய்யப்படும் சேவை" என்கிறார் ராமதாஸ்.

இதுவரை 500 சடலங்கள்

இதுவரை 500 சடலங்கள்

இவர்கள் சாலைகளில் கேட்பாரற்றுக் கிடக்கும் சடலங்கள், அரசு மருத்துவமனையில் பொய்யான முகவரி கொடுத்து நோயாளிகளைச் சேர்த்துவிட்டுத் தலைமறைவாகிவிடும் சடலங்களைப் பெற்று அடக்கம் செய்கிறார்கள். இதுவரை இதைப்போல 500 சடலங்களை முறைப்படி இறுதிக் காரியம் செய்து புதைத்துள்ளார்கள்.

"எங்களுக்கு கிடைக்கும் சடலங்கள் என்ன மதம்? என்ன சாதி? இவை யாவும் எங்களுக்குத் தெரியாது. நாங்கள் கிடைத்துள்ள சடலம் ஆணா? பெண்ணா என்று மட்டும்தான் பார்ப்போம். ஒரு மனிதனுக்கு இறுதிவரை நிரந்தரமாகக் கூடவே வரும் அடையாளங்கள் இவைதான்.

எங்களை பொறுத்தவரைப் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சடலமும் அநாதையாக இறுதிச் சடங்கு செய்ய முடியாமல் உள்ளது என்ற நிலைமை வரக்கூடாது. அதுவே எங்களின் இலட்சியம்" என்கிற ராமதாஸ் ஏழைப் பிள்ளைகளின் படிப்புக்காகவும் 'வள்ளலார் மாணவர் இல்லம்' என்ற அமைப்பு மூலம் பலருடன் இணைந்து உதவிகளை செய்து வருகிறார். இதில் 65 மாணவர்கள் தற்போது பயன்பெற்று வருகிறார்.

மனநிறைவு எப்படி?

மனநிறைவு எப்படி?

"நான் இருபது வருஷமா சம்பாதித்ததில் கிடைக்காத சந்தோஷம் இந்தச் சேவையில் கிடைத்திருக்கிறது. வறுமை பசி எனச் சிறுவயதைக் கடந்தவன். ஆகவேதான் நான் முன்னேறிய பிறகு மக்களுக்குச் சேவை செய்கிறேன்" என்கிறார் டாக்டர் ராமதாஸ்.

English summary
Pudukkottai based Dr. Ramadoss conduct funeral for destitute corpses through his foundation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X